Saturday, 15 May 2010

மனிதனும் இயல்புகளும்

நாகரிகம் அறிவியல் வளராத காலத்தில் மனிதனுக்கு எதிரிகள் சத்துருக்கள் என பல விலங்கினங்கள் காணப்பட்டன. அறிவியல் வளர்ச்சியோடு மனிதனே உலகின் பலம் பொருந்திய விலங்கு எனும் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மனிதன் எனும் விலங்கின் பலம் மூளை. இயற்கைக்கு ஏற்றாற்போல அன்று வாழ்ந்தவன் தனது தேவைக்கு ஏற்றாற்போல இன்றுஇயற்கையை மாற்றி அமைக்கிறான். மனிதனை விஞ்சிய ஒரு பலம்பொருந்திய இனம் இல்லை என்பதால் இயற்கைச் சமநிலையில் பல சிக்கல்கள். அனேகமாக விலங்கினங்களின் வளர்ச்சி உணவுச் சங்கிலி மூலமோ அல்லது ஒரு விலங்கின் எதிரி மூலமோ கட்டுப்படுத்தப்பட்டே உளது. உணவு வலை இயற்கையில் உயிர்ச் சமநிலை அடிப்படையில் பூமியில் உள்ள வளங்களுக்கு ஏற்ற வகையிலேயே உயிர்களின் வளர்ச்சி, தொடர்ந்து வாழல் என்பன தங்கியிருக்கின்றன. இங்கு கூற முனைவது டார்வினின் தக்கென பிழைத்தல் சார்ந்த ஒரு கருத்து. இன்றைய நிலையைப் பொறுத்தவரை மனிதன் சத்துருவான பின்னர் மனிதனின் மிகச் சிறிய எதிரி இயற்கையாகவே உளது. அவ்வப்போது இயற்கை அனர்த்தங்களால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு மிகப் பெரிய அழிக்க முடியாத எதிரி ஒன்றும் பூமிலேயே வாழ்கிறது. அது என்ன ???

மனிதன் மனிதன் மனிதன்
மனிதனுக்கு எதிரி மனிதனே. மனித இனம் தோற்றுவிக்கப் பட்டிருந்த காலத்திலிருந்து புள்ளிவிபரம் செய்யப்பட்டிருந்தால்  அகாலமாக மரணித்த மனித உயிர்கள் மனிதனாலேயே அழிக்கப்பட்டுள்ளன என்று அப்புள்ளிவிபரம் கூறியிருக்கும். மனிதன் மனிதனை அழிப்பதால் உயிர்ச் சமநிலை பேணப் படுகிறது. இவ் விலங்கினத்தை அழிக்க வேறு சக்தியில்லையேல் மனிதன் வாழ பூமி பற்றாக்குறையாகிவிடும். ஆக எங்களை நாங்களே அழித்துக்கொள்வது சரியென கூற முனையவில்லை. அத்தோடு மனித இனத்தை மனிதனே அழிப்பது எதோ ஒரு சமநிலையைப் பேணுவதற்கே என்று தெரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் இல்லை. ஏதோ ஒரு வகையில் வேறு மனித உயிர்கள் மீது கோபம் கொள்ளும் வகையில் மனித மனம் உருவாக்காகப் பட்டிருக்கிறது என்பது உண்மை. மனிதனின் பகுத்தறிவுக்கு நியாயம் என்று படும் விடயங்களுக்காக போராடி தம்மை தாமே அழித்துக் கொள்கிறான். உலகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்குரிய நியாயங்கள் அந்தத்ந்தக் குழுக்களுக்கு சரியாகவே இருக்கின்றன. பெரிதளவில் மனித இனம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை தாங்களே அழித்துக் கொள்வது இன ரீதியான நாடு ரீதியான போராட்டங்களின் மூலமே. போராட்டங்களுக்குரிய காரண காரியங்களை ஆராயும் போது போராடியே ஆக வேண்டிய நிலைமை எனும் வகையில் அறிவுக்குப் புலப்படக்கூடிய வகையிலேயே மனிதனின் சிந்தனை உருவாக்கப் பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.உலகம் ஆண்டவனால் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் இதற்குரிய விளக்கம் அல்லது நாஸ்திகர்கள் கூறும் விளக்கம் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே இருக்கும் என நினைக்கிறன். உலகை சமநிலையில் வைத்திருக்க இறைவன் கையாளும் வழி எனவும் மற்றோர் இயற்கைச் சமநிலையின் குணா இயல்பு போன்ற விளக்கங்களை தரலாம்.


.வேறு முறையில் அலசினால்

மனித இனம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு வரையறைகளை தனது வாழ்வின் எல்லைக் கோடாகக் கொண்டே வாழ்ந்துவருகிறது. குடும்பம், ஊர், சாதி, இனம், மதம், நாடு என்று அந்த வரையறைகளைப் பொறுத்து மனிதர்களோடு பழகும், உறவாடும், நட்புப் பாராட்டும், போராடும் விதம் வேறுபட்டு நிற்கிறது. எமது குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை வேறு குடும்பத்தால் வரும்போது மனம் கொதிக்கிறது. இவ்வாறே ஊர் இனம் மதம் நாடு போன்ற விடயங்களும். அன்பு நேசித்தல் எனும் மன இயல்பே போராடுதல் என்ற இயல்பையும் கட்டிஎளுப்புகிறது. எமது இனத்தை அதிகமாக நான் நேசிக்கிறேன். அப்போது வேறோர் இனத்தால் என் இனத்திற்கு நெருக்கடிகள் எனும்போது மனம் பதைபதைக்கிறது. நெருக்கடி கொடுப்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறது. இவ்வாறு நேசித்தல் எனும் இயல்பு போராடுவதற்கு ஏதுவாய் அமைகிறது என்பது கண்கூடு. ஆனால் அன்பு, நேசித்தல் இல்லையென்றால் தனது குடும்பத்தையே தான் அழித்துவிடுவான்.  அன்புதான் அழிக்கிறது அன்புதான் ஆள்கிறது. மேற்குறித்த பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படலாம் என்பது பதிவை வாசித்தவர்களுக்கான கேள்வியாக விடுகிறேன்.

எங்களை நாங்கள் அழிக்காமல் இருப்பது எவ்வாறு??
நன்றி.
3 comments:

mayakrishnan v said...

யோசிக்க வைத்த பதிவு. நன்றி நண்பரே!

majlishsusl said...

thanks it is good thinking diffrent approach.

பனையூரான் said...

thnx a lotmayakrishnan v, majlishsusl