Saturday 25 December 2010

இடைவெளியில் ......

திடீரென்று கடந்து விட்ட ஒன்றரை மாதங்கள் , இணையம் இல்லாத, நாட்டு நடப்பு அறியாத வெயிலையும் வியர்வையையும் நேசிக்க ஆரம்பித்திருக்கின்ற பணத்திற்கான போராட்டங்கள். ஒன்றை இழந்துதான் ஒன்று பெறப் படுகிறது என்பது நன்றாக விளங்குகிறது. சலித்துப் போதல் என்பதில் இழப்பதும் பெறுவதும் எம்மால் தீர்மானிக்கப் பட்டவையாய். வித்தியாசமான வாழ்க்கை. எதிர்காலத்தை திட்டமிட போதாமலிருக்கிற நேரங்கள். தொலைபேசியில் மாத்திரம் தமிழில் பேசக்கூடிய சூழல். தனிப்பட்ட விடயங்களில்  எதையுமே ஏற்றுக் கொள்ளல் இனம் புரியாத மனச் சம நிலையை உருவாக்கிவிடுகிறது. 

அதிகாலை நித்திரை முழிப்பு ,  தொடர்ச்சியான பல Good mornings,  தேநீர் , மதியஉணவு, பயணங்கள், வாக்குவாதங்கள், விடைபெறுகை இப்படியாக வாழக்கை எனும் நடைமுறை ...........

அண்மையில் கிடைத்த ஒரு தோழியின் உண்மையான நட்பு, அவளோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவதில் உள்ள திருப்தி. உன்னோடு பேசுவதில் கனதியற்றுப்  போயிருக்கிற மனம். 
.............................................................................

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது வாழ்க்கை பற்றி , சில வேளை அட இது நான்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலியென நேசித்த உறவு என்னை நேசிக்க முடியாமைக்கு சொன்ன விளக்கத்தை மனம் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது. அந்த உறவை நட்பாக   தொடர்வதற்கு  மனம் எந்த வித சலனமுமின்றி சம்மதம் தெரிவித்தது  என்னைப் பற்றிய ஆச்சரியங்களை அதிகரிக்க செய்திருக்கிறது. இனி காதல் புலம்பல் பதிவுகளை எழுதுவேனோ என்பது சந்தேகமாய்த்தான் இருக்கிறது.
..........................................................................
ஊருக்கு வரும்போது இருக்கும் சிலிர்ப்பு குறைந்து போயிருக்கிறது. சில பாடல்களை கேட்கும்போது இடதுபக்க மேல் தலையில் ஏற்படும் விறைத்தது  போன்ற உணர்வு இப்போது இல்லை. சடமாகிக்  கொண்டிருக்கிறேனோ என்ற பயம் ஒரு பக்கத்தில்.
..........................................................................
கப்பல் என்ன பிளான்? என ஊரில் சுகம் விசாரிக்கும் நட்புகள், பேசி பேசி தீராத விடயங்கள், கால்களுக்கு ஒய்வு தரும் கனகற்ற  கோயிலடி மண்டபம். கடவுள் பற்றி தீராத விவாதங்கள். இரவில் ஊரில் தேவையாய் இருக்கிற போதை. இதை விட plate வேலை வரை நிறைவேறியிருக்கிற எங்கட தும்பளை மேற்கு சனசமூக நிலையக் கட்டடம்.எங்களால்  முடியும் என்று பிறந்திருக்கிற உற்சாகம். 
.......................................................................
வெறுமையை உணரக் கூடியதாயிருக்கிற நாட்கள். வெறுமை அதென்ன வெறுமை ??? உணராதவரை இதற்குரிய விளக்கம் என்னிடம் இல்லை . வார்த்தைகளால் எல்லாவற்றையும் விவரிக்க முடிவதில்லை. ஆனால் தமிழன் கறுப்பி சொல்வது போல வார்த்தைகளால்தான் பெரும் பகுதி வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறோம்.
........................................................................ 
சம்பாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கு பணமில்லை மனிதர்கள்.......