Tuesday 13 October 2009

அப்ப வரட்டே.

...................................................................................
இடத்தை பிடிக்கோணும்
இல்லாட்டி கீழை இருந்துதான்
தீபாவளி எண்டபடியால் நல்ல சனம் என்ன ?????
ஏறடா ஏறடா ரெஜின் ..........
ரகு எங்கை நிக்கிறாய் ????
இஞ்சி கடைசிப் பெட்டிக்கு கிட்டகெதியா வாடா ....
சுரேஷ் எங்கடா ??
ஆரோடையோ போனில கதைக்கிறாண்டா .
சனியன் திருந்தாது .
சரி சரி வந்திட்டன் வந்திட்டன்.
பராஜ் ஆக்களுக்கு சீற் கிடைக்கல்லை....
ஆடிக் கொண்டு நிண்டவங்கள்
கீழை இருந்து வரட்டும் .......மதி
எங்க போனாலும் சிலோதாண்டா அவன் ... கஜன்
குமணன் வந்தால் ஆருக்கும் சீர்கிடைக்காமல் போகும் ...
பிந்தி ஏறீற்று பராஜ் சொன்ன நியாயம்.
......
.................
...............
.................................................................................
என்ன அப்பிடிப் பாக்கிறீங்கள் ? வேறை ஒண்டும் இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு (யாழ்ப்பாணம்) செல்கிறேன் . இதன் காரணமாக பதிவுலகத்தை விட்டு ஒருமாதம் தூரத்தில் இருக்கப் போகிறேன்.
சரி போட்டுவாறன் எல்லாருக்கும். வந்து சந்திக்கிறன் . அப்ப வரட்டே ........

Saturday 10 October 2009

ஏமாற்றினால்.....

அண்மையில் எனது தொலைபேசி இலக்கத்தை மாற்றினேன்.இந்தப் புது இலக்கம் மூலம் ஏமாற்றும் ஒரு படலத்தை எமது மட்ட தோழர்கள் எல்லோருமாக சேர்ந்து அரங்கேற்றினோம். பல்கலைக்கழகத்தின் எமது நட்புவட்டம் இதில் சிக்கி சின்னாபின்னமானது. ஒவ்வொருவரைப் பற்றியும் நன்கு தெரியும் என்பதால் அவர்களுடைய தற்போதைய தேவையைப் பொறுத்து ஏமாற்றினோம். தொலைபேசியில் உரையாடி அதனை பதிவு செய்து (record) கொண்டு மீண்டும் மீண்டும் கேட்டு அந்த உரையாடல்களை ரசித்ததில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள் இதில் சிக்கியவர்கள் எப்படியும் ஒரு முப்பது பேரிலும் கூட.
பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியேறிய சகோதரர்களை ஏமாற்ற வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தை பலத்த அளவில் கையாண்டோம். தனியார் நிறுவனங்களில் இவர்கள் ஏற்கெனவே பயிற்சிக் காலத்தில் (Trainig period) பணிபுரிந்ததாலும் இவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் வெளியே செல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்ததாலும் எங்களை நம்பி விட்டார்கள். நீண்ட நாட்கள் எம்முடன் பழகியிருந்தாலும் அவர்களோடு தாய்மொழியில் உரையாடாததால் அடையாளம் காண முடியாது போனது.
மேலும் சிலருடனான உரையாடல்கள் இவ்வாறான சொந்தத் தேவைகள் என்று இல்லாமல் வெறும் நகைச்சுவை சார்ந்ததாக போனது. இப்படியான தொலைபேசி ஏமாற்று நிகழ்வுகள் என்பது ஒரு சாதாரணமான விடயம்தான் ஆனால் பலர் இதில் மாட்டிக்கொண்டது எங்களுக்கு எதோ சாதித்தது போன்ற உணர்வைத் தோற்றியிருந்தது . பைத்தியம் பிடித்தவர்கள் போல இதே வேலையானோம். study leave காலம் என்பதாலும் எல்லோரும் விடுதிகளில் தங்கியிருந்தே படிப்பதால் யாருக்கும் போர் அடித்தால் மச்சான் "வாடா ஆருக்கும் ஆத்தல் குடுப்பம் " என ஒன்று சேர்ந்து கலாய்த்தோம். என்னதான் ஏமாற்றினாலும் சொந்தத் தேவை விடயத்தில் ஏமாற்றப்பட்டோருக்கு உண்மையைக் கூறினோம். சிலர் ஊகித்துக்கொன்டார்கள். அத்தோடு உரையாடல் பதிவுகளும் (Recodings) சூப்பர் ஹிட்ஸ் ஆனது. கொஞ்ச நாட்களுக்குப் பின் எல்லோருக்கும் எங்களுடைய வேலை பற்றி தெரிய வந்ததால் நிறுத்திக்கொண்டோம்.
சிறிது நாட்களின் பின் ............
அனேகமாக நானே இந்த உரையாடல்களில் கலந்து கொண்டதால் எதோ ஒரு குற்ற உணர்வு போன்ற ஒரு தோற்றப்பாடு. ஏமாற்றப்பட்டோரிடமிருந்து தூரமாகிவிடுவோமோ என்ற யோசனை மனதை உறுத்தியது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் " உங்களில சரியான கோபம் எந்த விடயத்தில விளையாடுறது என்று ஒரு கணக்கில்லையோ " எனக் கேட்டது என்னவோ போலானது. இவ்வாறு வெளியில் உண்மையைக் கூறாது எத்தனை பேரின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறேனோ தெரியவில்லை என்ற யோசனை அடிக்கடி வந்து போகிறது. தனிமைப் பட்டது போன்ற ஒரு உணர்வு
பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளும் சிறந்த விடயங்களில் முதலாவது நட்பு. இவ்வளவு காலம் இருந்துவிட்டு இறுதிக் காலத்தில் அந்த இனிய நட்பு வட்டத்தில் அநேகமானோரிடமிருந்து அப்பாற்பட்டு விடுவோமோ என்ற பயம் ஆட்கொண்டிருக்கிறது.
நகைச்சுவை, நகைச்சுவைக்காக ஏமாற்றுதல் என்பவற்றின் வரையறைகள், எல்லைக் கோடுகள் தெளிவாகப் புரிந்திருக்கின்றன பல உள்ளங்களை நோகடித்து.
ஒரு நகைச்சுவை ஆயிரம் பேரை சிரிக்கவைத்த போதும் ஒருவனை அழ வைக்கிறது என்றால் அது நகைச்சுவை என வரையறுக்கப்பட முடியாது.



நீ, நான், காதல் ????

மேல்வானம் பூப்படையும் மாலைவேளை ,
உனது சைக்கிளை தோழி வீட்டில் விட்டுவிட்டு
என்னோடு டபுள்ஸ் வரும் காதல் மீதான அக்கறை ,
என் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருக்கும் நீ,
நான் செய்யும் சில்மிஷங்களை எதிர்க்கின்ற வெட்கம் ,
கைகோர்த்து காலாறும் நகர சபைப்பூங்கா,
கொப்பரைக் கொண்டுவிட்டு ஒழித்த குளக்கட்டு,
"நம் காதலை வீட்டில் சொல்லப்போறன்" என
பீதியைக்கிளப்பும் உன் குறும்பு ,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தே
மௌனத்திலேயே கழிந்துவிட்ட பொழுதுகள் ,
இதிலே
எதுவுமே நடக்கவில்லை
இவையெல்லாம் கற்பனையிலும் கனவிலும்
வந்து போகும் எதிர்பார்ப்புக்களாய் போனாலும் .........................

உனக்கு சாப்பாடு பரிமாறியபோதில் இடம்பெற்ற முதல் உரையாடல்,
எங்கு போனாலும் உனது வீட்டடியால் அமைத்துக்கொண்ட என் பயணங்கள் ,
உன் அக்காவின் திருமணத்தில்
நான் நிற்கும் புகைப்படத்தில் நீயும் ஒருத்தியாய் ,
முடிவு கேட்டபோது நடந்தேறிய வினோதம்,
அதன் பின்னர் என்னை முறைத்த உன் பார்வை .

போன்ற நிஜங்களால் மனது நிம்மதியாய் ..........

உருகி உருகிக் காதலித்து நான் உருக்குலைந்து போகாவிட்டாலும்
சில நினைவுகள் கொஞ்சம் ஏக்கத்தைத்தர மறுக்கவில்லை.
நான் உன்னவன் என்று நீ எண்ணுமளவுக்கு எதுவுமே நடக்கவில்லை
அதே போல் நீ என்னவள் என்று சொல்லுமளவுக்கு
என்னுடைய சொத்தாகிப்போன வலைப்பதிவின்
கடவுச்சொல்லாய் உன்பெயர் .............

Tuesday 6 October 2009

சக்தி SUPERSTAR SEASON 3 ஒரு பார்வை

மீண்டும் சக்தி குழுமத்தின் நல்ல முயற்சி. இலங்கையின் இளம்பாடகருக்கு முடி சூட்டும் விழா. சிறப்பாக நடைபெற்று முடிந்த season 1, season 2வைத் தொடர்ந்து season 3 விமரிசையாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது . தொலைக் காட்சியில் பார்க்க சந்தர்ப்பங்கள் இல்லாமையால் வானொலியில்தான் கேட்டுவருகிறேன்.சில விடயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் சில விடயங்கள் என் இப்படி? என்ற ஆதங்கத்தையும் தருகிறது.
முதலாம் இரண்டாம் சுற்றுக்கள் .......
10 000 பேர் கொண்ட முதலாவது சுற்றிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றிற்கு அனுப்பப்பட்டு மூன்றாம் சுற்று 100 பேராக சுருக்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது.முதலாம் இரண்டாம் சுற்றுகளில் தேர்வாகாத போட்டியாளர்களில் மாற்றக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டோரின் கருத்துக்களையும் ஒலி, ஓளி பரப்பி நிகழ்ச்சியை பார்க்காமல் கேட்காமல் இருந்தவர்களையும் பார்க்க வைக்க சக்தி நல்ல யுக்தியைக் கையாண்டது. நடுவர்களை கடுமையாக சாடினார்கள் அந்தப் போட்டியாளர்கள். ஒரு ரசிகனாக போட்டியை ரசித்ததில் நடுவர்கள் எந்தப் பிழையான தீர்ப்பையும் வழங்கியதாக எனக்குத் தோன்றவில்லை.பாடகர்களை அவர்கள் தெரிவு செய்யும் விதமும் கூறிய அறிவுரைகளும் அவர்களின் திறமையையும் நல்ல நடுநிலைமையையும் உணர்த்தியது. தேர்வாகாத போட்டியாளர்கள் சிலபேரின் வார்த்தைகளில் காணப்பட்ட அமிலம் சற்றுக் கூச வைத்தது. இந்த வார்த்தைகளுக்கு சிலர் கைதட்டி உற்சாகமும் அளிக்கிறார்கள். பெண்களை நடுவர்கள் உடனே தெரிவு செய்கிறார்கள் என்ற விடயம் மாற்றுக்கருத்துடையோரின் கருத்துகளில் பெரும்பான்மையாகத் தொனித்தது. நன்றாகப் பாடிய எவரையும் நடுவர்கள் தேர்வு செய்யாது விட்டதாக ரசிகர்களாகிய எமக்கே புரிகிறது . ஆனால் போட்டியாளர்கள் ?????
நல்ல கலைஞனாக ஒருவன் உருவெடுக்க வேண்டுமெனின் சுய மதிப்பீடு என்ற விடயம் நன்றாக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் ஏற்காது என்பது இரண்டாம் பட்சம், முதலில் தன்னுடைய பிழைகளை மற்றவர்களைவிட முன்பதாக அடையாளம் காணப் பழகவேண்டும். இசை என்கிற உன்னத கலையை வெளிப்படுத்த வந்தவர்கள் நல்ல பண்புகள் இல்லாதவர்கள் ஆகின்றபோது அவர்களுடைய இசை கூட கணக்கில்லாமல் போய்விடும். கலைஞர்கள் புரிந்து கொள்ளுங்கள். நாகரிகத்தைப் பேணுங்கள். ஆனால் இந்த சிக்கல்கள் இனிவரும் சுற்றுக்களில் இடம் பெற சாத்தியகூறுகள் குறைவு போலத்தான் தெரிகிறது.

100 பேர் கொண்ட பிரமாண்டமான சுற்றில் .........
மூன்றாம் சுற்றில் பாடகர்கள் பின்னணி இசையோடு பாடல்களை பாடுகின்றனர். நண்பர்களோடு நிகழ்ச்சியைக் கேட்கின்றபோது "இந்தியாவில் என்ன மாதிரிப் பாடுறானுங்கள் இவங்கள் எங்கை ....." என்று அலுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு மோசமாகப் பாடுகிறார்களா இலங்கைக் கலைஞர்கள் ? ஏன் இந்தத் தோற்றப்பாடு??
நன்றாக அவதானித்தால் பாடகர்களில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. கோளாறு இருப்பது பின்னணி இசையில். கோளாறு என்பதற்காக அவர்கள் இசையைத் திறமையாக வழங்கவில்லை என கூறவில்லை. இசைக்கப்படும் பின்னணி இசை Original Backround Music ஐ ஒத்ததாக இல்லாதிருப்பதே இதற்குரிய காரணம் போல தோன்றுகிறது. இசைக்கு பொறுப்பானவர்கள் ரட்ணம் குழுவினர் என நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் அனைவரும் திறமையான கலைஞர்கள். வழங்கப்படும் பின்னணி இசை பாடகர்களின் சுருதி ,லயம் என்பவற்றைப் பேணுவதற்கு எனப் புரிகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டை எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அத்தோடு சில பாடல்களுக்கு வழங்கப்படும் தாள வாத்தியமாக பொருத்தமில்லாத வாத்தியங்களைப் பாவிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு தடவை " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை " பாடலுக்கு கொங்கோ ட்ரம்ஸ் தாள வாத்தியமாக ஒலித்தது ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையை ஏற்படுத்தியது.மேலும், வழமையாக இலங்கை இசைக் குழுக்களில் வீணையின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் தென்னிந்திய திரையிசையில் வீணை பல இடங்களில் கையாளப்படுகிறது. வீணையின் இசையை வேறு வாத்தியங்கள் மூலம் இசைக்க முற்படல் என்பது பனை மரத்தில் தேங்காய் பறிக்க நினைப்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. புல்லாங்குழல் வீணை போற வாத்தியங்களை பயன்படுத்துங்கள்.

அகவே இவ்வாறான சில விடயங்களை இசைக்குழுவினர் கருத்திற் கொண்டால் சக்தி SUPER STAR உலக அளவில நல்ல வரவேற்பைப் பெறலாம்

Saturday 3 October 2009

இலங்கை நில அளவைத் திணைக்களமும் தியத்தலாவைப் பயிற்சிக் காலமும்.



இலங்கை நில அளவைத் திணைக்களம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் . இலங்கையில் உள்ள பழம்பெரும் வேலைத் திணைக்களங்களில் ஒன்று. இத் திணைக்களத்தில் பணியாற்ற ஒரு அரசாங்க நில அளவையாளரை உருவாக்குவதற்கு தியத்தலாவையில் பயிற்சி நெறி உள்ளது . BDC எனப்படும் இந் நெறி இரண்டு வருட கற்கைக் காலத்தைக் கொண்டது. பௌதீக விஞ்ஞான (Phisical Science)கற்கையை பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்களை உள்வாங்கி இந்த பயிற்சி நெறி போதிக்கப் பட்டுவந்தது. மேலும் B.SC ( Surveying Science ISMD) எனும் பட்டப் படிப்பும் உள்ளது .(ISMD - Institute of Surveying and Mapping Thiyathalawa).

நில அளவைத் திணைக்களத்திற்கு இலங்கை சபரகமுவப் பல்கலைக் கழக பூகோள விஞ்ஞான பீடத்தில்( Faculty of Geomatics) B.SC (Surveying Science) நெறியை நிறைவு செய்த மாணவர்களும் உள்வாங்கப் படுகிறார்கள். பூகோள விஞ்ஞான பீடத்தில் இக் கற்கைநெறி நான்கு வருட காலத்தைக் கொண்டது. கற்கையை நிறைவு செய்து இறுதி மூன்று மாதங்களுக்கு மாணவர்கள் ஒரு நில அளவையாளராக தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பூகோள விஞ்ஞான பீடத்திலிருந்து வெளியேறுவோரை நில அளவைத் திணைக்களத்திற்கு வேலைக்கு அனுப்ப முன் தியத்தலாவையில் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி நெறி ஒன்று உள்ளது . திணைக்கள நடைமுறைகள் தனியார் நிறுவன நடைமுறைகளுடன் வேறுபடும் என்பதால் அப்பயிற்சி நெறி அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அங்கு பயிற்றப் படும் விடயங்கள் கேலிக் கூத்தாக உள்ளன.

திட்டப் படம் (plan) ஒன்றை கையால் வரையும் பயிற்சியை வழங்கி பட்டப் படிப்பு முடித்தோருக்கு ABCD எழுத கற்றுக் கொடுக்கிறார்கள். தொழில் நுட்ப கணணி வளர்ச்சியில் நில அளவைத்தினைக்களம் எத்தனையோ வருடங்கள் பின்னே நிற்கிறது. நில அளவைத் துறையை கற்காதவர்களுக்கே இவ்விடயம் சிரிப்பாக இருக்கும். எத்தனை மென்பொருள்கள் எத்தனை புதிய சிந்தனைகள் வளர்ச்சியடைந்த இக் காலத்தில் பாரம்பரிய முறைகளை பேண நினைப்பது எவ்வளவு மோட்டுத் தனமானது. நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்து திணைக்களத்தை நவீன மயப் படுத்தாவிடின் இலங்கையில் நில அளவையாளராக பணி புரிய யாருமே முன்வரமாட்டார்கள் .