Sunday, 31 October 2010

கடவுளைப் பிடிக்கும்

கடவுள் சம்பந்தமான விவாதங்கள் என்பது அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது இந்த நாட்களில். யாரையாவது வம்புக்கு இழுத்து எங்கட நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்வது ஏதோ அலாதி சுகம். ஆனால் இப்படியான குணங்கள் மூலம் பலரின் மனது புண்படுத்தப் படுவதும் பலரினுடைய வெறுப்பை சம்பாதிப்பதும் உண்மை. சமூகத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிடுபவர்கள் தங்களை அண்மித்த உறவுகளிடையே இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சிரமத்தையே எதிர் கொள்கிறார்கள். நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயலும்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. தான் முழுமையாக நம்பும் விடயத்தை ஒன்றும் இல்லை என கூற முனையும் போது கருத்துக்கள் பற்றிய நோக்குதலை விட அந்தக் கருத்தை சொல்பவர் பற்றி , அவரை ஒதுக்க வேண்டும் என்ற மன நிலையே அநேகமானோருக்கு உருவாகி விடுகிறது. உதாரணத்துக்கு என்னுடைய விடயத்தில், அம்மாவிடம் எனது நம்பிக்கையீனம் பற்றிக் கூறிய பின் அவரின் வேண்டுதல்கள், விரதங்கள் அதிகரித்திருக்கின்றன எனக்கு நம்பிக்கை வர வேண்டும் என்று.

ஆக எனக்குள் உள்ள இந்த நாத்திகம் சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பது புரிவதற்கு கொஞ்சக் காலம் எடுத்திருக்கிறது. இந்த தடவை விடுமுறையில் ஊருக்கு வந்த தமிழன் கறுப்பியோடு பல விடயங்களைக் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது எங்கட கருத்துக்கள். தனிப்பட்ட சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் விடுவதன் மூலம் அதிக மனிதர்களைச் சம்பாதிக்கலாம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த வலைப்பதிவு விதிவிலக்கே. என் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவள் என் மனைவி.

யாரவது நண்பர்கள், நண்பிகளுடன் பேசும்போது சிலர் "கடவுளே ....." என்று ஏதாவது விசயத்துக்கு பெருமூச்சு விடும்போது எனக்கு point கிடைத்துவிடும். ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடவுள் என்று சொல்லுவேன். ஏன் நம்பிக்கை இல்லையோ ? அப்பிடி என்ன பிரச்சினை என்று உரையாடல்கள் நீளும்.
சுயநலம்தான்  கடவுள் நம்பிக்கைஎன்று நான்கூற , யாருக்குமே கெடுதல் இல்லாத சுயநலம் நலம்தானே என அவன் கூற எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கும் போது உரையாடல்கள் தனிப்பட்ட தாக்கல்கள் இன்றி கருத்துசார் மோதல்கள் மூலம் அதி உச்சக் கட்டத்தை எட்டும்.  இப்படியான  கருத்துப் பகிர்தலில் என்னோடு கருத்தைப் பகிர்ந்து கொண்டு எந்த வித மனக் கோணல்களும் ஏற்படாத உறவுகள் இருக்கின்றன. சில வேளை   யோசிப்பதுண்டு அட கடவுள் என்ற ஒரு கோட்பாடு இல்லாவிட்டால் இவ்வாறெல்லாம் நாம் கதைகக் கூட முடியாதே  என்று.

மத்தியானம் சாப்பிட்டு வந்து எங்கட ஊரில இருக்கிற கோயில்  மண்டபத்தில படுக்கிறபோது கிடைக்கிற சுகத்தை அனுபவிப்பதற்காகவே விடுமுறையில் வீடு செல்ல நினைத்ததுண்டு.

என்னதான் நம்பிக்கை இல்லாவிட்டாலும்  சில இறை பாடல்கள் மனதை என்னவோ செய்கின்றன. அழகா குமரா பரவசமானேன் உன் பார்வையிலே நான் வசமானேன், ஆயர்பாடி மாளிகையில் போன்ற பாடல்கள். மடு தேவாலயத்திற்கு இந்த வருட உற்சவத்திற்கு செல்லக் கிடைத்தது நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த அமைதியான நேரத்திலே ஒலித்துக்  கொண்டிருந்த பாடல், A .R . ரஹ்மானின் இசையில் கார்த்திக் பாடிய சக்தி கொடு பாடலில் "உண்மையும் நீயே இறைவா "எனும் வரிகளில்  மனதில் ஏற்படும் நிறைவு, "அன்பென்ற மழையிலே" பாடலின் ரம்மியம், நாகூர் கனீபாவின் சில இஸ்லாமிய கீதங்கள்  தரும்  திருப்தி,ராஜேஷ் வைத்யாவின் வீணை பேசும் பக்திப் பாடல்கள் இவையெல்லாம் கடவுள் கோட்பாடு தந்த வரங்களே. 

சூரன் போர், திருவிழாக்களில் ஒன்று சேரும் ஓர் இளைஞர் கூட்டம். காணவே முடியாத சிலரை காண்பிக்கும் லூர்து மாதா தேவாலய கூடு சுத்தல் பெருநாள்,   வல்லிபுரக் கோவில் திருவிழாக்கள் , அடிபட்டு வாங்கிய கடலை அவல், கூடு சுத்தல், திருவிழாக்காலத்தில் தோன்றி மறையும் கண நேரக் காதல், நோன்பு திறக்கும் தருணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஷில் குடித்த கஞ்சி, அடித்த ஜோக்குகள், சம்பாதித்த நட்புகள், ஒவ்வொரு வருடமும் நத்தாருக்கு அமல்ராஜ் வீட்டுக்குப் போய் அடித்த அரட்டைகள், ஸகலானுடன் கடவுள் பற்றி தெளிவாக இடம் பெற்ற விவாதங்கள், பிரதி சொன்ன "கடவுள் = 0" கதை, நவராத்திரி பூசைக்கு தமிழ் பிள்ளைகள் எல்லோரையும் காணக் கூடிய பல்கலைக்கழக வாணி விழாக்கள்.  ஒருவரை அதி உச்சமாக வாழ்த்துவதற்கு பாவிக்கும் "God Bless U"
இப்படி எத்தனை எத்தனை.........
 இடைவேளை
....................................................................................................
பொர்ணமி தினத்திலே வெள்ளை உடையோடு பன்சலை செல்லும் சகோதர மொழி பேசும் பெண்கள். அதிலென்ன விசேசம் என்று கேட்கலாம். ஜோன்சன் சொன்ன கதைதான் ஞாபகம் வருது. "மச்சான் உன்ட ஆளை நீ எப்பாவாவது தனி வெள்ளை உடுப்போட பாத்தா வாழ்க்கையில அவளை உன்னால மறக்கவே முடியாதடா" அதுக்குப் பின்னர்தான் அந்த வெள்ளை உடை ஏனோ ........................................   ஆனாலும் என்னவளை நான் அவளை வெள்ளை உடையில் காணல்லை ஏனெண்டால் அவள் தமிழ் பேசும் ஊரில இருக்கிற பிள்ளையெல்லோ :)

நல்ல வேளை பார்க்கல்லை. கஷ்டப்படவேண்டியிருந்திருக்கும் மறப்பதற்கு.
..................................................................................

தொடர்கிறது .....
யார் மனதையும் புண்படுத்தாத மேலே குறிப்பிட்டது போன்ற   பல  சந்தோசங்களைக் கொடுத்ததனால்  அந்த இல்லாத கடவுளைக் கொஞ்சம் பிடிக்கும்.  கடவுள் இருக்கிறார் என நம்பியிருந்த நாட்களில் நடந்த அதிகமாக வையப் பட்ட கடவுள் இல்லை என்ற இந்த நாட்களில் என் மனதால் நேசிக்கப் படுகிறார்.

ஆக அந்த இல்லாத கடவுளை இப்ப கொஞ்சம் பிடிக்கும்.   நல்ல வேளை கடவுள்  இல்லை, இருந்திருந்தால் பிடிக்காமல் போயிருக்கும்.

விவாதம் வேண்டாமே :) 


Friday, 22 October 2010

உன்னை நீ இழக்கிறதுதான் மச்சி.................................

நீ யாரையும் காதலிக்கிறியா ???
ஓம் 
யாரை ?
ஒரு பிள்ளையைத்தான் 
கடுமையா .........   யார் அது ?
சொல்லேலாது.
ஏன் ?
அந்தப் பிள்ளை என்ட காதலை ஏற்றுக் கொள்ளல்லை.
ம். அப்ப நீ காதலிக்கிறாய் 
அதைத்தானே முதல்லையே சொன்னனான் 
காதல் எண்டா என்ன ?
காதலிக்கிறது.
அவ்வளவுதானா 
இல்லை 
அப்ப ?
இன்னும் இருக்கு 
என்ன?? 
உனக்கு என்ன பிரச்சினை?? 
காதலிக்கிறது சரியோ ?
இல்லை 
ஏன் 
ஒரு ஆளைக் காதலிச்சிட்டு அவள் என்னைக் காதலிக்கோணும் எண்டு நினைக்குறது பிழை தானே மச்சான் 
ம்
வேறை எந்த உறவிடமிருந்தும்  இப்படி எதிர்பார்க்கிறது இல்லைத்தானே.  பெரிய ஒரு சுயநலம் பிடிச்ச உறவுதான் காதல்.  
அப்ப காதல் என்பது ஒரு தப்பான உறவுதானே 
ஓம் ஆனாலும் நான் காதலிக்கிறன்.
ஒரு விஷயம் உனக்குப் பிழை என்று தெரிஞ்சும் நீ செய்யிறாய் அப்பிடித்தானே ?
ம் 
அப்ப உன்ட சுயத்தை நீ இழக்கிறாய்
ம்
மொத்தத்திலே உன்னை இழக்கிறாய் 
ஓம் 
உன்னை நீ இழக்கிறதுதான்    மச்சி காதல் 

  

Friday, 8 October 2010

Wrestling

Wrestling என அழைக்கப்படும் ஒரு விதமான சண்டை விளையாட்டை ரசித்தல் பலருடைய பொழுது போக்கு.  . இந்த பதிவில் சில காணொளி தொகுப்புகள் Wrestling பற்றி  ......................


எப்பிடித்தான் பண்ணுறாங்களோ......

                                                       


சும்மா தேடிப்பாருங்கோ youtube இல .............

Thursday, 7 October 2010

நகர மறுக்கும் நாட்கள்

குறைந்திருக்கின்ற வேலையில் அதிகரித்திருக்கிற சிந்தனை. எல்லையில்லாதது   சிந்தனை ஒன்றே. எதிர்காலத்தை பற்றிய சில விடயங்கள் வெறுமையாய் முன்னால்.     அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்ற பலரின் கேள்விகளுக்கு  பதிலளிக்க முடிவதில்லை இப்பொழுது. இன்று மட்டும் வாழ்ந்து எப்போதாவது நாளை பற்றி சிந்தித்து எடுக்கும் முடிவுகள் அநேகமாய் சிறப்பானதாய் இருந்தது. இன்று முழுவதும் நாளை  பற்றி சிந்தித்து சில வேளைகளில் இன்று வாழும்போது பல குழப்பங்கள். முடிவுகள் எட்டப் படுகிறது. . ஆனால் உடனேயே மாறிவிடுகிறது. தனிமையில் ஓய்வு தருவது கவலையை மட்டுமே . ஓய்வு தேவையில்லாத ஒரு சலுகை போலுள்ளது.பல விடயங்களில் பட்டுத் தெளிந்துவிட்டோம் என நினைத்தாலும் இன்னும் பட எவ்வளவோ இருக்கிறது என்ற நிஜம் அடிக்கடி முன்னால்.
...................................................................
நானும் காதலித்தேன் என்ற அளவுக்கு காதலை உணர்ந்திருக்கிறேன். இதை விட சொல்லுமளவுக்கு வர்ணிப்புகள் கவலைகள் இல்லை. சந்தோசத்தை சந்தோசமில்லாம சொல்லுவது கவலையை சிரிச்சுக் கொண்டு சொல்லுவது என்பது சுகம் என்றாலும் அது என் சார்ந்த விடயங்களுக்கு மாத்திரமே பொருத்தமானது என்பது உறைத்திருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட விடயம் அதற்கு மேலே குறிப்பிட்ட காதல் பற்றி இல்லை. உள்ளது உள்ளபடியே அங்கு சொல்லப் பட்டிருக்கிறது.
.................................................................

A..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது. இசையை இசையாக மாத்திரமே ரசிக்க வேண்டும் என வீரம் பேசும் என்னால் அதை நடைமுறைப் படுத்துவது கடினமாய் இருக்கிறது. சிற்சில பாடல்கள் கேட்கும் போது சிலிர்க்கின்ற தன்மை குறைந்து போயிருக்கிறது. 
...............................................................

சாதி, மத பிரிவினைகளை எதிர்ப்பவர்களால் இன பிரிவனையை எதிர்க்க முடிவதில்லை. என்ன காரணம் என்று புரிகிறது இல்லை. எனக்கும் கூட அதே நிலைமைதான். நான் இந்த மதத்தவன் இந்த சாதிக்காரன் எனபெருமை பேசுபவரை எதிர்க்கும் விமர்சனங்கள்  நான் இந்த இனத்தவன்  என்று கூறுபவர்களை எதிர்ப்பதில்லை. மற்றைய பாகுபாடுகளிலிருந்து இன ஒற்றுமை எவ்வாறு மேன்மை பெறுகிறது என்ற கேள்வி இன்னும்  இருந்து கொண்டே இருக்கிறது. நானும்  விதிவிலக்கில்லை. இனம் என்று என்னை தட்டியெழுப்ப ஒரு சிறு தூண்டல் போதுமாயிருக்கிறது. எதை நேசிக்கிறோமோ எதில் அதிகமான கவனம் செலுத்துகிறோமோ அதனாலேயே அழிகிறோம்     என்பது மாத்திரம் உண்மை. ஒவ்வொரு பாகுபாடும் மனிதனுக்கு அழிவையே தந்திருக்கிறது. அதே போல்தான் இந்த இன பாகுபாடும் என்று புரிகிறது. ஆக இது தட்டி எழுப்பப் பட வேண்டிய உணர்வு அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.
....................................................................................

யாருடனும் வாதிட்டு யார் மனதையும் புண்படுத்தவோ என்மீது வெறுப்பை தூண்டவோ செய்யக் கூடாது என உணர்ந்திருக்கிற கடவுள் பற்றிய விவாதங்கள்.
.......................................................................................
முடிவுகளுக்காக காத்திருப்பது வித்தியாசமான பயம் கலந்த உணர்வு. முடிவு அசாதகமாக வரும் என்பது உறுதியாகி அது எப்போது எப்படி இருக்கும் என்று காத்திருப்பது வாழ்க்கையில் பெரிய சகிப்புத் தன்மையை தந்துவிடுகிறது.சந்திப்போம்

Monday, 4 October 2010

SMS

என் ஆங்கிலம் கூட எனக்கு அழகானது
உனக்கு அனுப்பிய sms ஐ மீண்டும் பார்க்கும்போது
 ................................................

sms அனுப்பி அனுப்பி விரல் நோகோணும்
வந்த sms ஐ படிச்சு படிச்சுக் கண் நோகோணும்
இப்பிடியே எங்கட காதல் வளரோணும்
அப்பிடியே அப்பன்மாரின்ர காசும் கரையோணும்

 ...........................................................
வாய்ச்சொல் செல்லுபடியாவதில்லை
எதுவானாலும் எழுத்து மூலம் வேண்டும்
சட்ட பூர்வ விசயங்களில் ...........
உன்னோட வார்த்தையால பகிர முடியாத
எத்தனையோ விடயங்களை பகிர்ந்த  sms க்கு மனசில
ஒரு பெரிய இடம் ......................
எழுத்துக்கு மரியாதைதான்  போங்கள் ..
 ..................................................
என்னதான்  அனுப்பினாலும்
என்ன கோபமா? என இடைசுகம்  வரும்  sms இல்
அதிகமாய்  உணர்கிறேன் உன் காதலை 
 ...............................................

இப்பத்தான் நினைக்கிறன்
எங்களுக்கிடையில் நடந்த sms உரையாடலை வைத்து
பத்து பதிவே போட்டிருக்கலாம் எண்டு.
................................................sms பதிவு இப்பிடி குட்டியாத்தான் இருக்கோணும் 

Saturday, 2 October 2010

நில அளவையாளனின் காதல்

உன்னைக் காதலிக்க தொடங்கின போது prospection diagram 
போல  அழகாக சிக்கலில்லாம இருந்தாய்

நீ கிட்ட கிட்ட வரும்போது Topo surveying செய்வது போல
சின்ன சின்ன வித்தியாசங்கள்
prospection diagram போல இருக்காது field data 

சின்ன சின்ன பிரச்சினைகள்தான் வாழ்க்கையில் பிடிப்புகள் ஏற்படக்காரணம்
field இல ஏற்படுகிற பிரச்சினைகள்ளதான் எங்கட திறமை அதிகரிப்பதும்.

உன்னை பற்றி எழுதும் கவிதைகள்
paln வரைவதுபோல போல ஒரு பிரசவ உணர்வு .

என்னதான் இருந்தாலும் இரவில உன்ட புகைப்படத்தை பார்ப்பது
செய்த வேலையை plan ஆகப் பார்ப்பது போன்ற ஒரு திருப்தி.

சில வேளை உன்னோட கதைக்கைக்க சந்தோசம் சில வேளை கவலை
Level line close ஆகிறதும் ஆகாததும் மாதிரி
இருந்தாலும் நான் வீட்டை சொல்லுற மாதிரி உன்னட்ட பொய் சொல்லுறதில்லை
பல்கலைக் கழகத்தில் level line ஐ   களவு செய்து close ஆக்குவது போல

சில வேளை சில கேள்விகளுக்கு எப்பவுமே பதில் சொல்ல மாட்டாய்
நானும் காத்திருப்பன் பதில் வரும் வரும்எண்டு
சில கழன்று போன control points ஐ நாங்கள் தேடுவது போல

உன்னோட கதைச்சு கதைச்சு சில விடயங்களை ஊகிச்சிக் கொள்ளுவன்
ஆனால் சில வேளை அடுத்த நாள் நீ கதைப்பது நேற்றுக் கதைத்த்தற்கும் 
சம்பந்தம் இல்லாம இருக்கும்
இரண்டு control points இக்கு இடையில வைத்து  setout பண்ணின Road centre line 
அடுத்த இரண்டு points  க்கு    இடையில்  வைத்து  பாக்கிறபோது வாற   வித்தியாசம் மாதிரி

உன் அங்க அழகை  Road cross section க்கு ஒப்பிட்டு வர்ணித்து
உன்னைக் கேவலப் படுத்தமாட்டேன் .

ஒரு முறை வீதி  ஒன்று Surveying செய்யச் சொல்லி company ஆல அறிவித்தல்.
நானும் புளுகிப் புளுகி செய்து செய்து குடுத்தாப்  பிறகு
"பழைய surveying data காணமல் போயிட்டுது அதான் திருப்ப செய்யச் சொன்னோம்
உங்கட data தேவைப் படாது தொலைந்தது  கிடைச்சிட்டுது"
ஆரோ காதலிக்கும் உன்னைக்  காதலிச்சு
கடைசியில நீ அந்த உண்மையைச் சொன்னது  போல கிடந்தது .
 
 வெயில நிண்டதால் ஏற்பட்ட கறுப்பு 
அதனால கண்ணாடி பார்க்க ஏற்பட்ட வெறுப்பு 
ஆனாலும் என்னை பார்த்து நீ சொல்ல மாட்டய் மறுப்பு 
 இந்த நினைப்பு எப்பவும் எனக்கு இருக்கு.