Saturday, 25 December 2010

இடைவெளியில் ......

திடீரென்று கடந்து விட்ட ஒன்றரை மாதங்கள் , இணையம் இல்லாத, நாட்டு நடப்பு அறியாத வெயிலையும் வியர்வையையும் நேசிக்க ஆரம்பித்திருக்கின்ற பணத்திற்கான போராட்டங்கள். ஒன்றை இழந்துதான் ஒன்று பெறப் படுகிறது என்பது நன்றாக விளங்குகிறது. சலித்துப் போதல் என்பதில் இழப்பதும் பெறுவதும் எம்மால் தீர்மானிக்கப் பட்டவையாய். வித்தியாசமான வாழ்க்கை. எதிர்காலத்தை திட்டமிட போதாமலிருக்கிற நேரங்கள். தொலைபேசியில் மாத்திரம் தமிழில் பேசக்கூடிய சூழல். தனிப்பட்ட விடயங்களில்  எதையுமே ஏற்றுக் கொள்ளல் இனம் புரியாத மனச் சம நிலையை உருவாக்கிவிடுகிறது. 

அதிகாலை நித்திரை முழிப்பு ,  தொடர்ச்சியான பல Good mornings,  தேநீர் , மதியஉணவு, பயணங்கள், வாக்குவாதங்கள், விடைபெறுகை இப்படியாக வாழக்கை எனும் நடைமுறை ...........

அண்மையில் கிடைத்த ஒரு தோழியின் உண்மையான நட்பு, அவளோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவதில் உள்ள திருப்தி. உன்னோடு பேசுவதில் கனதியற்றுப்  போயிருக்கிற மனம். 
.............................................................................

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது வாழ்க்கை பற்றி , சில வேளை அட இது நான்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலியென நேசித்த உறவு என்னை நேசிக்க முடியாமைக்கு சொன்ன விளக்கத்தை மனம் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது. அந்த உறவை நட்பாக   தொடர்வதற்கு  மனம் எந்த வித சலனமுமின்றி சம்மதம் தெரிவித்தது  என்னைப் பற்றிய ஆச்சரியங்களை அதிகரிக்க செய்திருக்கிறது. இனி காதல் புலம்பல் பதிவுகளை எழுதுவேனோ என்பது சந்தேகமாய்த்தான் இருக்கிறது.
..........................................................................
ஊருக்கு வரும்போது இருக்கும் சிலிர்ப்பு குறைந்து போயிருக்கிறது. சில பாடல்களை கேட்கும்போது இடதுபக்க மேல் தலையில் ஏற்படும் விறைத்தது  போன்ற உணர்வு இப்போது இல்லை. சடமாகிக்  கொண்டிருக்கிறேனோ என்ற பயம் ஒரு பக்கத்தில்.
..........................................................................
கப்பல் என்ன பிளான்? என ஊரில் சுகம் விசாரிக்கும் நட்புகள், பேசி பேசி தீராத விடயங்கள், கால்களுக்கு ஒய்வு தரும் கனகற்ற  கோயிலடி மண்டபம். கடவுள் பற்றி தீராத விவாதங்கள். இரவில் ஊரில் தேவையாய் இருக்கிற போதை. இதை விட plate வேலை வரை நிறைவேறியிருக்கிற எங்கட தும்பளை மேற்கு சனசமூக நிலையக் கட்டடம்.எங்களால்  முடியும் என்று பிறந்திருக்கிற உற்சாகம். 
.......................................................................
வெறுமையை உணரக் கூடியதாயிருக்கிற நாட்கள். வெறுமை அதென்ன வெறுமை ??? உணராதவரை இதற்குரிய விளக்கம் என்னிடம் இல்லை . வார்த்தைகளால் எல்லாவற்றையும் விவரிக்க முடிவதில்லை. ஆனால் தமிழன் கறுப்பி சொல்வது போல வார்த்தைகளால்தான் பெரும் பகுதி வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறோம்.
........................................................................ 
சம்பாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கு பணமில்லை மனிதர்கள்.......
  

Friday, 5 November 2010

அவ்வப்போது அவசரத்தில்


உன்னுடைய நிழல் படங்களை சேகரிக்க நினைத்ததில்லை,
இன்னும் நீ என் காதலை ஏற்றுக் கொள்ளாத வரையில்.
ஏற்றுக் கொண்டால் அந்தப் படங்கள்தரும் சந்தோசத்தின் நீளம்
மறுத்தால் ஏற்படும் கவலையை விட எவ்வளவோ குட்டையானது.காதல் மேல் காதல் வந்து உன்னைக் காதலிக்கவில்லை
உன்னைக் காதலித்ததால் வந்ததுதான் காதல் மீதான காதல்அவசரமாக வாங்கிய தொப்பியில்
உன் பெயரின் முதலெழுத்து
நானாக உன்னை நினைத்தாலும்
சில வேலை எதேட்சையாகவும் நீ.....,
நீயாக நினைத்து நான் உன் நினைவில் வரமாட்டேன்
என்று நன்றாக தெரியும் ஆனால்
எதேட்சையாகவேனும் வருகிறேனா?????????
நண்பர்களை, வீட்டை பிரிந்திருக்கையில்
குறைந்திருக்கிற உன் நினைவுகள்
புரிகிறது என் காதலின் பலமின்மைநண்பர்களாய் இருப்போம் என்றாய்
வேண்டாம் அது உயரிய இடம்
பல படிகள் கீழே போய்
காதலர்களாகவே இருப்போமே என்கிறேன்
எங்கட காதலெல்லாம் பொய் மாதிரிக் கிடக்கு மச்சான்
அவனவன் காதலுக்காக செய்யிற கூத்துகளை
பார்க்கிறப்ப ............
இப்ப பார்
"நீ  காதலிக்காக எதுவும் செய்யல்லை
நான்  தோத்த காதலுக்காக எதுவும் செய்யல்லை "

                                                                                                                                                                            

Sunday, 31 October 2010

கடவுளைப் பிடிக்கும்

கடவுள் சம்பந்தமான விவாதங்கள் என்பது அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது இந்த நாட்களில். யாரையாவது வம்புக்கு இழுத்து எங்கட நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்வது ஏதோ அலாதி சுகம். ஆனால் இப்படியான குணங்கள் மூலம் பலரின் மனது புண்படுத்தப் படுவதும் பலரினுடைய வெறுப்பை சம்பாதிப்பதும் உண்மை. சமூகத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிடுபவர்கள் தங்களை அண்மித்த உறவுகளிடையே இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சிரமத்தையே எதிர் கொள்கிறார்கள். நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயலும்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. தான் முழுமையாக நம்பும் விடயத்தை ஒன்றும் இல்லை என கூற முனையும் போது கருத்துக்கள் பற்றிய நோக்குதலை விட அந்தக் கருத்தை சொல்பவர் பற்றி , அவரை ஒதுக்க வேண்டும் என்ற மன நிலையே அநேகமானோருக்கு உருவாகி விடுகிறது. உதாரணத்துக்கு என்னுடைய விடயத்தில், அம்மாவிடம் எனது நம்பிக்கையீனம் பற்றிக் கூறிய பின் அவரின் வேண்டுதல்கள், விரதங்கள் அதிகரித்திருக்கின்றன எனக்கு நம்பிக்கை வர வேண்டும் என்று.

ஆக எனக்குள் உள்ள இந்த நாத்திகம் சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பது புரிவதற்கு கொஞ்சக் காலம் எடுத்திருக்கிறது. இந்த தடவை விடுமுறையில் ஊருக்கு வந்த தமிழன் கறுப்பியோடு பல விடயங்களைக் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது எங்கட கருத்துக்கள். தனிப்பட்ட சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் விடுவதன் மூலம் அதிக மனிதர்களைச் சம்பாதிக்கலாம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த வலைப்பதிவு விதிவிலக்கே. என் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவள் என் மனைவி.

யாரவது நண்பர்கள், நண்பிகளுடன் பேசும்போது சிலர் "கடவுளே ....." என்று ஏதாவது விசயத்துக்கு பெருமூச்சு விடும்போது எனக்கு point கிடைத்துவிடும். ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடவுள் என்று சொல்லுவேன். ஏன் நம்பிக்கை இல்லையோ ? அப்பிடி என்ன பிரச்சினை என்று உரையாடல்கள் நீளும்.
சுயநலம்தான்  கடவுள் நம்பிக்கைஎன்று நான்கூற , யாருக்குமே கெடுதல் இல்லாத சுயநலம் நலம்தானே என அவன் கூற எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கும் போது உரையாடல்கள் தனிப்பட்ட தாக்கல்கள் இன்றி கருத்துசார் மோதல்கள் மூலம் அதி உச்சக் கட்டத்தை எட்டும்.  இப்படியான  கருத்துப் பகிர்தலில் என்னோடு கருத்தைப் பகிர்ந்து கொண்டு எந்த வித மனக் கோணல்களும் ஏற்படாத உறவுகள் இருக்கின்றன. சில வேளை   யோசிப்பதுண்டு அட கடவுள் என்ற ஒரு கோட்பாடு இல்லாவிட்டால் இவ்வாறெல்லாம் நாம் கதைகக் கூட முடியாதே  என்று.

மத்தியானம் சாப்பிட்டு வந்து எங்கட ஊரில இருக்கிற கோயில்  மண்டபத்தில படுக்கிறபோது கிடைக்கிற சுகத்தை அனுபவிப்பதற்காகவே விடுமுறையில் வீடு செல்ல நினைத்ததுண்டு.

என்னதான் நம்பிக்கை இல்லாவிட்டாலும்  சில இறை பாடல்கள் மனதை என்னவோ செய்கின்றன. அழகா குமரா பரவசமானேன் உன் பார்வையிலே நான் வசமானேன், ஆயர்பாடி மாளிகையில் போன்ற பாடல்கள். மடு தேவாலயத்திற்கு இந்த வருட உற்சவத்திற்கு செல்லக் கிடைத்தது நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த அமைதியான நேரத்திலே ஒலித்துக்  கொண்டிருந்த பாடல், A .R . ரஹ்மானின் இசையில் கார்த்திக் பாடிய சக்தி கொடு பாடலில் "உண்மையும் நீயே இறைவா "எனும் வரிகளில்  மனதில் ஏற்படும் நிறைவு, "அன்பென்ற மழையிலே" பாடலின் ரம்மியம், நாகூர் கனீபாவின் சில இஸ்லாமிய கீதங்கள்  தரும்  திருப்தி,ராஜேஷ் வைத்யாவின் வீணை பேசும் பக்திப் பாடல்கள் இவையெல்லாம் கடவுள் கோட்பாடு தந்த வரங்களே. 

சூரன் போர், திருவிழாக்களில் ஒன்று சேரும் ஓர் இளைஞர் கூட்டம். காணவே முடியாத சிலரை காண்பிக்கும் லூர்து மாதா தேவாலய கூடு சுத்தல் பெருநாள்,   வல்லிபுரக் கோவில் திருவிழாக்கள் , அடிபட்டு வாங்கிய கடலை அவல், கூடு சுத்தல், திருவிழாக்காலத்தில் தோன்றி மறையும் கண நேரக் காதல், நோன்பு திறக்கும் தருணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஷில் குடித்த கஞ்சி, அடித்த ஜோக்குகள், சம்பாதித்த நட்புகள், ஒவ்வொரு வருடமும் நத்தாருக்கு அமல்ராஜ் வீட்டுக்குப் போய் அடித்த அரட்டைகள், ஸகலானுடன் கடவுள் பற்றி தெளிவாக இடம் பெற்ற விவாதங்கள், பிரதி சொன்ன "கடவுள் = 0" கதை, நவராத்திரி பூசைக்கு தமிழ் பிள்ளைகள் எல்லோரையும் காணக் கூடிய பல்கலைக்கழக வாணி விழாக்கள்.  ஒருவரை அதி உச்சமாக வாழ்த்துவதற்கு பாவிக்கும் "God Bless U"
இப்படி எத்தனை எத்தனை.........
 இடைவேளை
....................................................................................................
பொர்ணமி தினத்திலே வெள்ளை உடையோடு பன்சலை செல்லும் சகோதர மொழி பேசும் பெண்கள். அதிலென்ன விசேசம் என்று கேட்கலாம். ஜோன்சன் சொன்ன கதைதான் ஞாபகம் வருது. "மச்சான் உன்ட ஆளை நீ எப்பாவாவது தனி வெள்ளை உடுப்போட பாத்தா வாழ்க்கையில அவளை உன்னால மறக்கவே முடியாதடா" அதுக்குப் பின்னர்தான் அந்த வெள்ளை உடை ஏனோ ........................................   ஆனாலும் என்னவளை நான் அவளை வெள்ளை உடையில் காணல்லை ஏனெண்டால் அவள் தமிழ் பேசும் ஊரில இருக்கிற பிள்ளையெல்லோ :)

நல்ல வேளை பார்க்கல்லை. கஷ்டப்படவேண்டியிருந்திருக்கும் மறப்பதற்கு.
..................................................................................

தொடர்கிறது .....
யார் மனதையும் புண்படுத்தாத மேலே குறிப்பிட்டது போன்ற   பல  சந்தோசங்களைக் கொடுத்ததனால்  அந்த இல்லாத கடவுளைக் கொஞ்சம் பிடிக்கும்.  கடவுள் இருக்கிறார் என நம்பியிருந்த நாட்களில் நடந்த அதிகமாக வையப் பட்ட கடவுள் இல்லை என்ற இந்த நாட்களில் என் மனதால் நேசிக்கப் படுகிறார்.

ஆக அந்த இல்லாத கடவுளை இப்ப கொஞ்சம் பிடிக்கும்.   நல்ல வேளை கடவுள்  இல்லை, இருந்திருந்தால் பிடிக்காமல் போயிருக்கும்.

விவாதம் வேண்டாமே :) 


Friday, 22 October 2010

உன்னை நீ இழக்கிறதுதான் மச்சி.................................

நீ யாரையும் காதலிக்கிறியா ???
ஓம் 
யாரை ?
ஒரு பிள்ளையைத்தான் 
கடுமையா .........   யார் அது ?
சொல்லேலாது.
ஏன் ?
அந்தப் பிள்ளை என்ட காதலை ஏற்றுக் கொள்ளல்லை.
ம். அப்ப நீ காதலிக்கிறாய் 
அதைத்தானே முதல்லையே சொன்னனான் 
காதல் எண்டா என்ன ?
காதலிக்கிறது.
அவ்வளவுதானா 
இல்லை 
அப்ப ?
இன்னும் இருக்கு 
என்ன?? 
உனக்கு என்ன பிரச்சினை?? 
காதலிக்கிறது சரியோ ?
இல்லை 
ஏன் 
ஒரு ஆளைக் காதலிச்சிட்டு அவள் என்னைக் காதலிக்கோணும் எண்டு நினைக்குறது பிழை தானே மச்சான் 
ம்
வேறை எந்த உறவிடமிருந்தும்  இப்படி எதிர்பார்க்கிறது இல்லைத்தானே.  பெரிய ஒரு சுயநலம் பிடிச்ச உறவுதான் காதல்.  
அப்ப காதல் என்பது ஒரு தப்பான உறவுதானே 
ஓம் ஆனாலும் நான் காதலிக்கிறன்.
ஒரு விஷயம் உனக்குப் பிழை என்று தெரிஞ்சும் நீ செய்யிறாய் அப்பிடித்தானே ?
ம் 
அப்ப உன்ட சுயத்தை நீ இழக்கிறாய்
ம்
மொத்தத்திலே உன்னை இழக்கிறாய் 
ஓம் 
உன்னை நீ இழக்கிறதுதான்    மச்சி காதல் 

  

Friday, 8 October 2010

Wrestling

Wrestling என அழைக்கப்படும் ஒரு விதமான சண்டை விளையாட்டை ரசித்தல் பலருடைய பொழுது போக்கு.  . இந்த பதிவில் சில காணொளி தொகுப்புகள் Wrestling பற்றி  ......................


எப்பிடித்தான் பண்ணுறாங்களோ......

                                                       


சும்மா தேடிப்பாருங்கோ youtube இல .............

Thursday, 7 October 2010

நகர மறுக்கும் நாட்கள்

குறைந்திருக்கின்ற வேலையில் அதிகரித்திருக்கிற சிந்தனை. எல்லையில்லாதது   சிந்தனை ஒன்றே. எதிர்காலத்தை பற்றிய சில விடயங்கள் வெறுமையாய் முன்னால்.     அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்ற பலரின் கேள்விகளுக்கு  பதிலளிக்க முடிவதில்லை இப்பொழுது. இன்று மட்டும் வாழ்ந்து எப்போதாவது நாளை பற்றி சிந்தித்து எடுக்கும் முடிவுகள் அநேகமாய் சிறப்பானதாய் இருந்தது. இன்று முழுவதும் நாளை  பற்றி சிந்தித்து சில வேளைகளில் இன்று வாழும்போது பல குழப்பங்கள். முடிவுகள் எட்டப் படுகிறது. . ஆனால் உடனேயே மாறிவிடுகிறது. தனிமையில் ஓய்வு தருவது கவலையை மட்டுமே . ஓய்வு தேவையில்லாத ஒரு சலுகை போலுள்ளது.பல விடயங்களில் பட்டுத் தெளிந்துவிட்டோம் என நினைத்தாலும் இன்னும் பட எவ்வளவோ இருக்கிறது என்ற நிஜம் அடிக்கடி முன்னால்.
...................................................................
நானும் காதலித்தேன் என்ற அளவுக்கு காதலை உணர்ந்திருக்கிறேன். இதை விட சொல்லுமளவுக்கு வர்ணிப்புகள் கவலைகள் இல்லை. சந்தோசத்தை சந்தோசமில்லாம சொல்லுவது கவலையை சிரிச்சுக் கொண்டு சொல்லுவது என்பது சுகம் என்றாலும் அது என் சார்ந்த விடயங்களுக்கு மாத்திரமே பொருத்தமானது என்பது உறைத்திருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட விடயம் அதற்கு மேலே குறிப்பிட்ட காதல் பற்றி இல்லை. உள்ளது உள்ளபடியே அங்கு சொல்லப் பட்டிருக்கிறது.
.................................................................

A..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது. இசையை இசையாக மாத்திரமே ரசிக்க வேண்டும் என வீரம் பேசும் என்னால் அதை நடைமுறைப் படுத்துவது கடினமாய் இருக்கிறது. சிற்சில பாடல்கள் கேட்கும் போது சிலிர்க்கின்ற தன்மை குறைந்து போயிருக்கிறது. 
...............................................................

சாதி, மத பிரிவினைகளை எதிர்ப்பவர்களால் இன பிரிவனையை எதிர்க்க முடிவதில்லை. என்ன காரணம் என்று புரிகிறது இல்லை. எனக்கும் கூட அதே நிலைமைதான். நான் இந்த மதத்தவன் இந்த சாதிக்காரன் எனபெருமை பேசுபவரை எதிர்க்கும் விமர்சனங்கள்  நான் இந்த இனத்தவன்  என்று கூறுபவர்களை எதிர்ப்பதில்லை. மற்றைய பாகுபாடுகளிலிருந்து இன ஒற்றுமை எவ்வாறு மேன்மை பெறுகிறது என்ற கேள்வி இன்னும்  இருந்து கொண்டே இருக்கிறது. நானும்  விதிவிலக்கில்லை. இனம் என்று என்னை தட்டியெழுப்ப ஒரு சிறு தூண்டல் போதுமாயிருக்கிறது. எதை நேசிக்கிறோமோ எதில் அதிகமான கவனம் செலுத்துகிறோமோ அதனாலேயே அழிகிறோம்     என்பது மாத்திரம் உண்மை. ஒவ்வொரு பாகுபாடும் மனிதனுக்கு அழிவையே தந்திருக்கிறது. அதே போல்தான் இந்த இன பாகுபாடும் என்று புரிகிறது. ஆக இது தட்டி எழுப்பப் பட வேண்டிய உணர்வு அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.
....................................................................................

யாருடனும் வாதிட்டு யார் மனதையும் புண்படுத்தவோ என்மீது வெறுப்பை தூண்டவோ செய்யக் கூடாது என உணர்ந்திருக்கிற கடவுள் பற்றிய விவாதங்கள்.
.......................................................................................
முடிவுகளுக்காக காத்திருப்பது வித்தியாசமான பயம் கலந்த உணர்வு. முடிவு அசாதகமாக வரும் என்பது உறுதியாகி அது எப்போது எப்படி இருக்கும் என்று காத்திருப்பது வாழ்க்கையில் பெரிய சகிப்புத் தன்மையை தந்துவிடுகிறது.சந்திப்போம்

Monday, 4 October 2010

SMS

என் ஆங்கிலம் கூட எனக்கு அழகானது
உனக்கு அனுப்பிய sms ஐ மீண்டும் பார்க்கும்போது
 ................................................

sms அனுப்பி அனுப்பி விரல் நோகோணும்
வந்த sms ஐ படிச்சு படிச்சுக் கண் நோகோணும்
இப்பிடியே எங்கட காதல் வளரோணும்
அப்பிடியே அப்பன்மாரின்ர காசும் கரையோணும்

 ...........................................................
வாய்ச்சொல் செல்லுபடியாவதில்லை
எதுவானாலும் எழுத்து மூலம் வேண்டும்
சட்ட பூர்வ விசயங்களில் ...........
உன்னோட வார்த்தையால பகிர முடியாத
எத்தனையோ விடயங்களை பகிர்ந்த  sms க்கு மனசில
ஒரு பெரிய இடம் ......................
எழுத்துக்கு மரியாதைதான்  போங்கள் ..
 ..................................................
என்னதான்  அனுப்பினாலும்
என்ன கோபமா? என இடைசுகம்  வரும்  sms இல்
அதிகமாய்  உணர்கிறேன் உன் காதலை 
 ...............................................

இப்பத்தான் நினைக்கிறன்
எங்களுக்கிடையில் நடந்த sms உரையாடலை வைத்து
பத்து பதிவே போட்டிருக்கலாம் எண்டு.
................................................sms பதிவு இப்பிடி குட்டியாத்தான் இருக்கோணும் 

Saturday, 2 October 2010

நில அளவையாளனின் காதல்

உன்னைக் காதலிக்க தொடங்கின போது prospection diagram 
போல  அழகாக சிக்கலில்லாம இருந்தாய்

நீ கிட்ட கிட்ட வரும்போது Topo surveying செய்வது போல
சின்ன சின்ன வித்தியாசங்கள்
prospection diagram போல இருக்காது field data 

சின்ன சின்ன பிரச்சினைகள்தான் வாழ்க்கையில் பிடிப்புகள் ஏற்படக்காரணம்
field இல ஏற்படுகிற பிரச்சினைகள்ளதான் எங்கட திறமை அதிகரிப்பதும்.

உன்னை பற்றி எழுதும் கவிதைகள்
paln வரைவதுபோல போல ஒரு பிரசவ உணர்வு .

என்னதான் இருந்தாலும் இரவில உன்ட புகைப்படத்தை பார்ப்பது
செய்த வேலையை plan ஆகப் பார்ப்பது போன்ற ஒரு திருப்தி.

சில வேளை உன்னோட கதைக்கைக்க சந்தோசம் சில வேளை கவலை
Level line close ஆகிறதும் ஆகாததும் மாதிரி
இருந்தாலும் நான் வீட்டை சொல்லுற மாதிரி உன்னட்ட பொய் சொல்லுறதில்லை
பல்கலைக் கழகத்தில் level line ஐ   களவு செய்து close ஆக்குவது போல

சில வேளை சில கேள்விகளுக்கு எப்பவுமே பதில் சொல்ல மாட்டாய்
நானும் காத்திருப்பன் பதில் வரும் வரும்எண்டு
சில கழன்று போன control points ஐ நாங்கள் தேடுவது போல

உன்னோட கதைச்சு கதைச்சு சில விடயங்களை ஊகிச்சிக் கொள்ளுவன்
ஆனால் சில வேளை அடுத்த நாள் நீ கதைப்பது நேற்றுக் கதைத்த்தற்கும் 
சம்பந்தம் இல்லாம இருக்கும்
இரண்டு control points இக்கு இடையில வைத்து  setout பண்ணின Road centre line 
அடுத்த இரண்டு points  க்கு    இடையில்  வைத்து  பாக்கிறபோது வாற   வித்தியாசம் மாதிரி

உன் அங்க அழகை  Road cross section க்கு ஒப்பிட்டு வர்ணித்து
உன்னைக் கேவலப் படுத்தமாட்டேன் .

ஒரு முறை வீதி  ஒன்று Surveying செய்யச் சொல்லி company ஆல அறிவித்தல்.
நானும் புளுகிப் புளுகி செய்து செய்து குடுத்தாப்  பிறகு
"பழைய surveying data காணமல் போயிட்டுது அதான் திருப்ப செய்யச் சொன்னோம்
உங்கட data தேவைப் படாது தொலைந்தது  கிடைச்சிட்டுது"
ஆரோ காதலிக்கும் உன்னைக்  காதலிச்சு
கடைசியில நீ அந்த உண்மையைச் சொன்னது  போல கிடந்தது .
 
 வெயில நிண்டதால் ஏற்பட்ட கறுப்பு 
அதனால கண்ணாடி பார்க்க ஏற்பட்ட வெறுப்பு 
ஆனாலும் என்னை பார்த்து நீ சொல்ல மாட்டய் மறுப்பு 
 இந்த நினைப்பு எப்பவும் எனக்கு இருக்கு.

Wednesday, 22 September 2010

என்னைக் கவர்ந்த ராஜேஷ்வைத்யா
இணையத்தளம்  http://www.rajheshvaidhya.com/

Saturday, 19 June 2010

சும்மா கொஞ்சம்

சும்மா என்பதால் சும்மா இல்லை விஷயம் இருக்கு வாங்கோ. காதிலை ஹெட்போனை மாட்டுங்கோ. கட்டாயம் கேளுங்கோ...

எது முதல் ??யுவன் copy அடித்தாரா ??? இல்லை ??இந்தப் பேட்டி உண்மையில்லைரசித்த புல்லாங்குழல் இசை ஒன்று ...


இந்த இசை எங்கேயோ கூட்டிச்செல்கிறது.

Tuesday, 8 June 2010

உன்ட பேரை எங்கை பாவிக்க ...

ஊரில ஆற்ற பிள்ளைஎன்று கேட்டா
உன்ட பேரை பாவிக்கிறது இல்லை
பாவிச்சா  ஆருக்கும் தெரியாது
விண்ணப் படிவங்களிலும் கேட்பதில்லை உன்பெயர்
ஆனால் உன்னை ஒத்தவர்களுக்கு
 கவிதை எழுதுபவர்கள் அதிகம்.
மனதிலே ஒப்பற்ற இடம் உனக்கு .
ஆனால் உன்ட பேரை பாவிக்க முடியல்லை.
மின்னஞ்சல் தனி நபர் கணக்குகளிலும்
கேட்கப்படுவதில்லை உன் பெயர்.
பாவிச்சே ஆகோணும் எண்டு உறுத்தியது மனசு
கையெழுத்திலும் கடவுச் சொல்லிலும்  
உன் பெயரை  நான் பாவிக்கிறன் அம்மா .....


Thursday, 3 June 2010

ஒவ்வொருவருடைய உலகம்

சார்பு வேகம் பற்றி அநேகமானோர் அறிந்திருப்பீர்கள். உணர்ந்தும் இருப்பீர்கள். பிரயோக கணிதத்திலே இந்த சார்பு வேகம் பற்றிய கணக்குகள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும்  தேற்றங்கள் மூலம் சில  உணர்ந்த விடயங்களை நிறுவும் போது ஒரு  நல்ல  அனுபவத்தையும்   தரும். இயங்குகின்ற பேருந்தில் இருக்கும் போது வீதியிலுள்ள  மரங்கள்  இயங்குதல் போன்ற  தோற்றப்பாடு இந்த சார்பு வேகத்திற்கு மிகவும் எளிமையான ஒரு உதாரணம். கணித ரீதியாக இது எவ்வாறு நிறுவப்படுகிறது என்று பார்த்தால்..........

இங்கு சட்டம் என்ற ஒரு பதம் கையாளப்படும். சட்டம் எனும்போது  உதாரணமாக  பேருந்தின்  சட்டம் எனும்போது பேருந்து  ஓய்வில் இருந்தால் எனக் கருதும் போது என்று பொருள்படும். ஆனால் இங்கு பேரூந்து, பூமி சார்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

பூமி சார்பாக பேருந்து -> ->  -> திசையில் 20km/h வேகத்தில் இயங்குகிறது என கொள்வோம். கீழ்க் கண்டவாறு குறித்துகாட்டப்படும்.
V -வேகம்
B -பேருந்து
E -பூமி
M -மனிதன்

V  B ,E = 20km/h      ->  ->  -> (பூமி சார்பாக பேரூந்தின் இயக்கம்)
 ஆனால் பேருந்து சார்பாக நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆகவே 
V M ,B = ௦        (பேருந்து  சார்பாக மனிதனின்  இயக்கம் பூச்சியம் அதாவது ஓய்வு )

காவி விதிப்படி
 V E,M = V E,B + B ,M
             = 20km/h  <-  <-  <-  + ௦ (பேருந்து சார்பான பூமியின் இயக்கம் பூமி சார்பான      பேருந்தின் இயக்கத்துக்கு எதிர்த் திசையில் இருக்கும்.)

ஆகவே  V E,M =  20km/h < - <-  < -;
மனிதன் பார்க்கும் போது பூமி எதிர்த் திசையில் இயங்குவது எவ்வாறு என கணித ரீதியான நிறுவல் இவ்வாறுதான் இருக்கும்.

 இவ்வாறுதான் மனிதர்களுக்கிடையேயான புரிதல் நிலையும். உலகம் என்பது எல்லோருக்கும் பொதுவாயினும் ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை, தேவை,  பழக்க  வழக்கங்கள்  என்பவற்றால்  அவர்களுடைய   வாழும் களம் ( சட்டம்)  வெவ்வேறாகிறது.  ஒருவருக்கு நல்லது என படும் விடயங்கள் இன்னொருவருக்கு பிழை எனப்படுகிறது. ஒருவருக்குத் அவசியம் தேவை எனப்படும் விடயங்கள் இன்னொருவருக்கு அவசியம் அற்றதாய் இருக்கிறது. மக்களுக்கிடையேயான புரிதல் குறைவான காரணத்திற்கு  முக்கியமானது வெவேறு சட்டத்தில் வசித்தல் அல்ல. வெவ்வேறு சட்டம் சார்ந்த  தவறான புரிந்துணர்வு. பேருந்தினுள் உட்கார்ந்து கொண்டு மரங்கள் இயங்குகிறது என தவறாக விளங்கிக்கொள்ளல்.   

எந்த ஒரு பிரச்சினை இன்னொருவரோடோ அல்லது இன்னொரு சமூகத்தோடோ வருகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களாக மாறி சிந்திக்க வேண்டும். அங்கு நானிருந்தால் எனக்கு எவ்வாறான மன நிலை தோன்றும் நான் என்ன செய்திருப்பேன் என்றவாறான சிந்தனை. சார்பு வேகம் எவ்வாறு உணரப்பட்டு உண்மை அறியப்படுகிறதோ அது போல புரிதலும் புரிய வேண்டும் நமக்கு. ஒவ்வொருவருடைய உலகமும் வித்தியாசமானது என்பதை உணர்ந்தால் போதும் வாழ்வு இன்பமே.

Tuesday, 1 June 2010

அவளென்றால் அவ்வளவு இஷ்டம்

நினைவில் கனவாகி கனவில் நினைவாகி உயரில் புகுந்து உணர்வை வதைக்கின்ற உறவே ..............................
உன்னை வர்ணிக்கத் துடிக்குது மனசு
நீ .................

முகத்தில் வழிகின்ற கூந்தலில் ஊசலாடுது மனசு ஏனடி ஏன்??
தலை முடியை வாரி கட்ட உனக்கும் கொம்மாவைப் போல அலுப்போ ??

நெற்றியில் சிரிக்கின்ற  பொட்டு வட்டமாய் இல்லாது நீளமாய் .....
வட்டம் வரையத் தெரியாமல் கோடு வரைந்த மொக்குப் பரம்பரைதானே உங்கட குடும்பம்.

கழுத்தில் மினுமினுக்கும் வியர்வைத் துளியிலே மேலும் சிறக்கின்ற அழகு 
கிட்ட வர முடியல்லை, நீ  கடைசியாக் குளிச்சது எப்ப ???  

குட்டைப் பாவாடையில் மினுமினுக்குது உன் வாழைத்தண்டுக் கால்கள் ..
இழுத்து மூடடி வாழைத்தண்டிலே பூச்சி அரித்த கறுப்புப் புள்ளிகள்.  

எதுக்கெடுத்தாலும் அம்மாவைக் கேட்கோணும்  என கூறும்  உன்னிலே  அதிகரிக்கிற  மரியாதை
உங்கட பரம்பரையில சொந்த புத்தி யாருக்குமே கிடையாதோ ???

பெண்களே மன்னியுங்கள் ..................

Thursday, 27 May 2010

50வது பதிவும் பதிவுலகமும்

இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்த ஆரம்பித்தது பதிவுலகுக்கு வந்த பின்புதான். அந்த வகையில் பதிவுலகுக்கு மனமார்ந்த நன்றிகள். நல்ல பல விடயங்களை வாசிக்கும் பழக்கம், சில தலைப்புகளின் கீழான தேடல் என்பன ஒரு வகையில் அதிகரித்துத்தான் இருக்கிறது. முகம் தெரியாத, கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுடனான தொடர்புகள் ஆரோக்கியமான சூழலில்  இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  ஐம்பது பதிவுகள் என்பது எனக்கு பெரிய மைல்கல்போலத்தான். தொடர்ந்து பதிவுகள் எழுதுவேன் என ஆரம்பிக்கும் போது நினைத்திருக்கவில்லை.  எனது கல்லூரித் தோழர்களுக்கும் இந் நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் (ஏதோ விருது பெற்ற மாதிரியே பீலா விடிறான் ........ :)  )

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தொழிநுட்ப வளர்ச்சியாகவே இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் துறைசார் இணையத் தளங்களின், வலைப்பதிவுகளின்  வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. இணையம், கணணி, மென்பொருட்கள் சம்பந்தமாக எழுதுபவர்கள் ஓரளவு இருக்கிறார்கள். பிற துறைசார் பதிவுகள் இல்லை என்றே சொல்லுமளவுக்கு சில பதிவர்களே காணப்படுகிறார்கள்.    அதற்காக எல்லாப் பதிவர்களும் தொழில்நுட்ப பதிவர்களாக மாற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் குறித்த ஒரு துறையிலாவது நல்ல அறிவு, அனுபவம் இருக்கும் என்பது உண்மை. தங்கள் வலையிலே தங்கள் துறை பற்றி பகிர்ந்து கொள்ளல் சிறப்பாய் இருக்கும் என்பது என் கருத்து.  நாங்களெல்லாம் இளசுகள்.................

ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும் பதிவின்ட நீளம் ஒரு எல்லையைத் தாண்டுதில்லை ........................

Monday, 24 May 2010

யாரை நோக..

"நசுக்கப்பட்ட தர்ம போராட்டம்
கையில் கிடைத்த பொருட்களை அல்ல
கையில் கிடைத்த பிள்ளைகளை கூட்டிவந்த உறவுகள்
பட்டினி உயிர்ப்பயம்
கொடூரம் பயங்கரம் "
செய்திகளாய் படங்களாய் பார்த்து
 கண்ணீர் வடித்துப்போட்டு
அது அவரவர் விதி .......
கடவுள் இருக்கிறார், அவர் நல்லவர்
எல்லோரையும் காப்பார் என்று சொல்லி
இல்லாத ஒன்றை தூக்கி வைத்து ஆடுகிறோம்.
ஏனென்றால் அவர் எங்களைக் காப்பாற்றி விட்டார் ...
கடவுள் நம்பிக்கை என்பது சுயநலம் அன்றி வேறேதோ ????????


Thursday, 20 May 2010

செம்மொழியான தமிழ் மொழியாம் ..

செம்மொழி மாநாடு இப்போது  அவசியமானதா  இல்லையா  என்ற  விமர்சனத்துக்கு அப்பால்  அப்பால் இந்தப்  பதிவை நோக்கவும்.

 செம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயலின் இசை அமைப்பில் வெளிவந்த "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் அண்மையில் கேட்க கிடைத்தது. தமிழர் வாழ்க்கை முறை தொல்காப்பியம்,   திருவள்ளுவர், ஐம்பெருங்  காப்பியங்கள்   என்பவற்றை இலகு தமிழில் நல்ல வரிகள் சேர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.  அதிகமான  பாடகர்களையும்  சேர்த்திருப்பது நல்ல முயற்சி. 

அமைதியான நடையில் பாடல் ஆரம்பித்து செல்கிறது. ஆனால் இடையில் ராப் (RAP ) இசை புகுத்தப்பட்டிருப்பது  ஒரு மாதிரியாக இருக்கிறது. பாடலின் இறுதியில் வரும் பெண்குரலின் மேலைத்தேய இசையைத் தழுவிய அந்த பாடும்  முறையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இசைப்புயல் தமிழின் பெருமையை உணர்த்தும் பாடலை வழங்குகிறோம் என்று மறந்தது  போல தெரிகிறது. ரஹ்மானின் இசைத் திறமையையும் அவர் தமிழிசையில் மேலைத் தேய, வேறு நாட்டின் இசைவடிவங்களைப் புகுத்தி எமது இசைவடிவங்களையும் சிறப்பாகக் கையாண்டவர் என்பது மறுக்க முடியாது. ஜோதாஅக்பர் திரையிசையில் கையாண்ட இசை நுட்பங்களைப்  போல  எமது செம்மொழிப் பாடலுக்கும் தமிழர் பாரம்பரிய வாத்தியங்களையும் இசை வடிவங்களையும்  கையாண்டிருந்தால் பாடல் சிறப்பாக  இருந்திருக்கும்  என்பது எனது கருத்து. அவ்வாறு இல்லாவிட்டாலும் ஆகக்குறைந்தது அந்த ராப் இசையையாவது தவிர்த்திருக்கலாம்.

இசைப்புயல் எப்படியான பாடல்களை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளும் என்மனம் இந்த இசையை ஏற்றுக்கொள்ளவில்லை.


Saturday, 15 May 2010

மனிதனும் இயல்புகளும்

நாகரிகம் அறிவியல் வளராத காலத்தில் மனிதனுக்கு எதிரிகள் சத்துருக்கள் என பல விலங்கினங்கள் காணப்பட்டன. அறிவியல் வளர்ச்சியோடு மனிதனே உலகின் பலம் பொருந்திய விலங்கு எனும் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மனிதன் எனும் விலங்கின் பலம் மூளை. இயற்கைக்கு ஏற்றாற்போல அன்று வாழ்ந்தவன் தனது தேவைக்கு ஏற்றாற்போல இன்றுஇயற்கையை மாற்றி அமைக்கிறான். மனிதனை விஞ்சிய ஒரு பலம்பொருந்திய இனம் இல்லை என்பதால் இயற்கைச் சமநிலையில் பல சிக்கல்கள். அனேகமாக விலங்கினங்களின் வளர்ச்சி உணவுச் சங்கிலி மூலமோ அல்லது ஒரு விலங்கின் எதிரி மூலமோ கட்டுப்படுத்தப்பட்டே உளது. உணவு வலை இயற்கையில் உயிர்ச் சமநிலை அடிப்படையில் பூமியில் உள்ள வளங்களுக்கு ஏற்ற வகையிலேயே உயிர்களின் வளர்ச்சி, தொடர்ந்து வாழல் என்பன தங்கியிருக்கின்றன. இங்கு கூற முனைவது டார்வினின் தக்கென பிழைத்தல் சார்ந்த ஒரு கருத்து. இன்றைய நிலையைப் பொறுத்தவரை மனிதன் சத்துருவான பின்னர் மனிதனின் மிகச் சிறிய எதிரி இயற்கையாகவே உளது. அவ்வப்போது இயற்கை அனர்த்தங்களால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு மிகப் பெரிய அழிக்க முடியாத எதிரி ஒன்றும் பூமிலேயே வாழ்கிறது. அது என்ன ???

மனிதன் மனிதன் மனிதன்
மனிதனுக்கு எதிரி மனிதனே. மனித இனம் தோற்றுவிக்கப் பட்டிருந்த காலத்திலிருந்து புள்ளிவிபரம் செய்யப்பட்டிருந்தால்  அகாலமாக மரணித்த மனித உயிர்கள் மனிதனாலேயே அழிக்கப்பட்டுள்ளன என்று அப்புள்ளிவிபரம் கூறியிருக்கும். மனிதன் மனிதனை அழிப்பதால் உயிர்ச் சமநிலை பேணப் படுகிறது. இவ் விலங்கினத்தை அழிக்க வேறு சக்தியில்லையேல் மனிதன் வாழ பூமி பற்றாக்குறையாகிவிடும். ஆக எங்களை நாங்களே அழித்துக்கொள்வது சரியென கூற முனையவில்லை. அத்தோடு மனித இனத்தை மனிதனே அழிப்பது எதோ ஒரு சமநிலையைப் பேணுவதற்கே என்று தெரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் இல்லை. ஏதோ ஒரு வகையில் வேறு மனித உயிர்கள் மீது கோபம் கொள்ளும் வகையில் மனித மனம் உருவாக்காகப் பட்டிருக்கிறது என்பது உண்மை. மனிதனின் பகுத்தறிவுக்கு நியாயம் என்று படும் விடயங்களுக்காக போராடி தம்மை தாமே அழித்துக் கொள்கிறான். உலகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்குரிய நியாயங்கள் அந்தத்ந்தக் குழுக்களுக்கு சரியாகவே இருக்கின்றன. பெரிதளவில் மனித இனம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை தாங்களே அழித்துக் கொள்வது இன ரீதியான நாடு ரீதியான போராட்டங்களின் மூலமே. போராட்டங்களுக்குரிய காரண காரியங்களை ஆராயும் போது போராடியே ஆக வேண்டிய நிலைமை எனும் வகையில் அறிவுக்குப் புலப்படக்கூடிய வகையிலேயே மனிதனின் சிந்தனை உருவாக்கப் பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.உலகம் ஆண்டவனால் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் இதற்குரிய விளக்கம் அல்லது நாஸ்திகர்கள் கூறும் விளக்கம் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே இருக்கும் என நினைக்கிறன். உலகை சமநிலையில் வைத்திருக்க இறைவன் கையாளும் வழி எனவும் மற்றோர் இயற்கைச் சமநிலையின் குணா இயல்பு போன்ற விளக்கங்களை தரலாம்.


.வேறு முறையில் அலசினால்

மனித இனம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு வரையறைகளை தனது வாழ்வின் எல்லைக் கோடாகக் கொண்டே வாழ்ந்துவருகிறது. குடும்பம், ஊர், சாதி, இனம், மதம், நாடு என்று அந்த வரையறைகளைப் பொறுத்து மனிதர்களோடு பழகும், உறவாடும், நட்புப் பாராட்டும், போராடும் விதம் வேறுபட்டு நிற்கிறது. எமது குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை வேறு குடும்பத்தால் வரும்போது மனம் கொதிக்கிறது. இவ்வாறே ஊர் இனம் மதம் நாடு போன்ற விடயங்களும். அன்பு நேசித்தல் எனும் மன இயல்பே போராடுதல் என்ற இயல்பையும் கட்டிஎளுப்புகிறது. எமது இனத்தை அதிகமாக நான் நேசிக்கிறேன். அப்போது வேறோர் இனத்தால் என் இனத்திற்கு நெருக்கடிகள் எனும்போது மனம் பதைபதைக்கிறது. நெருக்கடி கொடுப்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறது. இவ்வாறு நேசித்தல் எனும் இயல்பு போராடுவதற்கு ஏதுவாய் அமைகிறது என்பது கண்கூடு. ஆனால் அன்பு, நேசித்தல் இல்லையென்றால் தனது குடும்பத்தையே தான் அழித்துவிடுவான்.  அன்புதான் அழிக்கிறது அன்புதான் ஆள்கிறது. மேற்குறித்த பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படலாம் என்பது பதிவை வாசித்தவர்களுக்கான கேள்வியாக விடுகிறேன்.

எங்களை நாங்கள் அழிக்காமல் இருப்பது எவ்வாறு??
நன்றி.
Tuesday, 27 April 2010

இப்பிடியும் வர்ணிக்கலாமுல்ல..

சேலை அணிந்த போது நீ மரபுக் கவிதை
சுடிதாரில் புதுக் கவிதை
ஆனால் என்கனவில் ஹைகூவாய்......
........................................................................

எட்டு மாதம் போயும் உன் இடதுகையிலுள்ள
கெளரி காப்பின் சிவப்புநிறம்  குறையவில்லை.
அது உன்னை அணைத்துக் கொண்டிருக்கும்
சந்தோச வெட்கத்தால்.
........................................................................

ஆண்டாள்மாலை போல தாவணியை நீ அணிய
(அதாங்க சிம்ரன் ஸ்ரைல்)
அடிவயிறு கலக்குதடி
நீ ஆண்டாள் போல யாரையும் நினைக்கிறியோ எண்டு.
..........................................................................
கழுத்தில் உள்ள சங்கிலியை கையிலெடுத்து
என்னோடு நீ பேசும்போது
"எப்போது இதைக் கழற்றி தாலியைக் கட்டப் போறாய்"
என கேட்பதுபோல் இருக்கிறது.
.........................................................................
அடிக்கடி உன் சேலையை சரி செய்யாதே
பாவம் உன்னைத் தொட்டுக்கொண்டிருக்கும்
சேலை நூல்கள்.
.......................................................................
பயந்து போய் தடுக்காதே
காற்றில் பறக்கின்ற  தாவணியை
உன்னை அணைப்பதை நிறுத்தி
அவை எங்கும் பறந்துவிடா ..............
                                                       நன்றி தமிழன் கறுப்பி
....................................................................
குடை பிடித்து நடக்காதே
அழகு வெளியே போகாமல்
முழுவதும் தரைக்குத் தெறித்து
பூமியதிர்ச்சி வந்துவிடும்.Wednesday, 21 April 2010

அரியஸ் exam ...............


பல்கலைக்கழகங்களில் அரியஸ் பரீட்சைகள் எழுதுவது ஒரு வித்தியாசமான் அனுபவம். எத்தனையோ பட்டறிவைத் தந்துவிடும். proper பாடங்களோடு அரியஸ் பாடங்களையும் எழுதும்போது ஏற்படும் நெருக்கடிகள் வாழ்க்கையில் தவற விடுதலால் ஏற்படும் இழப்புகளை உணர்த்தக் கூடிய விடயங்கள். அதற்காக எழுதும் பரீட்சைகளில் கோட்டை விட்டு அடுத்தமுறை எழுதினால் வாழ்க்கைப் பாடத்தைக் கற்கலாம் என்று சொல்ல வரவில்லை :) .

இவ்வாறு தனது முறையைத் தவற விட்ட ஒரு மாணவனின் குட்டிப் புலம்பலே இந்தப் பதிவு.
.............................................................................
ஒன்றில் சரி எண்டு சொல்லியிருக்கலாம்
சந்தோசத்தில் படிச்சிருப்பன்.
மாட்டேன் என்றிருக்கலாம்.
போனா போகுது நீ பெரிய ஐஸ்வர்யாராயோ ?
 எண்டு தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியாப் படிச்சிருப்பன்.
எதுவும் இல்லை .............
உன்ட தொடர்பைத் தேடி அலைந்தபோது (phone number ,facebook ,  mail address)
எப்பவும் உன்ட யோசினைதாண்டி 
எல்லாம் கிடைச்சாப் பிறகு ...............
உன்ட யோசனை மாறல்லை .
அந்த உனக்கும் எனக்கும் இடையில் இருந்த  relationship ...............
சீ............. எனக்கு மட்டும் தெரிந்த அந்த  relationship மாறிப் போச்சு.
என்னோட ஒரு சங்கடமும் இல்லாம கதைக்கிறாய் 
நட்பாத்தான் பழகிறியோ???
இப்பிடி முதல்ல நட்பை  வளர்த்து பிறகு காதலை சொன்னா நல்லமோ?
அல்லது வேற யாரும் உன்ன முடிவு கேட்கைக்குள்ள நான் கேட்பமோ ??
இப்பிடி ஆக்கிவிட்டாய் 
தொலைவில இருக்கும்போது 100 % வீதம் காதலி இப்ப ????
விளங்கக் கூடிய மாதிரி என்னெண்டு சொல்ல ???
அதாங்க  ரஹ்மான் sir இன்ட இசை மொழியில 
"தொலைவான போது பக்கமானவள் 
பக்கம் வந்த போது தொலைவாவதோ ????"
இதெல்லாம் பரவாயில்லை 
நடந்தது என்ட study leave  இலை எல்லே    கிராதகி ............
இப்ப எனக்கு நாளைக்கு விடிய exam பின்னேரம் exam 
நாளைக்கு பின்னேரம் exam .............
போங்கடி உங்கட காதலும் மண்ணாங்கட்டியும்.
டீன் எஜில வர வேண்டிய காதல் அதுக்குப் பிறகும் 
வந்தா கஷ்டம்தான் ...............Wednesday, 7 April 2010

சந்தோசத்தில் புலம்பல்

மனிதன் வேலை ஏதும்  செய்யாமல் இருக்கும்போதுதான் தேவையில்லாத சிந்தனைகள் கனவுகள் எல்லாம் வந்து கெட்டுப் போகிறான் எனக் கேள்விப்பட்டதுண்டு. அனுபவிக்கும்போது உண்மைதான் போலிருக்கிறது. சிறிது நாட்களாக பகல் நேரம் முழுவதும் படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை ஒன்று சந்தித்ததால் ஈடுபாடாக வேலை செய்யக் கூடிய மன நிலை உருவாகியிருக்கிறது. தேவையற்ற கற்பனைகள் குறைந்து விட்டிருக்கின்றன. நீ கனவிலோ நினைவிலோ வருவதில்  குறைந்திருக்கிறாய். தேவையற்ற சிந்தனைதான் காதலோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் கழித்துத்தான்  விளங்கியதோ என சிரிக்கலாம் போலிருக்கிறது. நான் மறந்தாலும் உன்னை ஞாபகப்படுத்துகிற நண்பர்கள். இதனால் அவர்களை தலையில் தூக்கிக் கொண்டாடவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. சமநிலையான மனநிலை. வயது போய்விட்டதால் அப்படியோ ??? என்ன பெரியவயது ? இல்லை இல்லை கால் சதம் அண்மித்து விட்டால் பிறகென்ன? அனாலும் ஒரு மூலையில் உனக்கான இடம் உறுதியாகத்தான் இருக்கிறது. FACE BOOK இலே உனது சுவரில் PROFILE PICTURE இலே நீ போட யாரோ hi jothika where is ur soorya ?? என எழுதியிருந்த போது சிலிர்க்கின்ற மனது. ஒரு தலைக்காதல் சீ................. இல்லை இல்லை காதல் மீதான ஏக்கம் உனக்கு இருக்கா இல்லையா?? எத்தனை தரம் என்னையே நான் பார்த்துக் கேட்பது ????  எதோ வேலை செய்து கிழிச்சு எல்லாத்தையும் மறந்த ஞானி போல பேசினாயே போடா அரை லூசு ,,,,,,,,,,,.........................

    ..........................................................................................

பங்குனி பருவப் பாளை. இந்த தருணத்தில் யாழ்ப்பாணத்தில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது அளவுக்கதிகமான சந்தோசம்.Thursday, 11 March 2010

உலகை ஆளும் GIS - பகுதி 2

முதலாவது பகுதியில் GIS என்றால் என்ன என்பது பற்றி பார்த்திருந்தோம் இம்முறை தரவுகள் சேகரிக்கப்படும் பல்வேறு முறைகள் பற்றி ஆராய இருக்கிறோம். GIS என்பது  கணனி மயப்படுத்தப்பட்ட ஒரு system  என பார்த்திருந்தோம்.  கணனி மயமான இந்த system  எல்லா வகையான தரவுகளையும்   உள்வாங்கிக் கொள்ளாது. ஆனால் இதற்கு ஏற்றாற்போல் தரவுகளின் வடிவத்தை (format) மாற்ற வேண்டிய நிலைப்பாடும் இங்கு உள்ளது. தரவு வடிவங்கள் (data format) பற்றி பிறகு ஆராய்வோம்.

எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்படலாம்??

01 ) வரைபடங்கள் (maps)
வரை படங்கள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.வரைபடங்களும் இரு  வகையாக பிரிக்கப்படலாம்.

1.Conventional map (பாரம்பரியமுறை வரைபடங்கள்)
2.Digital maps (இலத்திரனியல் வரைபடங்கள்)

பாரம்பரிய முறை வரைபடங்களை  உபயோகிப்பதில் பல சிக்கல்கள் இருந்தாலும் கூட பாவிக்க முடியாது என்று கூறி விட முடியாது. ஆனால் இலத்திரனியல் வரைபடங்கள் GIS இன் தோழர்கள் போன்றவை. 
இலத்திரனியல்
 வரைபடம்பாரம்பரிய வரைபடம்

02 ) Arial Pahotographs
   விமானங்களிலிருந்து வரைபட உருவாக்கம் போன்ற தேவைகளுக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் 


இப்புகைப்படங்கள் பல்வேறு பகுத்தாய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்படும்.


03 ) செய்மதிப் படங்கள் (Sattelite images) 
இவையும் பலவேறு பகுத்தய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்
 படுகின்றன.  Georeferencing , Clssiification ,  Filtering போன்றன இவைபற்றி எதிர்வரும் பகுதிகளில் விரிவாக ஆராய இருக்கிறோம். 
செய்மதிப் படம் ஒன்று.

Arial Pahotographs நேரடியாக பாவிக்கப்படக்கூடியது போல தோற்றமளித்தாலும் செய்மதிப் படம் அவ்வாறு பாவிக்க முடியாது என படத்தை பார்த்தவுடன் புரிகிறது அல்லவா ??

04 )நில அளவை மூலம் பெறப்படும் தகவல்கள் (Field Surveying )

05 ) மனித உள்ளீடுகள் (Human Inputs )
தரவுகளை மனிதர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளல்.
உதாரணம்:- "இவ்விடத்திலே பெரிய கட்டடம் ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.. அது என்ன கட்டடம் ?"

இவ்வாறாக தரவுகளை உள்வாங்கல்


முக்கியமான தரவு சேகரிக்கும் முறைகள் பற்றி ஆரர்ய்ந்திருக்கிறோம். மேலும் அடுத்த  GIS பதிவில் சந்திப்போம்.

Sunday, 7 March 2010

FACEBOOK சுவரில் சுட்டது.

பயம்
 உன்னைப் பார்த்தபோது சந்திப்பதற்குப்  பயந்தேன்.
உன்னை சந்தித்தபோது காதலிக்கப் பயந்தேன்.
காதலிக்கின்ற இந்தநாட்களில் உன்னை இழந்துவிடுவேனோ என பயப்படுகிறேன் .

இணைய நட்பு
இணைய தளத்தைத் தளமாக்கிக் கொண்டு புனைந்திடுவார் நட்பை!மனமும் -- இணையும் இசைந்திடும் நட்பு வலைபின்ன !
காலம் இசைமீட்டிப் பார்த்திருக்கும் சொல்.
அடுத்தவீட்டில் வாழ்வார்!
அருகிலே உள்ள அடுத்தவீட்டில் வாழ்பவர்கள் யாரென்று கேட்டால் கடுகடுத்த சொல்லால் தெரியாதே! என்பார்!
ஒதுங்கியே வாழ்ந்திருப்பார் இங்கு.
பழகினாலும் நாமோ பழகா விடினும்
 உரசியே வந்துநின்று நட்புவலை பின்னி

...............................................................................
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்
.........................................................................................

நான் எழுதிய கவிதை என்னை பார்த்து கேட்கிறது எப்போது அவள் என்னை படிப்பாள் என்று? என்னவளே பதில் சொல்….??!?!?
.......................................................................................
நன்றி சங்கர்கணேஷ், கஜன்,நிஷாந்தன்


எழுதுவதற்கான மனநிலையும் எண்ணங்களும் அற்றுப் போயிருக்கின்றன. மனதில் வெறுமையே குடி கொண்டிருக்கிறது. ஒருவகையில் இப்படி இருப்பதும் சந்தோசமாகவே இருக்கிறது. ஆனால் நிறைய விடயங்களை இழந்துவிட்டது போன்ற பொய்யான உண்மை அடிக்கடி வெருட்டுகிறது. அனால் நான் சந்தோசமாகவே இருக்கிறன். (இது முகப்பு நூல் சமாசாரம் இல்லை)Sunday, 14 February 2010

காதலர் தினத்தில் காதல்

"என்னடா இப்ப ஒரே காதல் தலைப்பிலேயே பதிவுகள் போடுறாய் ஏதாவது விசேசமோ அல்லது தோல்வியோ என அடிக்கடி கேட்கும் வடலியூரான் காதலர் தினத்தில் ஏன்டா ஒரு பதிவு போடல்லை "என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காய் கஷ்டப்பட்டு எழுதும்  ஒரு பதிவு.   காதல் பற்றி அலசாத கவிஞர்கள், உளவியலாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள், வலைப்பதிவர்கள்  என்று யாருமே  இல்லை. காதல் தொடர்பாக நான் நேரடியாக கேட்டு உரையாடி வாசித்து வியந்த சில சில விடயங்கள் தொடர்கின்றன. முக்கியமான விடயம் காதல் என்றால் அன்பு .தாய் பிள்ளை மேல காட்டுவதும் காதல்தான் என அதிகப் பிரசங்கித் தனமான விடயம் எதுவும் இல்லை.

........................................
சங்க காலங்களில்    ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகின்ற போது  "அவன் அவள் மேல் காமம் கொண்டான்." எனக் கூறுவது ஒரு நாகரிகமற்ற சொல்லாகக் கருதப்பட்டது.  அவையிலே பிரயோகிக்கப் பட வேண்டிய அவசியம் கருதி "காதல்" என்ற சொல் மூலம் அந்த உறவு விபரிக்கப் பட்டதாம். ஆக
 காதல் என்பது காமம் எனும் பதத்தின் இடக்கரடக்கலாம். 
........................................
உலகத்திலுள்ள அழகான விடயம்  என்ன? காமம் ஒன்றே ஒப்பற்ற அழகுடையது. காமம் என்ற ஒன்று இல்லா விட்டால் வாழ்வியலிலே ஒரு ஆழ்ந்த ஈடுபாடு யாருக்கும் வந்துவிடாது. ஆனால் காமத்தை சிற்றின்பம் என்றும் இறைவனை உணர்தலே பேரின்பம் என்றும் மதங்கள் போதிக்கின்றன.      அது பற்றி நமக்குத் தெரியாது விட்டுவிடுவோம்.
...................................................

ஒருதலைக் காதல் என்று சொல்வது சரியா?
உண்மையில் ஒருதலையாகக் காதலித்தல் என்பது காதல் இல்லையாம் . அது காதல் மீதான ஒரு ஏக்கமாம். ஆனால் இந்த காதல் மீதான ஏக்கம் எனும் உணர்வு  காதலை விட புனிதமானதாம். இதிலே காதல் கொஞ்சம் தூக்கல் காமம் கொஞ்சம் கம்மி 

முரளி ஒருபடத்திலே சொல்லுவார் 
ஒருத்தி ஒருத்தனின் காதலை ஏற்றுக்கொள்ளும்போது  அங்கு காதல் 50 %
ஒருதலையாக ஒருத்தியை விரும்பி அவள் அந்தக் காதலை மறுக்கிறபோது காதல் 75 %  .
சொல்லாமலே ஒருத்தியைக் காதலிக்கின்றபோது அதாவது நீ காதலிப்பது அவளுக்கே தெரியாமல் இருக்கும்போது அங்குதான் காதல் 100 %
 ...............................................
காதலர்கள் காதலையும் காதலரையும் காதலிக்கும்போது அக்காதல் ஒருவேளை தோற்றுப் போனாலும் அப்பிரிவு தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனெனில் காதலித்த காதலர் இல்லை ஆனால் காதலை நான் காதலிக்கிறேன்.இன்னொருவரைக் காதலிக்கலாம் என்ற நிலைப்பாடு இருக்கும். ஆனால் காதலரை மட்டும் காதலித்து அக்காதல் பிரிந்தால் சோகமே மிச்சம்.எல்லாத்தையும் விட்டிட்டு காதலர் தினத்தை சந்தோசமாக் கொண்டாடுங்கோ.


காதலர்தின வாழ்த்துக்கள்   

Monday, 8 February 2010

விரிவுரையில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை

ஒருவேளை நீ என்னைக் காதலித்து
நாமிருவரும் கைப்பிடித்து
பிள்ளை குட்டி பல பெத்து
வாழ்க்கையை வாழ்ந்து கழித்து
மரணவாசல் திறக்கும்போது
எனக்குத் தெய்வ நம்பிக்கை வந்தால்
இறைவனிடம் கேட்பேன்
என்னவளே முதலில் சாக வேண்டும் என்று
ஒருவேளை நான் முதலில் இறந்துவிட்டால் 
தனியாக நீ அல்லல் படுவதை 
பேயாக இருக்கும் என்னால் தங்கிக் கொள்ளவே முடியாது. 

...........................................................................கையிலே புத்தகம் மனம் முழுக்க நீ
உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு நாளும் கடக்க
ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறேன்
கடக்கின்றன பல பக்கங்கள்
திடீரென புத்தகத்திலுள்ளவற்றை    வாசிக்கிறேன்
ஒன்றுமே புரியவில்லை
அப்போதுதான் உறைக்கிறது
உன்னோடு நான் வாழவில்லை,
நீ என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது . 

Wednesday, 3 February 2010

இருமை இருக்கா? இல்லையா???

 அதென்ன இருமை ??

BINARY என்று சொல்வார்களே அதுதான்.

உன்னைப் போல் ஒருவனில் கமல் மோகன்லாலிடம் "BINARYயாப் பதில் சொல்லுங்க மிஸ்டர்.மாறன் tell yes or no " என்று கூறுவார். அதுதான் அதேதான். ஒன்று அல்லது மற்றொன்று. எது வித நெகிழ்வுத் தன்மையற்றவை. கணிதத்தில் ஈரடி எண்கள் (Binary numbers)என்று உள்ளது. அதிலுள்ள இலக்கங்கள் ௦,1 மாத்திரமே.


சாதாரண இலக்கங்கள்               ஈரடி எண்கள்
(பத்தின் அடிகொண்டவை)          
1                                                           =1                                        

2                                                          =10

3                                                           =11

4                                                          = 100

5                                                            =101

என்னடா கணித பாடம் நடத்த வெளிக்கிட்டான் என்று சொல்கிறீர்கள். விளங்குது.

எதற்காக இந்த binary என்று கேட்கலாம். சொல்ல வந்த விஷயம் இதுதான். இருமை இயல்புகள் நடைமுறையில் மிகவும் குறைவே. இல்லை என்றுகூட சொல்லலாம். இல்லை என சொல்ல முடியாமைக்குக் காரணம் அனைத்துமே இருமை அற்றவை என கூறும்போது. நான் கூறும் விடயம் அங்கு இருமைத் தன்மையை சுட்டுகிறது. எதுவுமே இருமை இல்லை அல்லது அப்படி நீ கூறுவது பிழை என்று கூறலாம். இங்கு தொனிப்பது இருமை இயல்பே.


நீ நல்லவனா கெட்டவனா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

கடவுள் இருந்தால் அவர் நல்லவரா கெட்டவரா?

அவள் அழகா இல்லையா?

தமிழ் பேசும் மக்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த விதம் சரியா பிழையா ???

இவ்வாறு எண்ணற்ற கேள்விகள் கேட்டுப்பார்த்து binary யாப் பதில் கூறிப் பாருங்கள். மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். உலகம் என்பது கறுப்பு வெள்ளை நிறங்களை மாத்திரம் கொண்டதல்ல சாம்பல் நிறங்களையே பெருமளவில் கொண்டது. காப்மேயர் வெற்றிக்கான வழிமுறைகள் என்ற  நூலில் இதையே குறிப்பிட்டிருப்பார்.உரு 1    போல் வாழ்க்கை இருக்காது உரு 2 போன்றதே இந்த உலகம்
இருமை குறைவுதான் இந்த உலகத்திலே ...............

Tuesday, 2 February 2010

இன்றைய தருணங்கள்

மலையைக் கட்டி மயிராலை இழுக்கப் பார்த்தோம். வந்தா மலை போனா மயிர்தானே என்று எண்ணிக்கொண்டு. மயிர் போச்சுது. உயிரும் போகுமோ தெரியல்லை. அதான் இலங்கை ஜனாதிபதித் தேர்தல்.   
............................................................................

உன்னைப்பற்றிய எண்ணங்கள் அதிகரித்திருக்கின்றன. காதலை சொல்வதற்கான வயது கடக்கும் தறுவாய் போன்றொதொரு  கற்பனையான கால எல்லைக்கோடு முன்னே நின்று வெருட்டுகிறது. உன்னை facebook இல் சந்தித்தபின் சந்தோசமும் பயமும் ஏக்கமும் சேர்ந்து என்னை பாடாய்ப் படுத்துகின்றன. உன் புகைப்படம் கிடைத்தும் வேண்டாம் என விட்டு வந்தபோதும் அவற்றை  சேமிக்கத் தொடங்கியிருக்கின்ற இனம்புரியா
பைத்தியக்காரத்தனம் . அதிலே சிரித்துச் சிரித்தே என்னை ...................
.......................................................................

இறுதி semestar ஒரு அவசர உலகமாய். ..........

.......................................................................  

நீண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகத்தினுள் நுழைகிறபோது எழுத்துகளின் வேகத்தில் ஒரு வித மந்தம். பிரயோசனமாய் எதுவுமே எழுதமாட்டேன் என்கிற என்மீதான அசாத்திய நம்பிக்கை.
...................................................................

  

Wednesday, 6 January 2010

இசைப்புயல் வாழ்க

சிறு வயதிலே ஒரு சில பாடல்கள் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்த்தின. அந்த வயதில் இசையமைப்பாளர்கள் பற்றியெல்லாம் தெரியாது. சில பாடல்களில் பைத்தியமாகவே இருந்தேன். கால ஓட்டத்திலேயே அவை A.R.ரஹ்மானின் பாடல்கள் அறிய முடிந்தது. இவ்வாறு சிறுவயதிலேயே என்னை ஆக்கிரமித்த இசைப்புயலின் இசை இன்று ஒரு ரஹ்மான் பைத்தியம் என்று சொல்லுமளவுக்கு ஆக்கியிருக்கிறது.
உலகத்தையே இசையால் ஆள்பவர்.
விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முன்னுதாரணம்.
பெருமை இல்லாத மனிதர்.

என்று வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கும் இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரின் இசைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.