Thursday, 31 December 2009

இந்தமுறையாவது நல்லதாய் மலர்வாய் புத்தாண்டே ....

2009 ?????????

சோகங்களை அளவின்றி வழங்கினாய்.

அதிர்ஷ்டம் இல்லாத இலக்கமோ ?

இல்லை அது தமிழருக்கு மட்டும்தான்.

எங்களால் உன்னை மன்னிக்க முடியாது.

பெருந்தன்மையோடு மன்னித்து வழியனுப்புகிறோம்.

சென்று வா .........

மனிதர்கள் செய்த தவறுக்கு நீ என்ன செய்குவாய்.

சென்று வா .........

உண்மையில் கோபப்பட வேண்டியவனிடம்

நாம் கோபப்பட முடியாது.

கோபப்பட்டால் சில வேளை உன்னுடனேயே நாங்களும்

பூவுலகுக்கு பிரியாவிடை கொடுக்க நேரிடலாம்.

சென்று வா.........

நாகரிகத்துக்காய் "சென்று வா "என சொல்லிவிட்டேன்.

நீ போ போய் விடு வராதே ........

உன்னைத் திட்டவும் பயமாய் இருக்கு.

அனுப்பி வைக்கும் உன் அயல் வீட்டுக்காரிக்காவது (2010)

உன்னுடைய பெயரால் (2009) தமிழருக்கு நிகழ்ந்த அநீதிகளை கூறு .

இன்னும் ஒரு கொஞ்ச நேரந்தான்

வடிவா அவளுக்கு விளங்கப்படுத்து.

வர ஆயத்தமாகிறாள் போல எல்லாத்தையும் ஒன்று விடாமல் சொல்லு.

வரப் போகும் அவள் எங்களைப் பார்த்து,

முகத்தில் சோகம் தெரியவில்லையே எனக் கேட்பாள்.

"அவர்களுக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது"

என்ற உண்மையைக் கூறு.

சரி சரி வரப்போறாள் போல கிடக்கு

நீ போ ...

நான் அவளை வரவேற்க ஒரு வாழ்த்துப்பா தயார் செய்ய வேண்டும்

"இரண்டாயிரத்துப் பத்தே

சென்ற வருடம் கண்ணீர் எங்கள் சொத்தே

எல்லோருக்கும் பிடித்ததே ஒரு வகைப் பித்தே

ஆயினும் இன்முகத்தோடு வரவேற்கிறோம்


அனைத்தையும் மறந்து விட்டே

வாராய் வாராய் மகிழ்ச்சியை மட்டும் கொண்டு வாராய் "


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Monday, 28 December 2009

காமமும் காலச்சாரமும்


கட்டுப்பாட்டை மீறுகின்ற உடலியல் ஆசைகள்.

பெண் ஸ்பரிசத்தைத் தேடுகின்ற வயது.

விலைமாதை நாடினால் நல்லவனாய் இருந்துவிடுவோமோ

என சில கணங்களில் யோசிக்கின்ற தருணங்கள்.

ஆசைகளை மெருகூட்டும் பேருந்தினுள் கூட சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகள்

காலாச்சாரம் எனும் போர்வையில் மறைக்கப்படவேண்டிய உணர்வுகள்.

ஏன் இப்படி ? என்ன செய்வது.
காமத்துக்காய் கனகாலம் ஏங்குவது காலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டோடு வாழும் மனித இனம் ஒன்றுதான்.

எந்த உடலியல் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி விடுகிறோம். காமம் ஒன்றைத் தவிர.

இதனால் காமத்தை வரையறுக்கும் கலாச்சாரத்தை வெறுப்பதா ??

எந்த விடயமும் முழுக்க முழுக்க நன்மை என்று இல்லை

முழுக்க முழுக்கத் தீமையும் இல்லை

அதாவது

எதுவுமே BINARY கிடையாது.
காலாச்சாரம் காமத்துக்கு எல்லைக் கொடு கீறியபோது
பெறப்பட்ட விளைவும் இப்படித்தான்
நன்மை 98% தீமை 2%

சில இடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டோடு வாழ்வதாலேயே மனிதஇனம் ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபடுகிறது.
காலாச்சாரம் என்பதன் ஆணிவேர் முறையான காமம் என்பதுதான். ஒழிய வேறேதும் இல்லை
கலாச்சாரத்தை வடிவமைத்திராவிட்டால் மனிதனின் ஆயுள்காலம்
இருபதைத் தாண்டியிருக்காது.

Wednesday, 9 December 2009

நுண் காலநிலை (Microclimate )

இப்பொழுது இலங்கையில் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை ஆரம்பித்திருக்கிறது. மழை உக்கிரமாகப் பெய்யாவிட்டாலும் சராசரியாக வயல்களுக்குப் போதுமான அளவில் பெய்கிறது. மழை பிந்தி போய்விட்டதால் வயல்களும் பிந்தியே விதைக்கப்பட்டன. பயிர் வளரும் ஆரம்பப் பருவத்தில் அளவுக்கதிகமான மழை சேதத்தையே உருவாக்கும். ஆக மழை அளவாகப் பெய்வது இன்று வரை நன்மையே. இன்னும் சிறிது நாட்களில் உக்கிரமடையுமானால் அது நல்லது. ஆனால் யாழ் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் ஒரே அளவு மழை பெய்வதாகத் தெரியவில்லை. இடங்களுக்கு இடம் மழைவீழ்ச்சியின் அளவு பாரிய அளவில் வேறுபடுகிறது. பிரதேசங்களுக்கிடையேயான தூரத்துடன் ஒப்பு நோக்கும்போது இவ்வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக குறித்த ஒரு நாளில் நெல்லியடியில் நல்ல மழை பருத்தித்துறையில் மழை இல்லை. இவ்வாறு பல இடங்களில் பல தடவை. உகைப்பு மழையின் போது இவ்வாறான நிலைப்பாடு இருப்பது வழமை. கடலை அண்டிய பிரதேசங்களிலேயே மழை இருக்கும். ஆனால் பருவ மழையில் இந்த நிலைமை சற்று வித்தியாசமாக இருக்கிறது. Micro climate இன் போதே இந்நிலை தோன்றும். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது Micro climate ஆ இல்லையா என்பது
எனக்குத்தெரியாது.

அது சரி அதென்ன Microclimate ?

நுண் காலநிலை என தமிழ்ப் படுத்தியிருக்கிறேன். சரியா பிழையா என பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். குறிப்பிட்ட ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் காலநிலையிலுள்ள உள்ள வித்தியாசம் Microclimate எனப் படுகிறது . குறுகிய பிரதேசம் என்பது எவ்வளவு என வரையறுக்கப் படவில்லை. அது ஒரு அனுபவ அறிவின் மூலம் வரையறுக்கப் படுகிறது. குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றர், குறித்த சதுர மீற்றர் என மாறுபடும் சந்தர்ப்பத்துக்கேற்ப.
Microclimate ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

கட்டங்கள், தொழிற்சாலைகள்
கட்டங்கள் பெருமளவு வெப்பத்தை வெளிவிடக் கூடியன. தொழிற்சாலை களிலும் வெப்பம் பெரிய அளவில் வெளியேற்றப்படுகிறது. இவை குறுகிய பிரதேசத்துக்குள் காலநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. நகரப் பிரதேசங்களுக்கும், அதனை அண்டியுள்ள நகர மயமாக்கபடாத பிரதேசங்களுக்கும் இடையில் பாரிய அளவு காலநிலை வித்தியாசம் இருப்பது இதனாலேயே.

நீர்த்தேக்கங்கள்
ஆவியாதல், நீரோட்டங்கள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள். இதற்கு நல்ல உதாரணம் எமது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிரதேசம். இரத்தினபுரி மாவட்டத்தில் சமனல நீர்த்தேக்கம் உள்ளது இப்பிரதேசத்தில்தான். பாரிய ஒரு நீர்த்தேக்கம். இப் பிரதேசத்திலுள்ள கால நிலை மாற்றம் எதிர்வு கூறப்படுவது மிகவும் கடினமாகவே உள்ளது. ஒரு ஒழுங்கான காலநிலை இப்பிரதேசத்தில் நிலவுவதில்லை. இக்காலநிலை மாற்றங்களை GIS மூலம் விபரிக்கும் ஆய்வுகளை செய்வதில் சபரகமுவ பல்கலைக்கழக பூகோளவிஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தரைத் தோற்ற அமைப்புக்கள்.
மலைப் பிரதேசங்களிலேயே இந்த நிலை இருக்கும். காற்று ஒதுக்குப்பக்கம் காற்றுப் பக்கம் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள். இது பற்றி சிறிய வயதில் புத்தகங்களில் வாசித்திருப்போம்.

மண்ணின் தன்மை
மண் கொண்ட கனியுப்புக்கள் வெளிவிடும் கதிர்ப்புக்களும் வளி மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் பருவ மழையின்போது இவ்வாறான மாற்றங்கள் ஏன் என்றுதான் தெரியவில்லை.

இன்று ஒரு படம்

Saturday, 5 December 2009

தெய்வீகக் காதல்நீ அழகிதான்
உன் அழகில் நான் மயங்கியது உண்மைதான்
உண்மையைச் சொன்னால் ......
உன் அழகால்தான் உன்னை காதலிக்கவே ஆரம்பித்தேன்
ஆனால்.... உன்னை நேசிக்கத் தொடங்கிய பின்
உன்னைவிட அழகிகளை
பார்த்து ரசிப்பதைக் கூட நிறுத்திவிட்டேன்.
என் காதல் தெய்வீகமானதில்லைத்தான்.
புனிதம் இல்லைத்தான்.
ஆனால் நடைமுறையானது.
பி.கு :- குட்டிப் பதிவாகப் போனாலும் தனிப் பதிவாக கொடுக்க வேண்டும் போல இருக்கிறது இந்த உண்மையைச் சொல்ல.


Friday, 4 December 2009

A9 அவலங்கள்

பல்கலைக்கழக விடுமுறை நிறைவுபெற்றதால் வீட்டிலிருந்து புறப்பட்டு வவுனியாவுக்கு வந்துவிட்டேன். நாளை புறப்படுவோம் இன்று வவுனியாவில் தங்குவோம் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டேன். வந்த களைப்பு வேறு.நெருங்கிய உறவினர்ஒருவரும் அங்கு வசித்து வருவதால் தங்குவது சாத்தியமாகவும் இருந்தது. அடுத்தநாள் மத்தியானம் பல்கலைக் கழகத்திலிருந்து கூட்டாளி ஒருவன் "கம்பசுக்கு அவசரப்பட்டு வராதை சிலவேளை பூட்டுவாங்கள் போல கிடக்கு பண்டிக் காய்ச்சல் பிரச்சனையாம் ".கிழிஞ்சு போட்டுது . சீ..... ஒரு நாள் பிந்தி வீட்டிலிருந்து வெளிக்கிட்டிருக்கலாம் போல இருந்தது. "எப்பிடியும் இண்டைக்கு இரவுக்குத் தெரியவரும் இல்லாட்டி நாளைக்கு விடிய...... எதுக்கும் பாத்துப்போட்டு வா "என்று மேலதிகதகவல்கள்நண்பர்களிடமிருந்து. நானும் இரவு ஏதும் தெரியவரும் என்ற எதிர்பார்ப்போடு பல பேருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதும் என்ன செய்யப் போறாங்கள் என யாருக்கும் எதிர்வு கூறத்தெரியவில்லை. இரவே தெரிந்து கொண்டால் அடுத்த நாள் விடியவே வெளிக்கிட்டு பல்கலைக் கழகம் போகலாம் இல்லாட்டி வீட்டை(யாழ்ப்பாணம்) போகலாம்என நினைத்திருந்தேன். பயன் இல்லை. என்னசெய்வது? அன்று இரவும் வவுனியாவில் தங்கியாகிவிட்டது.

அடுத்தநாள் விடிந்த கையோடு நண்பன் ஒருவன் பல்கலையிலிருந்து "மச்சான் இண்டைக்கு பூட்ட மாட்டாங்கள் போலைகிடக்கு. doctor சொன்னவராம் இன்னும் இரண்டு நாள் பாத்திட்டுப் பூட்டுவமேண்டு". இனியும் இஞ்ச நிக்கேலாது வெளிக்கிடுவம் என முன்பகல் 10.௦௦ 00 மணிக்கு வெளிக்கிட்டேன். இரத்தினபுரிக்கு செல்ல வேண்டும் . கொழும்புக்கு சென்று அங்கிருந்து செல்வதே இலகுவானது. வவுனியாவிலிருந்து ரெயினில கொழும்புக்கு செல்வது பஸ்ஸை விட இலகுவானது. சோதனைச்சாவடிக் கெடுபிடிக்களே காரணம். ஆனால் நான் வெளிக்கிட்ட நேரத்துக்கு ரெயின்(புகையிரதம் தவறாக மழை எண்டு நினைக்காதேங்கோ )இல்லை. நல்ல மழை பெய்துகொண்டிருக்க வவுனியாவிலிருந்து ஆட்டோ ஒன்றில் பேருந்துத் தரிப்பிடத்துக்கு சென்றாகிவிட்டது. அங்கு ஒரு செக்கிங் பொலிசாரால். அப்பிடியே ஈரப்ப்பெரிய குளத்தில் ஒரு செக்கிங். அப்பிடியே மதவாச்சியில் ஒரு செக்கிங். மூன்று தரம் சோதனை வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் . அதில் ஈரப்பெரிய குளத்தில் அடையாள அட்டையைக் காட்டி பதியவேண்டும்." IDP camp ?" என ஒவ்வொருவரிடமும்கேள்விகள்.முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிப்போட்டும் அந்தக் கேள்விகள் என்னத்துக்கோ தெரியல்லை. மதவாச்சியை அடைந்தபோது 12 .00 ௦௦ இருக்கும். எதுக்கும் சாப்பிட்டு கொழும்பு பஸ்ஸில் ஏறுவம் எனத் தோன்றியது. சாப்பிட்டு முடிக்கும்போதுதொலைபேசியில் "டேய் கம்பஸ் பூட்டியாச்சு"திரும்பவும் வவுனியா செல்ல வேண்டிய கட்டாயம்.

வவுனியாவிலிருந்து அடுத்த நாள் விடிய யாழ்ப்பாணம் போவம் என விடிய ஒரு 8.30 மணிக்கு ஆயத்தமாகி விட்டேன். "சாப்பிட்டு போடா" என்ற உறவினர்களின் அன்புத் தொல்லையை புறக்கணிக்காது காலைச் சாப்பாடு கொஞ்சம் சுணங்கி வர வெளிக்கிட 9.30 ஆகிவிட்டது.கொஞ்சம் பிந்தீட்டுதோ என உள்ளுக்குள் ஒரு உறுத்தல். ஈரப்பெரிய குளம் வந்தாச்சு. அவ்வளவு சனம் இல்லை. நானும் போய் வரிசையில் இணைந்து கொண்டேன். அதில் இரண்டு வரிசை நின்றது. அதிகமாக ஆட்கள் நின்ற வரிசையில் நான் இணைந்து கொண்டேன். சிறியஅந்த மற்ற வரிசை பிறகு வந்தஆட்கள் உருவாக்கிக்கொண்ட கள்ள வரிசையாக்கும் என எண்ணிக்கொண்டேன். வரிசை முன்னேறுகிறது. நானும் கிட்டக் கிட்ட வந்திட்டன். திடீரென்று ஆட்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த இராணுவத்தில் ஒருவன் ஏன் இரண்டு வரிசை என சிங்களத்தில் கத்தினான். எங்கட வரிசை பிழை என்று சொல்லி அந்த வரிசையில் நின்ற அத்தனை பேரையும் குட்டியா நின்ற அடுத்த வரிசைக்கு அனுப்பினான். பிறகென்ன நாங்களும் அடுத்த வரிசையோடு ஐக்கியமானோம். அடுத்த வரிசைக்கு ஓடிப்போய்த்தான் எல்லோரும் இடம் பிடித்தார்கள் . நான் முன்னுக்கு நின்றதால் விரைவாக இடம்பிடிக்க முடியாமல் கடைசியாகப் போய்விட்டேன் அந்த புதிய வரிசையில்.

சிறிது நேரத்தில் எமது பல்கலையில் படித்து வெளியேறி அரசாங்க நில அளவையாளராகப் பணி புரியும் அண்ணா ஒருத்தரும் எனக்கு சிறிது பின்னால் வந்து இணைந்துகொண்டார்.பெயர் பத்தன் கண்டியிலிருந்து வருவதாக் சொன்னார். முன்னமே அறிமுகமானவர். கொஞ்சநேரம் சென்றிருக்கும் முன்னேறுவது நின்றிருந்தது. வந்த பஸ் எல்லாத்திலையும் ஆட்களை எத்தியாச்சாம் இனிமேல் பஸ் வந்தாத்தான்ஆட்களை எடுப்பார்களாம் . ஆனால் எப்பிடியும் போகலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இதுவரை வந்த ஒருத்தரையும் யாழ்ப்பாணத்தில் திருப்பி அனுப்பவில்லை எனஅறிந்திருந்ததால் இங்கேயும் அவ்வாறுதான் என நினைத்தேன். அங்குள்ள சில நபர்களிடமும் இதை தெரிவித்தேன். இப்படி சனத்துக்கு நம்பிக்கையூட்டியதால் ஒரு அண்ணாவும் ஒரு அக்காவும் என்னோட நண்பர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களோட கதைச்சு பொழுதை போக்காட்டிக் கொண்டிருந்தேன். அந்த அண்ணை ஒரு பொறியியலாளர். பெயர் சுதர்சன். அக்கா பேராதனையில் M.Sc செய்பவர். அரட்டை அடித்துக்கொண்டு இருக்கையில் திடீரென்று இனி ஆட்கள் எடுக்கபட மாட்டார்கள் என இராணுவத் தரப்பிலிருந்து அறிவித்தல். எல்லாற்றை முகமும் ஒரேயடியா வாடிப்போனது. எனக்கு இடி விழுந்தது போல இருந்தது. ஆனால் வந்த எல்லோரும் இன்று பதிந்து கொண்டால் பஸ்ஸில் நாளைக்கு வேளைக்கே ஏற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து கொண்டு பஸ்ஸை தவறவிட்டது ஒரு மாதிரியாக இருந்தது. திரும்ப வீட்டுக்கு போகவெட்கமாகவும் இருந்தது.

பதிவுகளை மேற்கொள்ள அதே வரிசையில் நின்றோம். பத்தன் அண்ணாவைக் கேட்டேன் எங்கே தங்குவம் என . வவுனியா நிலஅளவையாளர் விடுதியில்தங்கலாம் தன்னுடைய நண்பன் அங்கே இருப்பதாகசொன்னார். அல்லது வவுனியா வாடிவீட்டில தங்கலாம் என்று யோசனை சொல்ல சுதர்சன் அண்ணாவும் வாடி வீட்டில் தங்குவதென்றால் தானும் வருவதாக சொன்னார்.
மூவரும் பதிவுகளை முடித்துவிட்டு சோதனைச் சாவடிக்குஅருகாமையிலுள்ள கடை ஒன்றுக்கு தேநீர் அருந்தலாம் என செல்கிறோம்.

அந்தக்கடை ஒரு வயதான ஆச்சியுடையது . அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது தங்க இடம் இல்லை என்றால் தனது கடைக்குப் பக்கத்திலுள்ள அறையில் தங்கலாம் என்றார். அனால் மண் நிலம்தான் என முற்கூட்டியே கூறி விட்டார். அப்போது ஒரு வியாபாரி ஒருத்தரும் அங்கே தங்குவதற்காக வந்திருந்தார் . அவரின் தாய்மொழிசிங்களம். பெயர் ரவி. நாங்கள் தங்குவது என உறுதியாகிவிட்டது.
நாங்கள் தங்கிய அறை

குளிக்க வேண்டுமெனின் பக்கத்தில் குளம் இருப்பதாகவும் அங்கு செல்லலாம் என்றார். ஈரப்பெரியகுளம் ஈரப்பெரியகுளம் எண்டு சொல்லுற அந்தக் குளத்தில்
குளிக்கும் வாய்ப்பும் கிட்டியது.ரவியையும் எம்மோடு சேர்த்துக்கொண்டோம். நம் நால்வருக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு அமைதியாக மலர்ந்திருந்தது. நானும் பத்தன் அண்ணாவும் மாத்திரமே முதலே அறிமுகமானவர்கள்.

ஈரப்பெரியகுளம்

குளித்துவிட்டு வந்தபோது வேறுசில பெண்களுக்கும் ஆச்சி இடம் கொடுப்பதற்காக வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றார். ஆச்சியை விசாரித்ததில் அவருடைய மகன் இராணுவத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர்.

இரவு சாப்பிடுவதற்காக வவுனியா சென்று சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தோம். ஆச்சியின் வேண்டுகோளுக்கிணங்க தனது வீட்டில் தங்க வைக்கப்பட்டபெண்களுக்கும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தோம்.

என்னதான் பயணம் பிந்திப்போனாலும் நல்ல நட்பும் ஆச்சி போன்ற நல்ல உள்ளங்களையும் கிடைத்த திருப்தி வீடுவந்தபோது.

.........................................................................
மேலும்

எங்கும் தமிழர்களை வரிசையில் நிறுத்த அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பது விரக்தியை ஏற்படுத்துகிறது
.
யாழ்ப்பாணத்தில் வவுனியா செல்லக் காத்திருப்போர்

மழை வரும்போது வரிசையில் பிரயாணத்திற்கு காத்திருப்போர் பாடு பெரும்பாடாய்க் கிடக்கிறது . எப்போது நீங்கும் காத்திருப்பு என்ற ஏக்கம்
மழை பெய்து ஒரே சேறாக சிங்கள மகா வித்தியாலயம்


Tuesday, 13 October 2009

அப்ப வரட்டே.

...................................................................................
இடத்தை பிடிக்கோணும்
இல்லாட்டி கீழை இருந்துதான்
தீபாவளி எண்டபடியால் நல்ல சனம் என்ன ?????
ஏறடா ஏறடா ரெஜின் ..........
ரகு எங்கை நிக்கிறாய் ????
இஞ்சி கடைசிப் பெட்டிக்கு கிட்டகெதியா வாடா ....
சுரேஷ் எங்கடா ??
ஆரோடையோ போனில கதைக்கிறாண்டா .
சனியன் திருந்தாது .
சரி சரி வந்திட்டன் வந்திட்டன்.
பராஜ் ஆக்களுக்கு சீற் கிடைக்கல்லை....
ஆடிக் கொண்டு நிண்டவங்கள்
கீழை இருந்து வரட்டும் .......மதி
எங்க போனாலும் சிலோதாண்டா அவன் ... கஜன்
குமணன் வந்தால் ஆருக்கும் சீர்கிடைக்காமல் போகும் ...
பிந்தி ஏறீற்று பராஜ் சொன்ன நியாயம்.
......
.................
...............
.................................................................................
என்ன அப்பிடிப் பாக்கிறீங்கள் ? வேறை ஒண்டும் இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு (யாழ்ப்பாணம்) செல்கிறேன் . இதன் காரணமாக பதிவுலகத்தை விட்டு ஒருமாதம் தூரத்தில் இருக்கப் போகிறேன்.
சரி போட்டுவாறன் எல்லாருக்கும். வந்து சந்திக்கிறன் . அப்ப வரட்டே ........

Saturday, 10 October 2009

ஏமாற்றினால்.....

அண்மையில் எனது தொலைபேசி இலக்கத்தை மாற்றினேன்.இந்தப் புது இலக்கம் மூலம் ஏமாற்றும் ஒரு படலத்தை எமது மட்ட தோழர்கள் எல்லோருமாக சேர்ந்து அரங்கேற்றினோம். பல்கலைக்கழகத்தின் எமது நட்புவட்டம் இதில் சிக்கி சின்னாபின்னமானது. ஒவ்வொருவரைப் பற்றியும் நன்கு தெரியும் என்பதால் அவர்களுடைய தற்போதைய தேவையைப் பொறுத்து ஏமாற்றினோம். தொலைபேசியில் உரையாடி அதனை பதிவு செய்து (record) கொண்டு மீண்டும் மீண்டும் கேட்டு அந்த உரையாடல்களை ரசித்ததில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள் இதில் சிக்கியவர்கள் எப்படியும் ஒரு முப்பது பேரிலும் கூட.
பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியேறிய சகோதரர்களை ஏமாற்ற வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தை பலத்த அளவில் கையாண்டோம். தனியார் நிறுவனங்களில் இவர்கள் ஏற்கெனவே பயிற்சிக் காலத்தில் (Trainig period) பணிபுரிந்ததாலும் இவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் வெளியே செல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்ததாலும் எங்களை நம்பி விட்டார்கள். நீண்ட நாட்கள் எம்முடன் பழகியிருந்தாலும் அவர்களோடு தாய்மொழியில் உரையாடாததால் அடையாளம் காண முடியாது போனது.
மேலும் சிலருடனான உரையாடல்கள் இவ்வாறான சொந்தத் தேவைகள் என்று இல்லாமல் வெறும் நகைச்சுவை சார்ந்ததாக போனது. இப்படியான தொலைபேசி ஏமாற்று நிகழ்வுகள் என்பது ஒரு சாதாரணமான விடயம்தான் ஆனால் பலர் இதில் மாட்டிக்கொண்டது எங்களுக்கு எதோ சாதித்தது போன்ற உணர்வைத் தோற்றியிருந்தது . பைத்தியம் பிடித்தவர்கள் போல இதே வேலையானோம். study leave காலம் என்பதாலும் எல்லோரும் விடுதிகளில் தங்கியிருந்தே படிப்பதால் யாருக்கும் போர் அடித்தால் மச்சான் "வாடா ஆருக்கும் ஆத்தல் குடுப்பம் " என ஒன்று சேர்ந்து கலாய்த்தோம். என்னதான் ஏமாற்றினாலும் சொந்தத் தேவை விடயத்தில் ஏமாற்றப்பட்டோருக்கு உண்மையைக் கூறினோம். சிலர் ஊகித்துக்கொன்டார்கள். அத்தோடு உரையாடல் பதிவுகளும் (Recodings) சூப்பர் ஹிட்ஸ் ஆனது. கொஞ்ச நாட்களுக்குப் பின் எல்லோருக்கும் எங்களுடைய வேலை பற்றி தெரிய வந்ததால் நிறுத்திக்கொண்டோம்.
சிறிது நாட்களின் பின் ............
அனேகமாக நானே இந்த உரையாடல்களில் கலந்து கொண்டதால் எதோ ஒரு குற்ற உணர்வு போன்ற ஒரு தோற்றப்பாடு. ஏமாற்றப்பட்டோரிடமிருந்து தூரமாகிவிடுவோமோ என்ற யோசனை மனதை உறுத்தியது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் " உங்களில சரியான கோபம் எந்த விடயத்தில விளையாடுறது என்று ஒரு கணக்கில்லையோ " எனக் கேட்டது என்னவோ போலானது. இவ்வாறு வெளியில் உண்மையைக் கூறாது எத்தனை பேரின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறேனோ தெரியவில்லை என்ற யோசனை அடிக்கடி வந்து போகிறது. தனிமைப் பட்டது போன்ற ஒரு உணர்வு
பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளும் சிறந்த விடயங்களில் முதலாவது நட்பு. இவ்வளவு காலம் இருந்துவிட்டு இறுதிக் காலத்தில் அந்த இனிய நட்பு வட்டத்தில் அநேகமானோரிடமிருந்து அப்பாற்பட்டு விடுவோமோ என்ற பயம் ஆட்கொண்டிருக்கிறது.
நகைச்சுவை, நகைச்சுவைக்காக ஏமாற்றுதல் என்பவற்றின் வரையறைகள், எல்லைக் கோடுகள் தெளிவாகப் புரிந்திருக்கின்றன பல உள்ளங்களை நோகடித்து.
ஒரு நகைச்சுவை ஆயிரம் பேரை சிரிக்கவைத்த போதும் ஒருவனை அழ வைக்கிறது என்றால் அது நகைச்சுவை என வரையறுக்கப்பட முடியாது.நீ, நான், காதல் ????

மேல்வானம் பூப்படையும் மாலைவேளை ,
உனது சைக்கிளை தோழி வீட்டில் விட்டுவிட்டு
என்னோடு டபுள்ஸ் வரும் காதல் மீதான அக்கறை ,
என் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருக்கும் நீ,
நான் செய்யும் சில்மிஷங்களை எதிர்க்கின்ற வெட்கம் ,
கைகோர்த்து காலாறும் நகர சபைப்பூங்கா,
கொப்பரைக் கொண்டுவிட்டு ஒழித்த குளக்கட்டு,
"நம் காதலை வீட்டில் சொல்லப்போறன்" என
பீதியைக்கிளப்பும் உன் குறும்பு ,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தே
மௌனத்திலேயே கழிந்துவிட்ட பொழுதுகள் ,
இதிலே
எதுவுமே நடக்கவில்லை
இவையெல்லாம் கற்பனையிலும் கனவிலும்
வந்து போகும் எதிர்பார்ப்புக்களாய் போனாலும் .........................

உனக்கு சாப்பாடு பரிமாறியபோதில் இடம்பெற்ற முதல் உரையாடல்,
எங்கு போனாலும் உனது வீட்டடியால் அமைத்துக்கொண்ட என் பயணங்கள் ,
உன் அக்காவின் திருமணத்தில்
நான் நிற்கும் புகைப்படத்தில் நீயும் ஒருத்தியாய் ,
முடிவு கேட்டபோது நடந்தேறிய வினோதம்,
அதன் பின்னர் என்னை முறைத்த உன் பார்வை .

போன்ற நிஜங்களால் மனது நிம்மதியாய் ..........

உருகி உருகிக் காதலித்து நான் உருக்குலைந்து போகாவிட்டாலும்
சில நினைவுகள் கொஞ்சம் ஏக்கத்தைத்தர மறுக்கவில்லை.
நான் உன்னவன் என்று நீ எண்ணுமளவுக்கு எதுவுமே நடக்கவில்லை
அதே போல் நீ என்னவள் என்று சொல்லுமளவுக்கு
என்னுடைய சொத்தாகிப்போன வலைப்பதிவின்
கடவுச்சொல்லாய் உன்பெயர் .............

Tuesday, 6 October 2009

சக்தி SUPERSTAR SEASON 3 ஒரு பார்வை

மீண்டும் சக்தி குழுமத்தின் நல்ல முயற்சி. இலங்கையின் இளம்பாடகருக்கு முடி சூட்டும் விழா. சிறப்பாக நடைபெற்று முடிந்த season 1, season 2வைத் தொடர்ந்து season 3 விமரிசையாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது . தொலைக் காட்சியில் பார்க்க சந்தர்ப்பங்கள் இல்லாமையால் வானொலியில்தான் கேட்டுவருகிறேன்.சில விடயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் சில விடயங்கள் என் இப்படி? என்ற ஆதங்கத்தையும் தருகிறது.
முதலாம் இரண்டாம் சுற்றுக்கள் .......
10 000 பேர் கொண்ட முதலாவது சுற்றிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றிற்கு அனுப்பப்பட்டு மூன்றாம் சுற்று 100 பேராக சுருக்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது.முதலாம் இரண்டாம் சுற்றுகளில் தேர்வாகாத போட்டியாளர்களில் மாற்றக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டோரின் கருத்துக்களையும் ஒலி, ஓளி பரப்பி நிகழ்ச்சியை பார்க்காமல் கேட்காமல் இருந்தவர்களையும் பார்க்க வைக்க சக்தி நல்ல யுக்தியைக் கையாண்டது. நடுவர்களை கடுமையாக சாடினார்கள் அந்தப் போட்டியாளர்கள். ஒரு ரசிகனாக போட்டியை ரசித்ததில் நடுவர்கள் எந்தப் பிழையான தீர்ப்பையும் வழங்கியதாக எனக்குத் தோன்றவில்லை.பாடகர்களை அவர்கள் தெரிவு செய்யும் விதமும் கூறிய அறிவுரைகளும் அவர்களின் திறமையையும் நல்ல நடுநிலைமையையும் உணர்த்தியது. தேர்வாகாத போட்டியாளர்கள் சிலபேரின் வார்த்தைகளில் காணப்பட்ட அமிலம் சற்றுக் கூச வைத்தது. இந்த வார்த்தைகளுக்கு சிலர் கைதட்டி உற்சாகமும் அளிக்கிறார்கள். பெண்களை நடுவர்கள் உடனே தெரிவு செய்கிறார்கள் என்ற விடயம் மாற்றுக்கருத்துடையோரின் கருத்துகளில் பெரும்பான்மையாகத் தொனித்தது. நன்றாகப் பாடிய எவரையும் நடுவர்கள் தேர்வு செய்யாது விட்டதாக ரசிகர்களாகிய எமக்கே புரிகிறது . ஆனால் போட்டியாளர்கள் ?????
நல்ல கலைஞனாக ஒருவன் உருவெடுக்க வேண்டுமெனின் சுய மதிப்பீடு என்ற விடயம் நன்றாக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் ஏற்காது என்பது இரண்டாம் பட்சம், முதலில் தன்னுடைய பிழைகளை மற்றவர்களைவிட முன்பதாக அடையாளம் காணப் பழகவேண்டும். இசை என்கிற உன்னத கலையை வெளிப்படுத்த வந்தவர்கள் நல்ல பண்புகள் இல்லாதவர்கள் ஆகின்றபோது அவர்களுடைய இசை கூட கணக்கில்லாமல் போய்விடும். கலைஞர்கள் புரிந்து கொள்ளுங்கள். நாகரிகத்தைப் பேணுங்கள். ஆனால் இந்த சிக்கல்கள் இனிவரும் சுற்றுக்களில் இடம் பெற சாத்தியகூறுகள் குறைவு போலத்தான் தெரிகிறது.

100 பேர் கொண்ட பிரமாண்டமான சுற்றில் .........
மூன்றாம் சுற்றில் பாடகர்கள் பின்னணி இசையோடு பாடல்களை பாடுகின்றனர். நண்பர்களோடு நிகழ்ச்சியைக் கேட்கின்றபோது "இந்தியாவில் என்ன மாதிரிப் பாடுறானுங்கள் இவங்கள் எங்கை ....." என்று அலுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு மோசமாகப் பாடுகிறார்களா இலங்கைக் கலைஞர்கள் ? ஏன் இந்தத் தோற்றப்பாடு??
நன்றாக அவதானித்தால் பாடகர்களில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. கோளாறு இருப்பது பின்னணி இசையில். கோளாறு என்பதற்காக அவர்கள் இசையைத் திறமையாக வழங்கவில்லை என கூறவில்லை. இசைக்கப்படும் பின்னணி இசை Original Backround Music ஐ ஒத்ததாக இல்லாதிருப்பதே இதற்குரிய காரணம் போல தோன்றுகிறது. இசைக்கு பொறுப்பானவர்கள் ரட்ணம் குழுவினர் என நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் அனைவரும் திறமையான கலைஞர்கள். வழங்கப்படும் பின்னணி இசை பாடகர்களின் சுருதி ,லயம் என்பவற்றைப் பேணுவதற்கு எனப் புரிகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டை எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அத்தோடு சில பாடல்களுக்கு வழங்கப்படும் தாள வாத்தியமாக பொருத்தமில்லாத வாத்தியங்களைப் பாவிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு தடவை " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை " பாடலுக்கு கொங்கோ ட்ரம்ஸ் தாள வாத்தியமாக ஒலித்தது ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையை ஏற்படுத்தியது.மேலும், வழமையாக இலங்கை இசைக் குழுக்களில் வீணையின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் தென்னிந்திய திரையிசையில் வீணை பல இடங்களில் கையாளப்படுகிறது. வீணையின் இசையை வேறு வாத்தியங்கள் மூலம் இசைக்க முற்படல் என்பது பனை மரத்தில் தேங்காய் பறிக்க நினைப்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. புல்லாங்குழல் வீணை போற வாத்தியங்களை பயன்படுத்துங்கள்.

அகவே இவ்வாறான சில விடயங்களை இசைக்குழுவினர் கருத்திற் கொண்டால் சக்தி SUPER STAR உலக அளவில நல்ல வரவேற்பைப் பெறலாம்

Saturday, 3 October 2009

இலங்கை நில அளவைத் திணைக்களமும் தியத்தலாவைப் பயிற்சிக் காலமும்.இலங்கை நில அளவைத் திணைக்களம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் . இலங்கையில் உள்ள பழம்பெரும் வேலைத் திணைக்களங்களில் ஒன்று. இத் திணைக்களத்தில் பணியாற்ற ஒரு அரசாங்க நில அளவையாளரை உருவாக்குவதற்கு தியத்தலாவையில் பயிற்சி நெறி உள்ளது . BDC எனப்படும் இந் நெறி இரண்டு வருட கற்கைக் காலத்தைக் கொண்டது. பௌதீக விஞ்ஞான (Phisical Science)கற்கையை பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்களை உள்வாங்கி இந்த பயிற்சி நெறி போதிக்கப் பட்டுவந்தது. மேலும் B.SC ( Surveying Science ISMD) எனும் பட்டப் படிப்பும் உள்ளது .(ISMD - Institute of Surveying and Mapping Thiyathalawa).

நில அளவைத் திணைக்களத்திற்கு இலங்கை சபரகமுவப் பல்கலைக் கழக பூகோள விஞ்ஞான பீடத்தில்( Faculty of Geomatics) B.SC (Surveying Science) நெறியை நிறைவு செய்த மாணவர்களும் உள்வாங்கப் படுகிறார்கள். பூகோள விஞ்ஞான பீடத்தில் இக் கற்கைநெறி நான்கு வருட காலத்தைக் கொண்டது. கற்கையை நிறைவு செய்து இறுதி மூன்று மாதங்களுக்கு மாணவர்கள் ஒரு நில அளவையாளராக தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பூகோள விஞ்ஞான பீடத்திலிருந்து வெளியேறுவோரை நில அளவைத் திணைக்களத்திற்கு வேலைக்கு அனுப்ப முன் தியத்தலாவையில் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி நெறி ஒன்று உள்ளது . திணைக்கள நடைமுறைகள் தனியார் நிறுவன நடைமுறைகளுடன் வேறுபடும் என்பதால் அப்பயிற்சி நெறி அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அங்கு பயிற்றப் படும் விடயங்கள் கேலிக் கூத்தாக உள்ளன.

திட்டப் படம் (plan) ஒன்றை கையால் வரையும் பயிற்சியை வழங்கி பட்டப் படிப்பு முடித்தோருக்கு ABCD எழுத கற்றுக் கொடுக்கிறார்கள். தொழில் நுட்ப கணணி வளர்ச்சியில் நில அளவைத்தினைக்களம் எத்தனையோ வருடங்கள் பின்னே நிற்கிறது. நில அளவைத் துறையை கற்காதவர்களுக்கே இவ்விடயம் சிரிப்பாக இருக்கும். எத்தனை மென்பொருள்கள் எத்தனை புதிய சிந்தனைகள் வளர்ச்சியடைந்த இக் காலத்தில் பாரம்பரிய முறைகளை பேண நினைப்பது எவ்வளவு மோட்டுத் தனமானது. நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்து திணைக்களத்தை நவீன மயப் படுத்தாவிடின் இலங்கையில் நில அளவையாளராக பணி புரிய யாருமே முன்வரமாட்டார்கள் .

Friday, 25 September 2009

உலகை ஆளும் GIS - பகுதி 1

GIS எனும் பதம் பல இடங்களில் பாவிக்கப் படுவதை இன்றைய நாட்களில் உணரமுடிகிறது. அது என்ன GIS ??? பலருக்குத் தெரிந்திருக்கலாம் .இருந்தாலும் ஒரு தொடராக இப்பதிவை எழுத இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே நகர்த்திச் செல்லாலாம் என இருக்கிறேன்.


GIS - Geographical Information System -புவியியல் தகவல் முறைமைகள்

புவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை கையாள்வதற்குரிய கணணி மயப்படுத்தப் பட்ட ஒரு முறைமை என்று கூறலாம். புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க சேகரித்தல் (Data collection) , சேமித்தல்(save) , பகுத்தாய்தல்(Analyize), மேலாண்மை(Management) செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை .ஆகும் ஒரு வரைபடம் (map) மூலம் குறிப்பிட்ட தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் GIS என்பது ஒரு பலநோக்குக் கொண்ட ஒரு தொகுதியாகும். (multypurpose). முக்கியமாக பகுத்தாய்தல் எனும் தேவைப்பாட்டை நிறைவேற்ற சிறப்பான ஒரு தொகுதி GIS இற்கு நிகர் எதுவும் இல்லை.புவியியல் தகவல்கள் தொடர்பான ஆய்வுகளில் GIS இன் பங்கு அளப்பரியது. மேலும் மருத்துவம் , பாதுகாப்பு, நகரத்திட்டமிடல் என்று இதன் வீச்சு மிகவும் பெரியது. GIS இனுடைய பாவனை பயன்பாடுகள் என்ன ?? என்பது பற்றி விரிவாக ஒரு பகுதயில் பேசுவோம். அதற்கு முன்பதாக அடிப்படை விடயங்களை முதலில்விளங்கிக் கொள்ளல் அவசியமானது .
தரவு (Data) , தகவல் (Information) இவையிரண்டுக்கும் இடையேயான வேறுபாடு என்ன ?? தரவுகள் எனப்படுபவை உள்ளீடு (input), தகவல் எனப்படுவது வெளியீடு (output) . தரவுகள் மூலம் எந்த முடிவுகளும் அணுக முடியாது. தகவல்கள் மூலமே முடிவுகள் எட்டப்படலாம். தகவல்களை உருவாக்குவதற்காக சேகரிக்கப் படுபவையே தரவுகள். தரவு ,தகவல் என்பது எல்லாத்துறையிலும் ஒரு முக்கியமாக இருப்பது போல GIS இலும் முக்கியமானது.உதாரணம் :-

தரவு - ஒரு இடத்தை நில அளவை செய்து அதை ஒரு வரைபடமாக (plan/map) ஆக மாற்ற முதல் அதன் வடிவம். இதன் மூலம் ஒரு சாதாரண பயனாளரால் (user) எந்த விடயத்தையும் உணர முடியாது.


நில அளவை செய்யப் பட்டு வரைபடமாக மாற்ற முதல் அதன் வடிவம்.
தகவல் :- மேலே நில அளவை செய்யப்பட்ட இடத்தினுடைய வரைபடம்.(plan).நிறைய எழுதி அலுக்கவைக்காமல் முதலாவது பதிவை சுருக்கமாக நிறைவு செய்கிறேன். இன்னும் GIS என்ற தலையங்கத்துக்குள் சரியாக புகவில்லை. தொடர்ந்து வரும் பதிவுகளில் நிறைய ஆராய்வோம். என்னுடைய இந்த புது முயற்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என பின்னூட்டத்தில் அவசியம் தெரிவிக்கவும்.

Sunday, 20 September 2009

என்னைப் பாத்து எண்டாலும் திருந்துங்கோவன்

நிறைய கெட்ட பழக்க வழக்கங்கள் என்னிடம் இருந்தன. ஒன்றா இரண்டா ஊருப்பட்ட கெட்ட பழக்கங்கள். ஆனால் ஒரு மாதத்தில திருந்திவிட்டன். அதோட சில நல்ல பழக்கங்களையும் பழகிவிட்டன்.எப்பிடி திருந்தி இருக்கிறன் தெரியுமே?01) குடியை விட்டிட்டன் எண்டே சொல்லலாம்.
02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
03) சிகரெட்டை நிப்பாட்டியாச்சு.
04) Engilish improve பண்ணியாச்சு.
05) first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.


இப்பிடியெல்லாம் சாதிச்ச அடியேன் பெரிய ஒண்டும் .....................


௦6) பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.

இதெல்லாம் ஒரு மாதத்தில எப்படி சாதிச்சான் எண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம் . நான் மட்டுமில்லை நீங்களும் சாதிக்கலாம்.
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>எப்பிடி இருந்த நான் இப்படி ஆனது இப்பிடித்தான் .
>>
>>
>>
>>
>>
>>
>>

01) குடியை விட்டிட்டன்.
சாராயம், பீர் எல்லாத்தையும் எண்ட வயித்துக்குள்ள விட்டிட்டன்.02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
குடிச்சா வீட்ட போறதில்லை , அதுக்காண்டி குடியை நிறுத்தவில்லை.03) சிகரட்டை நிப்பாட்டியாச்சு.04) English improve பண்ணியாச்சு.
கடைசியா நடந்த presentation ஒன்றில் எல்லா விரிவுரையாளர்களுக்கும் எனக்கு English எப்பவுமே impossible என்பதை prove பண்ணியாச்சு.
05)first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.
எல்லாரும் ஒண்டா இருந்து தண்ணி அடிக்கும்போது first கிளாஸ் (peg) chears சொல்லியடிப்பதால் first கிளாஸ் அடிக்கிறது நடக்காது ஆனால் இரண்டாவது ரவுண்டு அடிக்கும்போது செகண்ட் கிளாஸ் முதலாவது அடிப்பது நான்தான்.
06)பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.
இப்படியெல்லாம் நான் வாழ்வதால் என்னவள் வேறொருவனுடன் கைகோர்த்து செல்வது கண்ணில் நீர் கொள்ளாக் காட்சி எனக்கு. கண்ணீர் கண்களில் கொள்ள முடியாமல் வழிகிறது .( கண்கொள்ளாக் காட்சி ).அவளுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம்
திந்துங்கோவன் என்னைப் பாத்து .......................

Thursday, 10 September 2009

சொல்லவே இல்லை

பதிவு போட்டும் கனகாலம். .......


study leave வாட்டி எடுக்குது. (மற்ற நேரத்தில் புத்தகத்தைத் தூக்கினால் தானே ) பதிவுகள் வாசிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடிகிறது. எழுத முடியவில்லை. இண்டைக்கு நினைச்ச விஷயத்தை எழுதியே ஆகோணும் எண்டு நேரத்தை ஒரு மாதிரி ஒதுக்கியாச்சு.


ஒரு விசயமும் இல்லை எழுத வேணும் என்பதற்காய் எழுதுகிற பதிவு இது.

சல் அடித்தல்
"கொஞ்ச நேரம் சல் அடிச்சுக் கொண்டிருந்தோம். "
இவ்வாறான வாக்கியப் பிரயோகங்களை அரிதாக எங்கேயும் கேட்டிருக்கலாம். அதென்ன சல் அடித்தல் ??salivia என்று ஒரு ஆங்கிலப் பதம் உள்ளது. உமிழ்நீர் என்று பொருள். salivia என்ற வார்த்தையின் சுருங்கிய வடிவமே sal. அது சரி, அப்ப எச்சிலுக்கும் கதைப்பதற்கும் என்ன சம்பந்தம்??

எதிர்ப் பாலாருடனான் உரையாடலையே(அரட்டை) சல் அடித்தல் என்று கூறப்படும். ஆண்கள் பெண்களோடு பேசும்போது வழிஞ்சு வழிஞ்சு கதைப்பார்கள். அதுதான் அதுதான் இந்த சமாச்சாரம். எதிர்ப்பாலாருடன் அரட்டை அடிக்கும்போது வாயில் எச்சில் அதிகமாக சுரக்குமாம். (பேசும்போது கவனியுங்கோ) அளவுக்கு அதிகமாக சல் அடித்தால் அது வாளி வைத்தல் என்ற பதத்தால் இன்று பல இடங்களில் வழங்கப் பட்டு வருகிறது.

(salacious என்றால் காமமுள்ள இச்சையுள்ள )

con அடித்தல்
con என்றால் எதிராக, மாறுபட்ட கருத்து தெரிவித்தல் , ஏட்டிக்குப் போட்டியாக என்று அர்த்தம். ஒரேபாலாருடன் அரட்டை அடிக்கும்போது விட்டுக்கொடுக்காமல் எதிராக போட்டியாக பேசுவது வழமை. ஆனால் எதிர்ப் பாலாருடனான அரட்டை அவ்வாறு இருப்பதில்லை. ஆண்கள் ஆண்களோடும் பெண்கள் பெண்களோடும் பேசிப் பேசி காலத்தை வீணாக்கும் உரையாடல்கள் con அடித்தல் எனப்படும்.சல் அடித்தல் தமிழ் பேசும் மக்கள் சிறிய அளவில் பாவித்தாலும் con அடித்தல் பாவனையில் இல்லை என்றே கூறலாம். இப்பதம் தாம் படித்த காலத்தில் பாவனையில் இருந்தது என ஒரு ஆசிரியர் கூறியிருக்கிறார்.


விசிறி

fanatic என்றால் ஆர்வம் மிகுந்த அதிக அபிமானமுள்ள என்று பொருள். அதன் சுருங்கிய வடிவம்தான் fan.இப்போது ஆங்கில அகராதிகளில் fan என்றால் தீவிர அபிமானி என்று காணப் படுகிறது. நாங்கள் fan ஐ மொழிபெயர்த்து விசிறியாக்கிட்டம். முந்தி அரசர்மாருக்கு சாமரம் வீசினபடியால்தான் விசிறி என்ற சொல் வந்தது என்று மாத்திரம் சொல்லாதேங்கோ. பக்கத்தில் இருந்து சாமரம் வீசியவர்கள் சம்பளத்துக்கு வீசியவர்கள்.


எல்லோரிடமும் ஒரு கேள்வி ???? ????? ????? ?I இற்கு அடுத்ததாய் is வரக்கூடியவாறு ஆங்கில வாக்கியம் ஒன்று அமையுங்கள் பார்ப்போம் .

Wednesday, 2 September 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பால்குடி என்னட்டைக் கோலைத் தந்திட்டான் இவ்வளவு விரைவாகஎனக்கு வரும் எண்டு நினக்கல்லை.இதில என்ன புதினம் எண்டா பாடசாலைகளுக்கிடையேயான போட்டி போல என்னிடம் வந்த கோல் வந்தி, கீத், பால்குடி எண்ட கல்லூரி ஒழுங்கில் வந்திட்டுது. பதிவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில பால்குடியைப் பற்றி சொல்லியே ஆகோணும். ஒரு வார்த்தையில சொல்லுற தெண்டா இவன் ஒரு பெரிய மண்டைக்காய். விரிவா சொல்லுறதெண்டா ஒரு பதிவு காணும் எண்டு நினைக்கிறன். ஆனால் கொஞ்சம் நீளமான பதிவாய் இருக்கும். கீத் பல பதிவுகளில் இவனை பற்றி தொட்டுச் சென்றிருக்கிறான்.

மயூரன் அண்ணா தொடக்கி வைத்த இந்த விளையாட்டு உண்மையில் நல்ல ஆவணத்தகவல்களைத் தரக்கூடிய பெட்டகமாக அமையும் என்பது உண்மை . ஆனால் என் போன்ற ஆரம்பப் பதிவர்களிடம் வரும்போது சிற்சில இடங்களில் நாங்கள் நடந்து கொண்ட விதங்கள் சிரிப்பை வரவழைக்கலாம்.இருந்தாலும் ஒரு மனத்திருப்தி இருக்கிறது இவ்வாறான விடயங்களைப் பகிரும்போது .


விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

2008 இல்தான் வலைப்பதிவுகள் பற்றி அறிந்தேன். ஒரு முறை லோஷன் அண்ணாவின் பேட்டி ஒன்று இசை உலகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. இசை உலகம் சஞ்சிகையைத் தவறாது படிக்கும் பழக்கம் சிறிது காலம் இருந்தது. லோஷன் அண்ணாவின் பேட்டியில் அவருடைய இணையத்தள முகவரி ஒன்றும் கொடுக்கப் பட்டிருந்தது. இத் தளத்துக்கு உலாவி பல சுவரஸ்யமான விடயங்களை வாசிக்கக் கூடியதாக இருந்தது. இது பற்றி எனது சக மட்டத் தோழன் மைக்கலிடம் "லோஷன் இணையத்தளம் ஒன்று வைத்திருக்கிறார் பாத்தனியோ ??"எனக் கேட்டேன். மைக்கல் கணணி, இணையம் சம்பந்தமான விடயங்களில் ஒரு புலி. அது ஒரு இலவசத் தளம் நீ கூட வைத்திருக்கலாம் என்றான். கட்டுரைகள் எழுதுவதில் நாட்டமிருந்தமையால் எனக்கும் ஒன்று உருவாகித்தரச்சொல்லிக் கேட்டேன். வலைப் பதிவை உருவாக்கி எவ்வாறு பதிவிடுவது ,திரட்டிகள் என்று முழுக்க முழுக்கச் சொல்லித்தந்தது மைக்கல்தான். இப் பதிவில் அவனுக்கு நன்றிகள்.

எமது பல்கலைக் கழக கணணி ஆய்வு கூடம்தான் எங்கள் இணைய வாசஸ்தலம். இரவு 12.00 மணியிலிருந்து காலை 7.30 வரைதான் ஆய்வுகூடம் மூடியிருக்கும். வலைப்பதிவு ஒன்று வைத்திருப்பதால் அதிக நேரம் ஆய்வு கூடத்திலேயே செலவாகியது. ஆரம்பத்தில் நான் வைத்திருந்த http://panaiyooran.blogspot.com/ என்ற வலைப்பதிவு NTAMIL திரட்டியால் தாக்கிய வைரஸ் சிக்கலால் அழிந்துவிட்டது. பலருக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்ததை அறிந்தபின் இந்த வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டேன் . பின்பு பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் இணைக்கும் திரட்டிகளையே இணைத்துக் கொண்டேன்.

வலையுலகத்துக்கு வந்தபின் முதலில் எனக்குப் பதிவராக அறிமுகமாகியவன் தமிழன் கறுப்பி ஊர்த்தோழன். நல்ல கவிஞனாக இவனை எனக்குதெரியும் . அதற்குப்பின் பலரது அறிமுகங்கள் கிடைத்தன. இன்று நான் ஒரு வலைப்பதிவர் என பலகலைக் கழக நண்பர்கள் பலருக்குத் தெரியும் பனையூரான் என்று அழைப்பதும் இவனோட சில விசயங்கள் கதைக்கக் கூடாது பதிவில் போட்டுவிடுவான் எனவும் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட " இதை blog இலை போடுறதில்லை "போன்ற அரோக்கியமான நக்கல்களுடன் வலையுலகத்துக்கு வெளியே வாழ்க்கை நகர்கிறது.

எழுதியது எவ்வாறு ?

தமிழ் எழுத்துருவிலோ தட்டச்சு முறையிலோ தட்டச்சிட எனக்குத் தெரியாது. இன்றைய சூழலில் அந்தத் தேவையும் எனக்கு ஏற்படவில்லை. தெரிந்ததெல்லாம் amma அம்மாதான்.

விளையாட்டுக்கு அழைப்பது

லோஷன்

இவரைப் பார்த்துத்தான் நான் பதிவுலத்திற்கு வந்தேன். இவரைப் பற்றி நான் அறிமுகம் தரத்தேவையில்லை. எங்கிருந்தாலும் ஆயத்தமாகுங்கள் அண்ணா.

தமிழன் கறுப்பி

நல்ல கவிஞன். வாசிப்பை உயிர் போல நேசிப்பவன். இப்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றான் . வாங்கோ தமிழன்.

சுபாங்கன்

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தொழில்நுட்பம் சம்பந்தமான நல்ல விடயங்களைத் தரக்கூடியவர். பல்கலைக்கழக வாழ்வுபற்றி இவரது சில பதிவுகள் நெஞ்சைத் தொட்டவை.

யாழினி

கவிதைகளால் வலைப்பதிவை அலங்கரிப்பவர். காத்திரமான விடயங்களையும் கவிதையில் பிரதிபலிப்பவர். நிலவில் ஒரு தேசத்தை உருவாக பாடுபடுபவர்.

பி.கு:- மூத்த பிரபல பதிவர்களையும் அழைக்கக் கிடைத்ததில் உண்மையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட பதிவாக தரமுடியவில்லை என்பது வருத்தம்தான் . இருப்பது இவ்வளவுதான் என்ன செய்வது?

இப்போது யாருடைய வலைப்பதிவையும் தொடர்வதற்காக என்னால் புகுபதிகை செய்ய முடியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் தெரியப் படுத்தவும்.

Friday, 28 August 2009

ஒரு வலைப்பதிவராக.........

இன்று வலைப் பதிவுகள் பாவனையும் உருவாக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதம் பயங்கரமாக அதிகரிக்கிறது. பயனுள்ள விடயங்கள் சம்பந்தமான வலைப் பதிவுகள் அதிகரிக்கின்ற அதே அரோக்கியமான சூழலில் மோசமானவையும் உருவாகத்தான் செய்கின்றன. சரி அதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுவோம். சொல்ல வந்த விடயம் என்னவெனில் ஒரு தமிழ் வலைப்பதிவராக எமக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு முன்னே விரிந்து கிடக்கின்றது என்பதுதான் .


அப்பிடி என்ன பொறுப்பு ? சும்மா பீலா விடாதே . வந்தமா வாசிச்சமா எழுதினமா போனோமா எண்டு இல்லாம பொறுப்பு மண்ணாங்கட்டி எண்டெல்லாம் நீங்கள் திட்ட முதல் ஞாபகப்படுத்தி தயவு செய்து திட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.

தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவுகள் என்று பார்க்கும்போது கணிசமான வலைப் பதிவுகள் தமிழில் இருக்கின்றன. மேலும் அவை கணணி, மென்பொருள், இணையம் சம்பந்தமாக இருப்பது சந்தோசப் பட வேண்டிய விடயம். அத்துடன் கவலைப்பட வேண்டிய விடயமும் கூட. ஏனெனில் வேறு துறை சம்பந்தமாக உள்ள வலைப்பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.பொதுவாக துறை சார்ந்த வலைப்பதிவுகளின் குறைவுக்கு என்ன காரணமாக இருக்கலாம்???கலை, நாட்டுநடப்பு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என்ற பாணியில் எழுதும் பதிவர்கள் பொதுவாக தங்களுடைய எண்ணங்கள் மற்றவர்களிடம் சென்று அதை அவர்கள் ரசிக்கும்போதே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அறிவியல் ஈடுபாடுடையவர்களிடம் அவ்வாறான மனப்பாங்கு இருப்பதில்லை. தேடலில் ஆர்வமுள்ள இவர்கள் வெளியீடு பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. இது ஒரு குறைபாடு என நான் கூற முனையவில்லை. ஒரு சாதாரண இயல்பு. குறித்த ஓர் துறை சார்ந்த விடயம் எல்லோருக்கும் புரியாது இருப்பதே இதற்குக் காரணமாகும்.பல்வேறு துறை சார்பாக வலைப் பதிவுகள் தமிழில் உருவாக்குவது நிச்சயமாக ஓர் அரோக்கியமான சூழலை உருவாகும் என்பது உண்மை. இன்றைய உலகைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியே வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கினால் அவர்களின் உயர்கல்வி தாய்மொழியிலேயே இருக்கும். தமிழிலே உயர்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படாமைக்கு போதுமான முதல்கள் எமது மொழியில் இல்லாமையே காரணமாகும். முதல்கள் (source) என கூறுவது அறிவு முதல்களான நூல்கள், இணையத்தளங்கள் என்பன. விஞ்ஞானம் அறிவியல் சம்பந்தமான தமிழ் மொழி நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவ்வாறு தமிழ் மொழியிலேயே அறிவியல் நூல்கள், இணையத்தளங்கள் உருவாக வேண்டுமெனின் முதற்கட்டமாக வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஆம் சகல துறைகளிலும் வலைப் பதிவுகள் உருவாக வேண்டும். இந்த ஆர்வம் அதிகரிக்கும் பட்சத்தில் தரமான அறிவியல் ரீதியான இணையத்தளங்கள், நூல்கள் தமிழிலே வெளிவரலாம். சிறிது கற்பனை செய்து பார்க்கையில் நடக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.ஆங்கிலத்தில் புலமை பெற்று சிறந்த அறிவியல் விஞ்ஞான நூல்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் இயல்பு என்பது சகலருக்கும் கிட்டிவிடாது. ஒரு இனம் என்பதற்கு அப்பால் குறித்த ஒரு மொழியைப் பேசும் சமூகத்தின் சிந்தனை அறிவு, பொருளாதார வளர்ச்சியை தாய்மொழியிலான உயர்கல்வி உயர்த்தும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெரிய ஒரு விடயத்தை துறைசார் வலைப்பதிவுகளின் உருவாக்கம் ஏற்படுத்தும் என்பது எனது வாதம்.

அந்த வகையில் ..................

நாம் எத்தனையோ ஒரு துறைசார்ந்த திறமையானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கலாம் . அவர்களுக்கு வலைப்பதிவு சார்ந்த நல்ல விடயங்களை தெரிவித்து அவர்களை ஓர் துறைசார் வலைப்பதிவராக உருவாக்க முயற்சித்தால் தமிழ் பேசும் மக்கள் அடையக்கூடிய நன்மைகள் பலவாக எதிர்காலத்தில் இருக்கலாம்.


பி.கு :- அளவுக்கு அதிகமா பெரிய தீர்க்கதரிசி மாதிரி அவித்துத் தள்ளியிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதோ ஒரு வேகத்தில் ஆர்வத்தில் எழுதியதே இப்பதிவு. உறக்கமில்லா இரவொன்றில் உதித்த ஓர் யோசனை இது. தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ .

Monday, 24 August 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நெஞ்சில் நின்றவை
வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்று எனது வசிப்பிடமான விடுதிக்குத் திரும்பியபின்னும் இன்னும் அந்த நினைவுகள் அகலவில்லை. என்ன நடந்தது என விலாவரியாக அநேகமானோர் பதிவுகள் போட்டுவிட்டனர் . அதைப் பற்றி பதிவுபோடாமல் அங்கால நகரேலாமக் கிடக்கு. சந்திப்பில் நிகழ்ந்த சம்பவங்களில் நெஞ்சில் நின்றவையை ...................

***இலகுவான தமிழில் அளவான சுருதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சதீஷன் ஆரம்பத்திலேயே ஒட்டிக்கொண்டுவிட்டார். முழுவதுமே தமிழில் தொகுத்தளிக்கும் ஒன்றுகூடல்களில் பங்குபற்றும் வாய்ப்பு (இப்போது வாழும் சூழலில் அந்த வாய்ப்பு எங்கள் பலருக்கு இல்லை. இருக்கிற இடம் அப்பிடி . சரி சரி அது சொந்த ,சோக .................ஏன் சோகக் கதையை இஞ்ச கதைப்பான்?) நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்தது பயங்கர சந்தோசம் .பிளாக்கர் 10 வது பிறந்தநாள்***குட்டிப் பதிவர் யசீர். வியக்க வைத்த பதிவர்.***நிகழ்ச்சியை livestream செய்வதில் முன்னின்று உழைத்து நல்ல ஒரு விடயத்தைச் செய்ததால் எல்லாராலும் பாராட்டப்பட்ட மது.

***யாழ்தேவி, mayalanka திரட்டிகள் பற்றி விளக்கங்கள் தந்த முக்கியமான ஒருவரான மருதமூரான் என் கல்லூரி நண்பன். சந்திப்பின்போதுதான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு முடிந்தபின் கதைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை அவசரமாக சென்றுவிட்டேன் (சூழ்நிலை அப்படி). ஒரு நாள் சந்தித்துப் பேசுவோம்.***தமிழ் விசைப்பலகை, யாழ்தேவி திரட்டி தலைப்புகளில் இடம் பெற்ற விவாதங்களில் நல்ல பல விடயங்களைப் பகிர்ந்துகொண்ட மூத்தவர்களான மேமன் கவி சேது ஆகியோர் . பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மயூரன் அண்ணாவின் தெளிவான கருத்துப் பிரேரணைகள். நகைச்சுவையான பேச்சுகள். தீர்க்கதரிசனமான சிந்தனைகள்.


*** இலங்கைப் பதிவர்களை ஒன்று சேர்க்கும் திரட்டிக்கு யாழ்தேவி என்ற பெயர் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கிறது என்ற பெரும்பாலான கருத்துக்கள். காரசாரமாக கதைக்கப் பட்ட விடயங்களில் இது முக்கியத்துவமானது.

*** வார்த்தைப் பிரயோகங்களில் வட்டார வழக்குகள் பதிவுகளில் பாவிப்பது ஆரோக்கியமான விடயம் எனக் கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. இலங்கைத் தமிழை சில ஊடகங்கள் மறந்து கஷ்டப்பட்டு style tamil பேசுவது குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சந்திப்புக்கு வந்த பால்குடி வடையையும் , பட்டீசையும் கண்டிட்டு என்னைக் கழற்றி விட்டது . சும்மா சொல்லக் கூடாது எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்தார்.


ஏற்பாட்டுக் குழுவில முக்கியமான தலைகள் நன்றிக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள் .

மறந்துபோயும் சீரியஸா எதையும் பேசக்கூடாது என்ற கொள்கையோடு பேச்சுக்களில் சிரிப்பையூட்டி , நிகழ்ச்சிகளில் அடிக்கடி பின்னூட்டங்களிலும் தூள் கிளப்பினார் அண்ணன் புல்லட் .
அமைதியான அண்ணன் ஆதிரை கல்லூரிக் காலத்திலேயே எனக்கு அண்ணன்.


இன்றைய நிகழ்ச்சி முழுக்க சிங்கம் என விழிக்கப் பட்ட இந்த சிங்கம்
குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அண்ணன் வந்தி# include
void main()
{
clrscr();
int i;
for(i=1; i= infinitive;i++)
{
cout<<"இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ";
getch();
}

Wednesday, 19 August 2009

அம்மாவிடம் ஒரு மன்னிப்பு

ஊரிலிருந்தபோது ஊர்க்கோவிலோடு காலத்தைக் களித்தேன்.

ஊரைவிட்டுப் பிரிந்தபின் கடவுள் எனும் விடயம் கேள்விக்குறியானது .

காரணம் கோவிலை விட்டுப் பிரிந்ததால் அல்ல

நடந்தேறிய அநியாயங்களாலும்

உலக ஒழுங்கில் மனிதனே எல்லாம் என்ற பட்டறிவாலும்

அம்மா தொலைபேசியில் பேசியபோது

மனதில் பட்டதை சொன்னேன்

" அப்பிடி சொல்லாதையடா அப்பு " என்றாள்.

இல்லை அப்பிடித்தான் என்றேன்.

சிறிது நேரத்தின் பின் என் தங்கை

" ஏன் உப்புடிக் கதைக்கிறாய்

அம்மா சரியாக் கவலைப்படுறா " என்றாள்.

திரும்பவும் அம்மாவோடு பேசினேன்.

" நான் சொன்னதை யோசிக்காதே

சும்மா வாய்க்குள்ள வந்ததைக் கதைத்திட்டன் "

அம்மா "ம் "

தங்கச்சி " உண்மையா உனக்கு நம்பிக்கை இல்லையோ ?"

"ம்."

" அம்மா எல்லே சரியா யோசிக்கிறா "

" நான் வீட்ட வந்தாப் பிறகு எதாவது விளங்கப்படுத்தி

நம்பிக்கையை வரப் பண்ணு "

" நம்பிக்கை இல்லாமப் போனா வாறது கஷ்டம்
எண்டு அம்மா சொல்லுறா "

அம்மா என்னை மன்னித்துவிடு

என் நம்பிக்கையீனம் என்னைப் பற்றி உன்னைக்

கவலைப்பட வைத்து விட்டது.

உனக்காக எனக்குள் நம்பிக்கையை வரவழைக்கப் பார்க்கிறேன்

முடியவில்லை மன்னித்துவிடு.

பி.கு:- வரிக்கு வரி வெட்டி எழுதியுள்ளதால் இது கவிதை எழுத வெளிக்கிட்டு சொதப்பியிருக்கிறான் என திட்டாதீங்கோ .இது தொலைபேசி உரையாடலை பெரும் பகுதியாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.

Saturday, 15 August 2009

தமிழ் சினிமா செய்த பிழை ஒன்று

இந்தப் பதிவை ஆரம்பிக்க முதல் தமிழ் சினிமாவை அளவுக்கதிகமாக நேசிப்பவர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு.

தமிழ் சினிமா தமிழர் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் அத்தியாயமாக மாறிவிட்டது. சினிமா பார்க்காத இளைஞர்கள் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. கலாச்சார பாரம்பரிய விழாக்களில் கூட சினிமாப் பாடல்கள் ஒலிக்குமளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது . எதிர் காலத்தில் தமிழரின் பாரம்பரிய இசையாக தமிழ்த் திரையிசை மாற்றமடையக் கூடும். இவ்வாறான நிலை ஆரோக்கியமற்றது என்றோ ஆரோக்கியமானது என்றோ நான் கூற முனையவில்லை. திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய நன்மை தீமைகள் என கதைத்தால் கதைத்துக்கொண்டே போகலாம். தமிழ் சினிமா செய்த ஓர் பிழை பற்றியே இப் பதிவு.

தொடருங்கள் ................

பணமுள்ளவன் வீட்டில் வெகுமதியிருக்கும் ஏழை வீட்டில் நிம்மதியிருக்கும் என்பது தமிழ் சினிமாவின் தாரக மந்திரங்களில் ஒன்று. நீண்ட கால மகுட வாசகம். இவ்வாறு தொடர்ந்து ஒரு சமூகத்திற்கு கூறிக்கொண்டிருந்தால் இதன் மூலம் எதாவது நன்மையிருக்கிறதா? இக் கருத்தை காலாகாலமாக கூறும்போது அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை அச்சமூகம் அடையுமா? என்னைபொறுத்தவரை தீமையே அதிகம் என்பேன்.ஏன்?......................

இந்த எண்ணக்கருவை சினிமா தனது தாரக மந்திரமாகக் கொண்டது ஏழை மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கமே ஒழிய எதுவித தூர நோக்கும் அல்ல. ஏழைகள் எப்போதுமே நிம்மதியாக இருப்பவர்கள் என அடிக்கடி கூறி அவர்களின் புண்பட்ட நெஞ்சை ஆற்றலாம் . ஆனால் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக அமையக்கூடும் என்பது மறுக்கப்படமுடியாது. பொருளாதார ரீதியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு வரும்போது தனது நிம்மதி அற்றுப் போய்விடும் என்ற ஒரு விசச்செடியை இவ்வாறான கருத்துக்கள் நீரூற்றி வளர்த்துவிடும்.

எழையாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம்தானே என்ற கருத்து இன்றைய உலகத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமற்றது எல்லோருக்கும் தெரியும். கவிதைஎழுதுவதற்கும், மேடைகளில் பேசி கைதட்டுப் பெறுவதற்கும் என்றால் இவ்வாறான தலைப்புக்கள் இனிப்பானதாய் இருக்கலாம்.(அன்றாட வாழ்க்கையில் பணத்தின் பங்கு பற்றி நான் இங்கு இம்சையடிப்பது போல இருக்கிறது. அதிகம் அலட்டவில்லை .)

காப்மேயர் "வெற்றிக்கான வழிமுறைகள் " எனும் நூலில் நான் எழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அடிமனதில் எப்போதும் இருப்பதாலேயே ஏழை ஒருவன் இறுதிவரை ஏழையாகவே வாழ்கிறான் என்கிறார். மனம் போல்தான் வாழ்வு என்பது உண்மைதான்.

தமிழ் சினிமாவை மொத்தமாக குறை கூறவில்லை. எத்தனையோ நல்ல பல விடயங்களை மக்களுக்கு சினிமா கூறியிருக்கிறது. அக் கருத்து மூலம் பல சீர்திருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கும், இருந்திருக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.
ஆனாலும் இன்றைய திரையுலகில் இவ்வாறான நிலைப்பாடு குறைவு. சிறிது காலத்திற்கு முன்பே இது அதிகமாகக் காணப்பட்டது.
உங்கள் கருத்துக்களை அவசியம் பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.

Tuesday, 11 August 2009

அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி?

அலுவலகங்களில் என்ன தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியும் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அனேகமாக இருக்கும். "அவர் என்னைக் கணக்கே எடுக்கிறார் இல்லை , அவன் என்னை மதிக்கிறானே இல்லை " இது போன்ற வார்த்தைகளை அநேகமான தொழில் புரிபவர்கள் உதிர்ப்பார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்து சக, உயர் ,அடுத்த மட்ட ஊழியர்கள் அனைவரினதும் மதிப்பிற்கும் உரியவராக மாறுவது எப்படி என்பது பற்றி ஒரு சில அனுபவத்தகவல்கள் .


**அலுவலகத்தில் ஒரு நாளின் யாருடானான முதல் சந்திப்பாயினும் காலை வணக்கம் சொல்லத் தவறாதீர்கள்.**சக மட்ட ஊழியர்களை (வயதில் அதிகமானோரையும் குறைந்தோரையும்)சகோதர உறவு முறை சொல்லி அழையுங்கள்.(அண்ணா,தம்பி ,அக்கா, ....)உங்களது வயதுக்காரரை பெயர் கூறி அழையுங்கள்.(முக்கியம்இவ்விரு தகவல்களும் உங்கள் சக ஊழியருடன் மாத்திரமே உயர்மட்ட அதிகாரிகளுடன் இல்லை)**உங்களுக்கு கீழுள்ள ஊழியர்களை அவர் வயதில் அதிகமானவராக இருந்தாலும் அலுவலக நடைமுறை காரணமாக பெயர் கூறி அழைக்கும் நிர்ப்பந்தம் இருக்கலாம். அலுவலகத்தில் அதைப்பேணி அலுவலகத்திற்கு வெளியே அவரின் வயதிற்குரிய மதிப்பை அவசியம் கொடுங்கள்.**கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது "நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் " என்று கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே " இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

**அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது அழைப்பை மேற்கொண்டவர் உடனடியாக பெயரை கூறாது பேச முற்படும்போது "நீங்கள் யார் பேசுகிறீர்கள் ?" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக "உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா?" எனக்கேளுங்கள்.**புன்னகையை எப்போதுமே அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.இப்படி நிறைய இருக்கு சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இவ்வளவு விடயங்களுமே காணும் நல்ல பெயர் எடுக்க .இதற்கு அப்புறமும் உங்கள யாரும் மதிக்கவில்லைஎண்டா பின்னூட்டம் மூலம் சொல்லுங்கோ .

Friday, 7 August 2009

நான் ரசித்த ஹரிஷ்ஜெயராஜ்

தமிழ் சினிமா எத்தனையோ திறமையான இசையமைப்பாளர்களை கண்டுவிட்டது. தமிழ் திரையிசையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றங்கள் கொண்டுவந்த M.S. விஸ்வநாதன், இளையாராஜா, A.R. ரஹ்மான் என ஒரு வரிசைப் படுத்தப்பட்ட தொடர் ஒன்று உள்ளது. கர்நாடக சங்கீதத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த திரையிசையை மெல்லிசை என்ற நிலைக்கு கூட்டிச் சென்ற பெருமை M.S.விஸ்வநாதன் அவர்களைச் சாரும். மெல்லிசைக்குள் கிராமத்து இசையை புகுத்தியவர் இளையராஜா. இலத்திரனியல் தொழில்நுட்பத்தை புகுத்தியவர் இசைப்புயல். இவர்கள் எல்லோரும் தமிழ்த் திரையிசையின் கிரீடங்கள். இவர்களைத் தவிர்த்து இன்றைய இசையுலகை நோக்கினால் யுவன், ஹரிஷ், பிரகாஷ் ,......... என நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் ஹரிஷ்ஜெயராஜ் இசையுலகில் புதுமை செய்த ஒருவர்தான். நூற்றுக்கு தொண்ணூறு வீதமான தமிழ் சினிமாப் பாடல்களில் பெண்குரலின் சுருதி(pitch) அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வழமையான பாணியை சில பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார் ஹரிஷ். சுருதி குறைவான பெண்குரல் பாடல்கள் பலவற்றை இசையமைத்திருக்கிறார். முதல் படமான மின்னலேயில் "வசீகரா", வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளே", வாரணமாயிரத்தில் "அனல்மேலே பனித்துளி" போன்ற பாடல்களில் பெண் குரலின் சுருதியை வேறு பாடல்களில் பெண்குரலின் அவதானித்துப் பாருங்கள். மிகவும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பாம்பே ஜெயஸ்ரீயையே இவ்வாறான கீழ்ஸ்தாயிப் பாடல்களுக்கு பாவித்திருப்பார்.
தொட்டிஜெயாவில் வரும் உயிரே என்னுயிரே பாடலில் பெண்குரலின் சுருதி ஆண்குரலைவிடக் குறைவாக இருக்கும். இவ்வாறான புதுமைகளால் மற்றைய இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
ரஹ்மானிடம் பணி புரிந்ததால் இவருடைய இசையில் அனேகமாக ரஹ்மானின் பாதிப்பு காணப்படுகிறது எனவும் பிற மொழிப் பாடல்களை நகல் செய்பவர் போன்ற விமர்சனங்களும் இவர்மீது காணப்படுகின்றது. மேலும் youtube இல் haris jeyaraj எனத் தேடும்போது copycat of haris jeyaraaj என பல காணொளிகள் காணப்படுவது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. எது எவ்வாறு இருப்பினும் மேலும் ஒரு அசாத்தியத் திறமை அநேகமான பாடல்களில் இளமையை வெளிப்படுத்தும் இசை ஹரிஷ் ஜெயராஜ் அவர்களுக்கே சொந்தம்.
விக்கிப்பீடியாவில் ஹரிஷ் தொடர்பான தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்.

Sunday, 2 August 2009

பல்கலைக்கழக வாழ்வு


அம்மாவின் கையால் சாப்பிடேலாமல்
கடையிலையும் canteenலையும் சமைக்கிறதச் சாப்பிட்டு
விடிய சாப்பிட்டாப்ப்பிறகு தேத்தண்ணி குடிக்கப் பழகி
அண்டண்டை உடுப்புகளை அண்டண்டு தோய்க்காமல்
சேத்து வச்சு ஒருநாளில் உடுப்போடை சண்டைபிடிச்சு
நாள் தவறாமல் நெட் பார்த்து
facebook ஓடையும் blog ஓடையும் குடும்பம் நடத்தி
தெரியாத விசயங்களை google இடம் கேட்டு
attendence க்காக lecture போய்
lecture நேரம் நக்கல் கவிதை எழுதி
study leave இல மாத்திரம் புத்தகம் தூக்கி
குப்பியால exam paas பண்ணி
party எண்டா யாருக்கும் பயப்படாம தண்ணியடிச்சு
தண்ணியடிச்சப் பிறகு சண்டை பிடிச்சு
அடுத்தநாள் அதை மறந்து
கணக்கில்லாம தூசணம் சொல்லி
விடிய 6.30, 7 ௦௦மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம
களியுதம்மா campus வாழ்க்கை

Friday, 31 July 2009

இன ஒற்றுமை என்பது இதுதானோ?

இலங்கையிலுள்ள சிங்கள மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்.சிரித்து சிந்தித்து கவலைப்பட வேண்டிய விடயம் ஒன்று.


பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில செயற்பாடுகளை எதிர்த்தும், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகளை எதிர்த்தும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழமை. இதுவரை காலமும் சிங்கள மொழியிலேயே சுவரொட்டிகள் ஓட்டப் பட்டு வந்தன. இரண்டு கிழமைகளுக்கு முதல் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலிருந்து சுவரொட்டி ஒன்று தமிழில்மொழி பெயர்த்து எழுதப்பட வேண்டும் என அறிவித்தல் வந்திருந்தது. இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம் என்பதே அச்சுவரொட்டியின் சாரம்.தமிழ் மொழியிலேயே தமிழ், முஸ்லீம் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தது. இதனை அப்படியே தீந்தையால் எழுதுங்கள் என்று. "சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என்பதே சுவரொட்டியில் எழுதப் படவேண்டிய வாசகம்.

தமிழ் மாணவர்கள் தமிழ் மீது கொண்ட காதலால் "தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுகிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என எழுதிவிட்டார்கள். தமிழ் வாசிக்கக்கூடிய சிங்கள மாணவர்கள் இம் மாற்றத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். சுவரொட்டி எழுதிய மாணவனை சிறிது நேரம் ஏசினார்கள். பின்பு தங்களே ஒழுங்கை தாங்கள் எழுதிக் கொடுத்தது போல் மாற்றினார்கள். சுவரொட்டி ஒட்டப்பட்டது.


பி.கு:- சிறுபான்மை இனங்களின் மனதை வெல்லவேண்டும் என்பதற்காக ஒட்டப்படும் சுவரொட்டியிலேயே பெரும்பான்மையினரின் குறுகிய மனப்பான்மை.

Thursday, 30 July 2009

எப்போது செத்துப்போவேன்?

ஒரு முட்டாள் கழுதை ஒன்று வைத்திருந்தான். அவன் கழுதையோடு வழமையாக வேலைக்கு செல்லும் வழியில் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவரிடம் இந்த முட்டாள் எனக்கு சாத்திரம் கூறுமாறு தினமும் நச்சரிப்பான். ஞானியோ பிறகு ஒரு நாள் சொல்லுகிறேன் என காலத்தைக் கடத்தி வந்தார். ஓர் நாள் அவன் ஞானியிடம் நான் எப்போது செத்துப் போவேன் என்பதை மட்டுமாவது கூறுமாறு கேட்டான். எதோ வேலையிலிருந்த ஞானி உன்னுடைய கழுதை ஒரு நாளில் மூன்று தடவை தும்மினால் நீ இறந்து விடுவாய் என்கிறார். முட்டாளுக்கு பயங்கர சந்தோசம் ஏனெனின் அவனுடைய கழுதை இதுவரை தும்மியதை அவன் காணவில்லை. அன்றைய பயணத்தை அவன் மகிழ்ச்சியுடன் தொடர்கிறான்.

போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று கழுதை ஒரு தடவை தும்மியது.இவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தனது தொப்பியை கழற்றி கழுதையின் மூக்கைச் சுற்றிக் கட்டுகிறான். கழுதை சிறிது நேரம் அமைதியாக பிரயாணத்தைத் தொடர்ந்தது. தொப்பியிலுள்ள தூசி கழுதையின் நாசிக்குள் போய் அது இரண்டாவது முறையும் தும்மியது. மரண பயம் முட்டாளுக்கு அதிகாமகியது. இன்னொரு முறை தும்மினால் இறந்துவிடுவோம் எனும் பயத்தில் நல்ல பலமான உருண்டையான இரு கற்களை தெருவிலே பொறுக்கி தனது செல்லப் பிராணியின் மூக்குத் துவாரத்தில் அடைகிறான். கற்கள் சரியாக அடையப் பட்டுள்ளதா என குனிந்து பார்க்கையில் கழுதை மீண்டும் பெரிதாக ஒரு தும்மல் போடுகிறது. அவன் அடைந்த கற்களில் ஒன்று நெற்றிப் பொட்டில் பட்டு இறந்துவிடுகிறான்.

Tuesday, 21 July 2009

அரசாங்கம்? அதிகாரிகள்? முதலாளிகள்? தொழிலாளிகள்? மக்கள் ?

6 வயதுடைய சிறுவன் ஒருவன் நித்திரை வராது கட்டிலில் படுத்தபடி தன் தந்தையிடம் "அப்பாய் அரசாங்கம் ,முதலாளி ,தொழிலாளி, மக்கள்,அதிகாரி இவங்களெல்லாம் ஆர்? " என்று கேட்கிறான்.

தந்தையும் மகனுக்கு நன்றாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் "இப்ப பார் அப்பு எங்கட வீட்டை எடுத்தால் உன்ட அம்மா இருக்கிறாதனே அவ அரசாங்கம் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்ளுவா. நான் முதலாளி காசு உழைக்கிறவன். நீ ஒரு அதிகாரி மாதிரி நீ சொல்லுறதைத்தான் அம்மா செய்வா.உன்ட தங்கச்சி மக்கள். எங்கடவீட்டு வேலைக்காரி இருக்கிறாள்தானே அவள் தொழிலாளி" என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

சிறுவனும் விளக்கத்தை கேட்டபடி நித்திரையாகிவிட்டான். நள்ளிரவில் அவனது 2 வயது தங்கச்சி வீரிட்டு அழத்தொடங்குகிறாள்.உடனே அவன் தன் தாயை எழுப்புகிறான். தாய் நித்திரையால் எழவில்லை. தந்தையை அங்கு காணவில்லை . அறையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறான் தந்தை நித்திரையிலுள்ள வேலைக்காரியின் காலைச் சுரண்டிக் கொண்டிருந்தார். அப்போது தங்கச்சி அழுகையை நிறுத்தியிருந்தாள். பின்னர் அவன் சென்று படுத்துவிட்டான்.


அடுத்தநாள் அதிகாலை நித்திரையால் எழுந்தவுடன் தகப்பனிடமும் தாயிடமும் " அப்பா எனக்கு நீங்கள் நேற்று இரவு சொல்லித்தந்த எல்லாம் விளங்கீற்று " என்கிறான்.

"என்னடாவிளங்கினது?" என தாய் கேட்கிறாள் .


"மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் அதை அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் "என்றான் .

தாய் அவனை வாரி எடுத்து முத்தமிடுகிறாள் பாவம் தகப்பன் கதை சொல்லும்போதே அவள் நித்திரை. தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை.


பி.கு:- suntv இன் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு முன்னர் ரசித்த நகைச்சுவை ஒன்று.

Saturday, 18 July 2009

வலைப்பதிவால் பணம் சம்பாதிக்கலாமா?அண்மையில் ஒரு நண்பன் மூலம் இணைய விளம்பரம் ஒன்று பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய இணையத்தளங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் இந்தச்சேவை adsence போன்றதே. adsence விளம்பர சேவையை உபயோகிப்பதில் தமிழ் வலைப்பதிவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கினர் என்பது யாவரும் அறிந்தது. இந்திய இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் மொழி பதிவுகள் இச் சேவையை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது என நினைக்கிறேன். எனது வலைப்பதிவை இச்சேவையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் ஏதாவது வைரஸ் பிரச்சினைகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இணைக்க பயமாக இருக்கிறது. தொழில்நுட்ப பதிவர்கள் யாராவது இச்சேவை சம்பந்தமாக பயனுள்ள பதிவு ஒன்றை எழுதி தமிழ் வலைப்பதிவர்கள் நன்மைபெற உதவினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.


இணையத்தள முகவரி :- http://www.adsforindians.com/ads/index.asp

மேலும் ஒரு விளம்பர சேவை பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் blogspot இற்கு இச்சேவை தனது சேவையை அனுமதிக்கவில்லை. wordpress பதிவர்கள் பயன் அடைய முடியம்.


இணையத்தள முகவரி :-http://www.inlinks.com/

Friday, 17 July 2009

நானும் 3,4 வரியில க(வி)தை எழுதுவமெண்டு...

அண்மையில் இது ஒரு கனவுக்காரனின் பக்கத்தில் ஹைக்கூ பதிவைப் படித்தபின் நானும் அப்படி ஒரு பதிவு போட வேண்டும் என்ற ஆசையில் எழுதிய பதிவு இது.
நேரத்தை தின்கிறதா?
தேடலை அதிகரிக்கிறதா?
வரையறுக்க முடியவில்லை
பதிவுலகம்......


பந்தி வைக்கையில் (சொந்தக் கதை)

"வைக்கவா?"-நான்
"வேண்டாம் "-நீ
நமக்கிடையேயான முதல் உரையாடலே முற்றும் கோணலாய்


என்போன்ற .......


"படிக்காம நடுத்தெருவிலதான் நிக்கபோறாய்"
"படிச்சாப் பிறகும் நான் நடுத்தெருவிலதான் அம்மா"
நில அளவைத்துறை மாணவன்.

கேலி


எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்

ஒருவன் மட்டும் மௌனமாய்

கேலியின் விளைவு


இணையத்தில்

உன்னிடம் வரக்கூடாது என உறுதியாக நினைக்கிறேன்

மின்னஞ்சல் பார்த்தபின் அவ்வாறு இருக்க முடியவில்லை

facebookஏ உன்னைத்தான்
இலங்கையில் ஊடகங்களின் நிலை ......
"தேவையில்லாம வாய்காட்டதே

மனுசரைச் சுடுவதுபோல சுட்டுபோடுவாங்கள் "

தாய் நாய் தன் குட்டியிடம்.


இறைவன்


கடவுள் உங்களைக் கைவிட கைவிடமாட்டார்
நமட்டுச் சிரிப்புடன் ஈழத்தமிழர்

Wednesday, 15 July 2009

முகாம்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய......


போரினால் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி முகாம்களிலே தமது கல்விச்செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ளமுடியாமல் உள்ள மாணவர்களின் தேவையை அறிந்து கொண்டு அவர்களது தேவையை பூர்த்தி செய்வதில் விருப்பமுடையவர்கள் இங்கு சொடுக்கவும்.

http://www.icuts.org/


விரைந்து செயற்படுங்கள்


நன்றி