Saturday, 27 June 2009

facebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.


அதிகமானோர் உலாவரும் வலைத்தளங்களின் வரிசையில் facebook நான்காம் இடம் வகிக்கின்றது. குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமானது. பயனாளர் பற்றிய உண்மைத் தன்மைகள், பிடிக்காத எதனையும் அகற்றக்கூடிய வசதிகள் போன்ற சிறந்த தீர்க்கதரிசனமான அமைப்பால் வலைப் பாவனையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

facebook ஐ உபயோகித்தல் இன்று பல பேர் மத்தியில் ஒரு போதையாக மாறியுள்ளது.உதாரணத்துக்கு எமது பல்கலைக்கழகத்திலே கணனி ஆய்வுகூடத்திற்கு வந்தவுடன் முதலாவதாக facebook ஐ திறக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.இந் நிலை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பதை என்னால் வரையறுக்க முடியவில்லை. அனால் நான் facebook மூலம் சில விசயங்களை சாதித்திருக்கிறேன். சில விடயங்களில் சறுக்கியிருக்கிறேன். "இவன் சாதிச்சா என்ன சறுக்கினா நமக்கென்ன" என்று கேட்காதீர்கள். எதாவது உங்களோடு ஒத்துப்போறானா? என்று பாருங்கள்.

பாவிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பாடசாலை காலத்தில் திக்குத்திக்காக பிரிந்த எத்தனையோ தோழர்களை சந்தித்துவிட்டேன். அவர்களுடனான தொடர்பை புதுப்பித்துள்ளேன். ஒரு பெரிய நட்புவட்டத்தின் அங்கத்தவனாக facebook என்னை மாற்றியிருக்கிறது. பலரின் பிறந்தநாட்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது.(அப்பிடி முறைத்துப் பார்க்காதீங்கோ) மேலும் எனது ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள், அயலவர்கள் ,நண்பர்களை சந்தித்துவிட்டேன். எமது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் அண்ணன்மாரோடு தொடர்புகளைப் பேணி நல்ல ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். இவையே நான் சாதித்தவை. அனால்.....

எதுவித பலனும் இன்றி சில தோழிகளுடனான அரட்டைகள் எத்தனையோ மணித்தியாலங்களைத் தின்றுவிட்டது. இது இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியால் இளம்பருவத்தினரிடையே காணப்படும் ஒரு நோய். பயன் எதுவுமின்றி இளஞ்சமுதாயம் நேரத்தை அநியாயமாக்கும் செயலாக எதிர்ப் பாலாருடனான அரட்டை இன்று பெரும் விடயமாக உருவெடுத்துள்ளது. இவற்றில் காதல் என்ற அணுகுமுறையிலான அரட்டைகள் என்பது வெகு சொற்பமே. "நீ அவளைக் காதலிக்கவும் இல்லை காதலிக்கவும் போவதில்லை ஏன் மச்சான் இவ்வளவு நேரத்தை அவளோடு facebook இல் செலவழிக்கிறாய்?" என்று கேட்டால் பதில் "எல்லாம் ஒரு சின்ன சந்தோசம்தான்" என்று இருக்கும். (நான் கூட இதற்கு விதிவிலக்கில்லை) ஆக இது எமது குறைபாடில்லை.மனிதனின் இயல்பு அவ்வாறானதே. இவ்வாறான செயற்பாட்டால் கல்வி சம்பந்தமான எத்தனையோ விடயங்களை செய்வதற்கான நேரத்தை இழந்திருக்கிறேன்.இது எக்காலத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

பொழுதுபோக்கு சாதனங்கள் எதுவுமே மிகையாகப் பாவிக்கும்போது நன்மையை விட தீமையையே தருகின்றது. ஆனால் இன்று பலருக்கு facebook அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதை எவ்வாறு பாவிக்கலாம் என்பது பற்றி எனது அனுபவம் மூலம் சில ........

எவ்வாறு பாவிக்கலாம்?

** அரட்டைகளிலேயே அதிக நேரம் செலவாகின்றது எனின் offline இல் வேலைகளை செய்யுங்கள்.

** எதாவது நல்ல விடயங்களை புகைப்படங்கள் மூலமோ குறிப்புகள் மூலமோ அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருந்தால் வலைப்பதிவராகுங்கள். (வலைப்பதிவுகளும் நேரத்தை விழுங்குபவைதான் ஆனால் ஏதாவது வகையில் உங்கள் தேடல் அதிகரிக்கும்)

** நல்ல துறை சார்ந்த குழுக்கள் உள்ளன. அவற்றில் அங்கத்தவராகுங்கள். பல நல்ல வலைப்பதிவுகள் ,இணையத்தளங்கள் ,செய்திகள் அவற்றில் உள்ளன. உங்களுக்கு விருப்பமான துறையை தேடும்(search) பகுதியில் தட்டச்சிட்டு தேடிப்பாருங்கள் எத்தனை குழுக்கள் உள்ளன என்று.( நெருங்கியவர்களுக்கு....... GIS என தேடிப்பாருங்கள்)

**குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.(நேர முகாமைத்துவம்)

(தெரியாதவர்களை நண்பராக இணைக்காதீர்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அதெல்லாம் பிரச்சினை இல்லை. மேற்கூறிய ஒரு விடயத்தை எனினும் பின்பற்றிப் பாருங்கள் நிறைய மாற்றங்கள் உங்களில் தெரியும்.)

Friday, 26 June 2009

பேருந்தும் ..........யும்அழாகான சாலை வளைவுகள் ,
விடிகாலைப் பனி,
பால் நிறத்தில் நீர் சொரியும் அருவிகள்,
மலைத்தொடரின் மானங்காக்கும் பச்சைய உயிர்கள்,
நிமிர்ந்து பார்க்க கழுத்து வலிக்கும் உயர்ந்தமலைகள்,
குனிந்து பார்க்க வயிறு கூசும் சரிவுகள் ,
உந்துருளியில் உரசிக்கொண்டு செல்லும் ஜோடிகள்,
சாலைக்கடவையில் தோளில் பையோடு
தலையை சரித்தவாறு வேகநடையில்
வேலைக்கு செல்லும் பூலோக தேவதைகள் ,
எட்டிப்பார்க்கத் துடிக்கும் பாதையிலுள்ள ஒன்றிரண்டு கோவில்கள்,
அதிகாலைப் பயணத்தில்
என்னையும் சுமந்து இவற்றையும் எனக்குகாட்டும்
பேருந்தே !
நீ காட்டும் காட்சிகளை மனம் ரசிக்கத் துடித்தாலும்
மலையாளின் இடுப்பினில் வளைந்தோடி
செய்யும் சில்மிஷத்தை பொறுக்காமல்
உடல் பொறாமையில் வாந்திஎடுக்கிறது.
பி .கு:-எனக்கும் அதிகாலைப் பேருந்துப் பயணத்திற்கும் ஒத்தே வருவதில்லை. வாந்திதான்............ (பேருந்தும் வாந்தியும்)

Tuesday, 23 June 2009

புகைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சும்மா எதாவது புத்திமதி சொல்வதற்காகத்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்து எங்களை வலைப்பதிவுக்குள்ளே அழைத்திருக்கிறான் என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே பல நன்மைகள் புகைப்பிடிப்பதால் ஏற்படுகின்றன. ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தியுள்ளேன்.01)வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல அன்பாக இருப்பார்கள்.

02)அதிக நண்பர்களை கொண்டிருப்பீர்கள்.

03)வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.

04 )கட்டாக்காலி நாய்கள் கூட உங்களுக்கு கிட்ட வாராது.

05)பெண்கள் நெருங்கிப் பழகுவார்கள்.


இதெல்லாம் எப்படி என்று கேட்கிறீர்களா ????

?**???

**?

*??

???*

*?*

??

?

*?

??????????????

வாங்கோ

??

?

**

*

*

இன்னும் கொஞ்சம்

*

**

??

??

???

???

?

?

?

01) அனேகமாக உங்களுக்கு புற்றுநோய் வரும். எனவே விரைவில் இறக்கப் போகும் உங்களோடு குடும்பத்தார் அன்பாக நடந்து கொள்வர்.

02) நண்பர்கள் என நான் சொன்னது ஓசியில் தம் அடிக்கும் செட். இவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல நெருக்கமாக இருப்பார்கள்.

03)இரவில் நல்ல இருமல் இருக்கும். நித்திரை வாராது. இருமிக்கொண்டே இருப்பதால் வீட்டில் ஆட்கள் முழித்திருப்பார்கள் என நினைத்து திருடன் உங்கள் வீட்டுப்பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டான்.

04)விரைவில் முதுமையடைந்துவிடுவீர்கள் . பொல்லூன்றி நடக்க வேண்டியிருக்கும். கையில் தடி இருப்பதால் நாய்கள் கிட்ட வராது.

05)அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு ஆண்மையிருக்காது . ஆகவே உங்களால் ஆபத்தில்லை என்பதால் பெண்கள் நெருங்கிப் பழகுவார்கள்.

புகைப்பிடித்து எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.

பி.கு:-அரைத்த மாவோ தெரியல்லை.

Saturday, 20 June 2009

அழகான அந்தப் பனை மரம்

அன்று

"முந்தியடா நாங்கள் பனையோட வருசம் முழுக்க மினக்கடுவோம்." என்று அடிக்கடி எங்கட பாட்டி சொல்லுவா.(அம்மம்மாவின் அம்மா) ஒவ்வொரு மாதத்திலும் என்ன செய்வது என்பதை ஒரு எதுகையோடு சொல்லுவா.

தை-தறையைக் கிண்டு
மாசி-ஒடியலைப் போட்டுக் கட்டி வை
பங்குனி-பருவப்பாளை
சித்திரை -சிறு குரும்பை
வைகாசி- வளர் குரும்பை
ஆனி-தலை
ஆடி-ஓடித்திரி
ஆவணி- பாயை விரி
புரட்டாதி-திரட்டி உருட்டி பரணில ஏத்து
ஐப்பசி-அவிட்டுப் பிடி
கார்த்திகை -கழுவிப்பிடி
மார்கழி-மகிழம் போடு.

இப்படித்தான் பாட்டியின் வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.

அதாவது பங்குனி மாதத்திலிருந்து பார்த்தோமேயானால் இம்மாதத்தில்தான் பாளைகள் பருவமடைந்து (பூக்கள் பூக்கத் துவங்கும்) இனவிருத்திக்கு தயாராகின்றன. ஆண் பனையில் கள்ளு கிடைப்பது இக்காலத்தில்தான். சித்திரை மாதத்தில் பெண் பனை காய்க்கத் தொடங்கும். சிறு சிறு குரும்பைகள் உருவாகி இருக்கும்.வைகாசி மாதத்தில் குரும்பை வளர்ந்து காய்கள் நுங்கு பருவத்தை அடையும்.நுங்கு குடிப்பது ஊரில் எங்களுக்கு அக்காலத்தில் முக்கியமான ஒரு வேலை.(எங்களுக்கு சின்ன வயதில் வைகாசி விருப்பம் வளர்ந்த பின்பு பங்குனி ஏன் என்று விளங்குதோ ?) ஆனி மாதத்தில் நுங்குகள் சீக்காய்ப் பருவத்தை அடையும்.ஆடி மாதம் பனங்காய் பருவம்.பழுத்து விழத் தொடங்கும்.ஓடித்திரிந்து பனங்காய் பொறுக்கும் காலம்.ஆவணி பனங்களியில் பனாட்டு போடும் காலம்.பனங்காயை பிழிந்து வரும் களியை கொண்டே பனாட்டு போடப்படும்.பனங்கொட்டை சேகரித்து வைக்கப்படும். பனாட்டு போடுவது ஓலைப்பாயில். அதுதான் அந்த ஆவணி பாயை விரி என்பதன் அர்த்தம்.புரட்டாதி மாதம் போட்ட பனாட்டை அப்படியே பாயோடு சுருட்டி கொஞ்ச காலம் வைத்திருத்தல்(திரட்டி உருட்டி.....).ஐப்பசியில் பாயிலிருந்து பனாட்டைக் கழற்றி எடுக்கும் மாதம்.(அவிட்டுப்பிடி) கார்த்திகையில் ஓலைப்பாயை கழுவுதல்(கழுவிப்பிடி). அத்தோடு மழைக்காலம் ஆகையால் சேகரித்து வைத்தபனங்கொட்டையை வைத்து பாத்தி போடுவது (மண்ணுக்குள் கிழங்கை தோண்டி எடுக்கக் கூடிய முறையில் தாழ்த்தல்)இம்மாதத்தில்தான் . மார்கழி சொல்லக்கூடிய அளவில் பனை எதையும் செய்வதில்லை. தை மாதத்தில்தான் கார்த்திகை மாதம் போட்ட பாத்தியைக் கிண்டி கிழங்கு எடுக்கும் மாதம். கிழங்கை அவித்து சாப்பிடுவார்கள். அவித்த கிழங்கை வெயிலில் காயப்போட்டு புளுக்கொடியலாகவும் சாப்பிடுவார்கள். அவிக்காமல் காயப்போட்டு ஒடியலாக்கி புட்டு,கூழ் என்பன ஆக்கவும் பயன்படும்.மாசி ஒடியலை பத்திரப்படுத்தி வைத்தல்.

இப்படி இருந்தது ஒரு காலம். அழிவு என்பதே இல்லை என்பது போல் வாழ்ந்து வந்தன கற்பகங்கள்.
********************************************************

இன்று
வடக்கில் செல்லடிகளால் வட்டுக்கள் கழன்ற நிலையில் எத்தனை பனைகள்.
ஆனாலும்.............................
உயிர் போனபின்னும் நெஞ்சை நிமிர்த்தி
எழுந்து நிற்கும் கற்பக தருக்களே !
நீங்கள் கூட ஒருவகையில்
மாவீரர்களே..........
*******************************************************
தீர்க்கதரிசிப்பனைகள்எங்கள் உறவுகள் வட்டுகளை இழக்கப் போகின்றன
என முன்கூட்டியே அறிந்துதான்,
ஒருவித்திலைப் பனைகளே !
ஒன்றுக்கு பல கெட்டு விட்டு
பல வட்டுப் பனைகளானீரோ!!
********************************************************
இனிமேல்
விழ விழ எழுங்கள் கற்பக தருக்களே ஒன்றல்ல ஓராயிரமாய்.
*********************************************************

Friday, 5 June 2009

எல்லாளனும் துட்டகாமினியும்(துட்டகைமுனு)

இலங்கையில் எல்லாளன் ஆட்சிக்காலத்தை சிங்கள பௌத்தத்திற்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்கும் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கையில் ................

அனுராதபுர ராசதானியை கி.மு 247 இலிருந்து கி.மு 29 வரை கிட்டத்தட்ட 220 ஆண்டுகளில் ஆண்ட 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் எல்லாளனும் ஒருவன். சேனன்,குத்திகன் என்ற தமிழ் மன்னர்களை அசேலன் என்ற சிங்கள மன்னன் தோற்கடித்து சில ஆண்டுகள் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது கி.மு 145 இல் எல்லாளன் உத்தரப்பிரதேசத்திலிருந்து (இலங்கையின் வட பகுதி) படையெடுத்து வந்து அரசைக் கைப்பற்றினான். பாளி நூல்கள் எல்லாளனை சோழன் என்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் அவ்வாறு ஒரு சோழன் இல்லை. உத்திரப் பிரதேசத்திலிருந்து (பூநகரிப் பிரதேசம் ) வந்த தமிழ் மன்னனாகவே கருத முடியும். வவுனிக்குளத்தை இவன் முதலில் புனரமைத்ததன் மூலம் அவன் ஈழ மன்னனாகவே இருக்கமுடியும் எனலாம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எல்லாளன் நீதி தவறாத ஆட்சி நடத்தினான் எனவும்,பெளத்த மதத்தை ஆதரித்தான் எனவும் மகாவம்சம் ஒப்புக்கொள்கிறது. மனு நீதி கண்ட சோழனுக்கு ஒப்பிட்டு பல ஐதீக கதைகள் மூலம் செங்கோலோச்சிய மன்னானாக சித்தரிக்கிறது.

கதை 1:

எல்லாளனின் சயன அறையில் ஆராய்ச்சி மணி ஒன்று இருந்தது. மக்கள் தமது கஷ்டங்களை எந்நேரமும் மன்னனிடம் தெரிவிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. குஞ்சை பாம்பொன்று இரைக்காக விழுங்கிவிட தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்து மன்னைடம் முறையிட மன்னன் அப்பாம்பை பிடித்துவரச்சொல்லி அதன் வயிற்றைக் கிழித்து குஞ்சை மீட்டுக்கொடுத்தான்.

கதை 2:-

வயதான மூதாட்டி ஒருத்தி வெயிலில் காயப்போட்ட அரிசி பருவம் தப்பிய மழையால் பழுதடைந்து விடுகிறது. இதை எல்லாள மன்னனிடம் முறையிட்டபோது வாரம் ஒரு முறை இரவில் மாத்திரம் மழை வேண்டும் என வருணனிடம் பிரார்த்தனை செய்கின்றான்.


இக்கதைகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகங்கள் இருப்பினும் எல்லாளன் ஒரு அறநெறி தவறாத மன்னன் என்பதை கூற முனைகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும்.இவ்வாறாக அனுராதபுரத்தில் எல்லாளனின் ஆட்சி நடந்து கொண்டிருக்க கல்யாணி ராசதானியை களனிதீசனும், உருகுணு ராசதானியை காக்கவண்ணதீசனும் எல்லாளனுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி புரிந்தனர். காக்கவண்ணதீசனின் மனைவி விகாரமாதேவி. இருவரும் மணம் முடித்த கதை சுவரஸ்யமானது தேவையற்ற தன்மை கருதி கூறவில்லை. விகாரமாதேவி ஒரு துவேசம் பிடித்தவளாக காணப்பட்டாள். துட்டகாமினி கருவில் இருந்தபோது சில குரோதமான மசக்கை ஆசைகள் அடியாட்கள் மூலம் அவளுக்காக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒருஆசைதான் எல்லாளனின் முதலாவது படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினை கழுவிய நீரினை அருந்தவேண்டும் என்பது. அந்த ஆசை கோழைத்தனமாக தளபதி ஒருவனை ஒளிந்திருந்து கொன்றதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. கருவிலேயே இன,மத துவேசத்தை ஊட்டுகிறாள் விகாரமாதேவி. பிறந்த பின்பும் காமினி அபயன் என்ற இயற்பெயர் கொண்ட துட்டகாமினி அவ்வாறே வளர்க்கப்படுகிறான். தந்தையின் சொல் கேளாமல் ஒரு அடங்காப்பிடாரியாக இருந்ததால் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். இவனுடைய தம்பி சத்தாதீசன்.

தந்தை ஒரு நாள் சகோதரர்கள் இருவரிடமும் மூன்று விடயங்களை தான் இறந்தபின்பும் கடைப்பிடிக்க வேண்டும் என மகன்மாரிடம் கேட்கிறார். பெளத்த சங்கத்திற்கு பணிவாக இருத்தல் ,சகோதரர்கள் ஒற்றுமையாக இருத்தல்,தமிழரோடு போர் புரியக்கூடாது என்பனவே அம்மூன்று கோரிக்கைக்களுமாகும். மூன்றாவது கோரிக்கையை துட்டகைமுனு ஏற்க மறுத்துவிட்டான்.


தந்தை சிறிது காலத்தின் பின் இறந்துவிட பாரிய சேனைகளோடும் தாய் விகாரமாதேவியோடும் ,500 பிக்குகளோடும் அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கிறான் துட்டகாமினி . பிக்குகள் போரில் பங்கு பற்றியது இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும். நான் அரச போகங்களுக்காக யுத்தத்தில் இறங்கவில்லை பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கிறேன் என்ற இன மத துவேசத்தை கிளப்பி விட்டு சிங்களவரின் பெரும் ஆதரவோடு போர்க்களம் புகுகின்றான். நீதி தவறாத எல்லாளனோடு சண்டையிட துட்டனுக்கு இவ்வாறான காரணத்தையே மக்களுக்கு சொல்ல வேண்டியிருந்தது.

முதலாவது சண்டை மகியங்கனையில்ஆரம்பமாகிறது.துட்டகாமினி வெற்றியடைகிறான்.தொடர்ந்து அம்பகீர்த்தம்,சர்ப்பக்கோட்டை , அந்தர சொப்பம், நாளிசொப்பம் ,கச்சதீர்த்தம், கொத்த நகரம் ,விஜிதபுரம் ஆகிய பிரதேசங்கள் தந்திரத்தாலும்,படைவலிமையாலும் கைப்பற்றப் படுகின்றன. அம்பகீர்த்தத்தை கைப்பற்ற துட்டகாமினிக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. அம்பகீர்த்தத்தின் தளபதி தித்தம்பன் பெண்கள் விடயத்தில் பலவீனமானவன். தனது தாய் மூலம் அவனை தன் வலையில் சிக்கவைத்து வெற்றியடைகிறான். எதிரியினுடனான தாயின் திருமணத்திற்கு துட்டகாமினியின் சம்மதமும் இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மேலும் நான்கு மாதங்கள் தேவைப்பட்டன பலம் வாய்ந்த விஜிதபுரத்தை (பொலநறுவை) கைப்பற்றுவதற்கு. அவ்வெற்றியைத்தொடர்ந்து அனுராதபுரத்தை நோக்கி துட்டனின் படையணி பயணிக்கிறது கிரிலகம்,மகிளநகரம் ஆகிய இடங்களில் எல்லாளனின் படைகளோடு மோதி தோல்வியடைகிறது. இத் தோல்வியைத் தொடர்ந்து துட்டகைமுனு காசபர்வதம் என்ற இடத்தில் பாசறையிட்டு ஓய்வெடுக்க தீர்மானிக்கிறான்.

உருகுணுவிலிருந்து புறப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தது. படையணிகளுக்கு ஒய்வு கொடுத்து மேலும் ஆளணி திரட்டவே ஓய்வெடுக்கும் திட்டத்தை மேற்கொண்டான் துட்டகாமினி. ஒய்வு காலத்தின் பின்னர் காசபர்வத்தில் தீகஜந்து என்ற தளபதியின் தலைமையோடு மோதி துட்டன் வெற்றியடைகிறான்.காசபர்வத்திலிருந்து 18 மைல் தொலைவில் அநுராதபுரம் அமைந்திருந்தது. அடுத்ததாக படைகள் எல்லாளனின் இராசதானியான அனுராதபுரத்தை நோக்கி நகர்கின்றன. எல்லாளன் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்து தானே படையை வழிநடத்தி செல்வதாகத் தீர்மானிக்கிறான்.எல்லாளனின் தலைமையில் தமிழர் படையணி போருக்கு தயாராகியது. அனுராதபுரத்தை அடைந்த துட்டகாமினி ஒரு கபடத்தனமான வேலை பார்க்கிறான். எல்லாளனை தனிச்சமருக்கு அழைக்கிறான். நீதி தவறாத எல்லாளன் தனிச்சமருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் பாரிய வரலாற்றுத் தவறை இழைக்கிறான். 72 வயதான எல்லாளன் இளைஞனான துட்டகாமினியோடு தனியாகப் போரிட துணிந்தது பெரும் தவறாகிறது.

எல்லாளன் மகாபர்வதம் என்ற யானையிலும் துட்டன் கண்டுலன் என்ற யானையிலும் ஏறி தனிச்சமரை ஆரம்பிக்கின்றனர். எல்லாளனின் கை ஓங்கிக் காணப்படுகிறது. துட்டகாமினி கோழைத்தனமாக தனது யானையைச் சீண்டி மகாபர்வதத்தை தாக்குகிறான். கண்டுலன் தனது தந்தங்களால் தாக்க மகாபர்வதம் தரையில் வீழ்கிறது. எல்லாளன் கீழே விழும் தருணத்தில் துட்டன் தனது ஈட்டியால் தாக்கி எல்லாளனை வதம் செய்கிறான். எல்லாளனும் வீரமரணத்தை தழுவிக்கொள்கிறான். தனது வீரத்தோடு தமிழினத்தின் வாழ்க்கையை முன் நிறுத்தியதால் இத் தோல்வி தமிழினத்தின் தோல்வியாகிறது.

**கலாநிதி க.குணராசாவின் ஈழத்தவர் வரலாறு என்ற நூலிலிருந்து****

இலங்கை பாடவிதான திட்டத்தில் மேற்கூறியவற்றில் பல் விடயங்கள் தொட்டுச்செல்லப்பட்டாலும் தமிழர் உரிமை சம்பந்தமான விடயங்கள் விட்டே செல்லப்பட்டுள்ளன.

சில காலங்களுக்கு முன்னர் நான்இந்நூலைப் படித்தபின், எல்லாளனை நாயகனாக காட்டாத எனது பாடசாலைக் கால வரலாற்றாசிரியர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது .

கருத்துக்கள் :-

* தாயை வேசியாக்கி போரில் வெற்றியை பெற்ற ஒருவனை தனது பாட்டுடைத்தலைவனாக மகாநாமதேரர் கருதி பெரும் தவறிழைக்கிறார். மேலும் 24 ஆண்டுகால துட்டகாமினியின் ஆட்சியை 843 செய்யுள்களிலும் 44ஆண்டு கால எல்லாளனின் ஆட்சியை 21 செய்யுள்களிலும் கூறி தமிழினத் துவேசத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

* எல்லாளனை சோழ அரசனாக காட்ட முயன்று இலங்கையில் ஆரம்ப காலத்திலேயே நாகரிகமடைந்த தமிழினம் இல்லை என வருங்கால சந்ததிக்கு கூற முயல்கிறார்.

தன்னை வேறு இனம் ஆள்வது பொறுக்காமலேயே துட்டகாமினி அன்று போரிட்டான். ஆனால் இன்று தமிழினம் தன்னை தானாழ்வது பேரினவாதிகளுக்கு பொறுக்கவில்லை.காலம் செல்லச்செல்ல அறிவு வளர்கிறதா தேய்கிறதா????

Tuesday, 2 June 2009

கையெழுத்து,தலையெழுத்து

...................................................................................................
என் கையெழுத்து அசிங்கமானது.
ஆனால் வேகமானது.
வேகத்தால்தான் அசிங்கம் என எண்ணி,
வேகத்தை குறைக்க கை வலிக்குது.
என்ன மாயமோ தெரியல்லை
உன் பெயரை மாத்திரம்
அழாகாக எழுதுகிறேன்.
ஏன்????????????? ??
*
*
!@0)))))))))))))???????*****
())))0 ***
??
))))))(((((**
என்னுடைய தலையெழுத்தால்
கையெழுத்துவரை உன் காதலின் ஸ்பரிசம்.
...............................................................................................


................................................................................................
அழாகாகத்தான் இருந்தது என் கையெழுத்து
அசிங்கமாக்கிக் கொண்டேன்
நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய்.......
(((((கையெழுத்து நல்லா இருந்தா
தலையெழுத்து நல்லா இருக்காதடா
என்று சொன்ன அம்மம்மாவின் கதையைக் கேட்டு )))))
...................................................................................................


..................................................................................................
"ஆட்களின்ட மண்டையோட்டு உச்சியில ஒரு கிறுக்கல் மாதிரி இருக்கிறதை நான் பார்த்திருக்கிறேன் சவம் எரியக்குள்ள.அத பாட்டிட்டை கேட்க அதுதான் ஒருவரின்ர தலையெழுத்தாம். கடவுளின்ர கையெழுத்துக் கிறுக்கல்கள்தான் தலையெழுத்தாம் " சிரித்துக்கொண்டு அசைபோடும் ஊர் நண்பனின் ஞாபகங்கள்.
...............................................................................................

...............................................................................................
தமிழன் என்று கூறிக்கொள்கிறோம்.
எத்தனை பேர் தமிழில் கையெழுத்திடுகின்றோம்(கையொப்பம்)????

வெட்கப்படுவோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
...............................................................................................

காதல்,சிரிப்பு,ஞாபகம்,உண்மை