Sunday 24 May 2009

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

புதிய வலைப்பதிவாளராக உள்ளே நுழைகின்றேன். http://panaiyooran.blogspot.com/ எனும் வலைப்பதிவு ஒன்று வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பு அம்முகவரிக்கு செல்ல Blog has been removed என்றொரு அதிர்ச்சித்தகவல். ஆரம்பத்தில் அவ்வளவாக அது குறித்து கவலைப்படவில்லை. ஆனால் பல வலைப்பதிவாளர்கள் இது போன்ற சிக்கல்களை அண்மைக் காலமாக எதிர்கொண்டுள்ளனர் எனவும், அவ்வாறு இழந்த வலைப்பதிவுகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சில வலைப்பதிவுகள் மூலம் வாசித்தறிந்தபின் மிகவும் கவலைப்பட்டேன்(வைரஸ் பிரச்சினையாம்). சில நாட்களுக்குமுன் கிடைத்த தகவல்களால் கவலைப்பட்டு பின்பு மேலும் அது பற்றி அறிந்த பின் நிம்மதியானோம் (தமிழர்கள்) . ஆனால் எனது வலைப்பதிவு விடயத்தில் அது தலைகீழ்.

ஐந்து பதிவுகள் எழுதியிருந்தேன் (பெரிய அனுபவசாலி இல்லை). இறுதிப்பதிவில் கடவுளை கண்டபடி திட்டி தீர்த்திருந்தேன். அதனால்தான் சிக்கலாகியதோ எனவும் சில வேளை நினைத்ததுண்டு (என்ன ஒரு மூடநம்பிக்கை). எல்லாமே எனக்கு நல்ல பதிவுகள்தான் (எனக்கு மட்டும்). ஆனால் அன்னையர் தினத்துக்கு எழுதிய பதிவு மறக்கமுடியாது. அந்தப் பதிவை ஞாபகமூட்ட விருப்பம்.
...........................................................................................


அம்மா
கடந்துவிட்ட இரண்டரை வருடங்களில்
உன்னோடிருந்த நாட்கள் நாற்பதிலும் குறைவு.
படிப்பு நம்மைத் தூரப்படுத்திவிட்டது.
அருகில் இருக்கும்போது இறந்த அண்மையைவிட
தொலைவில் இருக்கும்போது
நினைவுகளால் என்றும் அண்மையில்......
விடுமுறைக்காக வருடத்திற்கொருமுறையாய்
இருமுறை வீட்டுக்கு வந்த நாட்களில்
நான் கவலைப்பட்டுவிடக்கூடாது என
நீ தவிர்த்துக்கொண்ட சின்ன சின்ன வீட்டுச்சண்டைகள்,
தொலைபேசியில் பேசும்போதே
உன்மனதில் உள்ளத்தைப் புர்ந்துகொள்ளும் என்னை
அழுகையை மறைத்துக்கொண்டு
புன்னகையோடு வழியனுப்பிய நாட்கள்
என்றும் நினைவில்........................
எங்களை வளர்ப்பதற்காகவே
அரசாங்க உத்தியோகத்தை திறந்த
அன்புள்ள அம்மாவே
இன்றைய அன்னையர் தினத்தில்
இப் பதிவு உங்களுக்கு.


.......................................................................
இப் பதிவை ஞாபகப் படுத்தாமல் முதல் பதிவை ஆரம்பிப்பது என்னால் ஏனோ முடியவில்லை. எது எப்படியோ மீண்டும் புதிதாக வந்துள்ளேன் என்னை உள்ளே வரவேற்பீர்களா ??