Sunday, 14 February 2010

காதலர் தினத்தில் காதல்

"என்னடா இப்ப ஒரே காதல் தலைப்பிலேயே பதிவுகள் போடுறாய் ஏதாவது விசேசமோ அல்லது தோல்வியோ என அடிக்கடி கேட்கும் வடலியூரான் காதலர் தினத்தில் ஏன்டா ஒரு பதிவு போடல்லை "என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காய் கஷ்டப்பட்டு எழுதும்  ஒரு பதிவு.   காதல் பற்றி அலசாத கவிஞர்கள், உளவியலாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள், வலைப்பதிவர்கள்  என்று யாருமே  இல்லை. காதல் தொடர்பாக நான் நேரடியாக கேட்டு உரையாடி வாசித்து வியந்த சில சில விடயங்கள் தொடர்கின்றன. முக்கியமான விடயம் காதல் என்றால் அன்பு .தாய் பிள்ளை மேல காட்டுவதும் காதல்தான் என அதிகப் பிரசங்கித் தனமான விடயம் எதுவும் இல்லை.

........................................
சங்க காலங்களில்    ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகின்ற போது  "அவன் அவள் மேல் காமம் கொண்டான்." எனக் கூறுவது ஒரு நாகரிகமற்ற சொல்லாகக் கருதப்பட்டது.  அவையிலே பிரயோகிக்கப் பட வேண்டிய அவசியம் கருதி "காதல்" என்ற சொல் மூலம் அந்த உறவு விபரிக்கப் பட்டதாம். ஆக
 காதல் என்பது காமம் எனும் பதத்தின் இடக்கரடக்கலாம். 
........................................
உலகத்திலுள்ள அழகான விடயம்  என்ன? காமம் ஒன்றே ஒப்பற்ற அழகுடையது. காமம் என்ற ஒன்று இல்லா விட்டால் வாழ்வியலிலே ஒரு ஆழ்ந்த ஈடுபாடு யாருக்கும் வந்துவிடாது. ஆனால் காமத்தை சிற்றின்பம் என்றும் இறைவனை உணர்தலே பேரின்பம் என்றும் மதங்கள் போதிக்கின்றன.      அது பற்றி நமக்குத் தெரியாது விட்டுவிடுவோம்.
...................................................

ஒருதலைக் காதல் என்று சொல்வது சரியா?
உண்மையில் ஒருதலையாகக் காதலித்தல் என்பது காதல் இல்லையாம் . அது காதல் மீதான ஒரு ஏக்கமாம். ஆனால் இந்த காதல் மீதான ஏக்கம் எனும் உணர்வு  காதலை விட புனிதமானதாம். இதிலே காதல் கொஞ்சம் தூக்கல் காமம் கொஞ்சம் கம்மி 

முரளி ஒருபடத்திலே சொல்லுவார் 
ஒருத்தி ஒருத்தனின் காதலை ஏற்றுக்கொள்ளும்போது  அங்கு காதல் 50 %
ஒருதலையாக ஒருத்தியை விரும்பி அவள் அந்தக் காதலை மறுக்கிறபோது காதல் 75 %  .
சொல்லாமலே ஒருத்தியைக் காதலிக்கின்றபோது அதாவது நீ காதலிப்பது அவளுக்கே தெரியாமல் இருக்கும்போது அங்குதான் காதல் 100 %
 ...............................................
காதலர்கள் காதலையும் காதலரையும் காதலிக்கும்போது அக்காதல் ஒருவேளை தோற்றுப் போனாலும் அப்பிரிவு தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனெனில் காதலித்த காதலர் இல்லை ஆனால் காதலை நான் காதலிக்கிறேன்.இன்னொருவரைக் காதலிக்கலாம் என்ற நிலைப்பாடு இருக்கும். ஆனால் காதலரை மட்டும் காதலித்து அக்காதல் பிரிந்தால் சோகமே மிச்சம்.எல்லாத்தையும் விட்டிட்டு காதலர் தினத்தை சந்தோசமாக் கொண்டாடுங்கோ.


காதலர்தின வாழ்த்துக்கள்   

Monday, 8 February 2010

விரிவுரையில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை

ஒருவேளை நீ என்னைக் காதலித்து
நாமிருவரும் கைப்பிடித்து
பிள்ளை குட்டி பல பெத்து
வாழ்க்கையை வாழ்ந்து கழித்து
மரணவாசல் திறக்கும்போது
எனக்குத் தெய்வ நம்பிக்கை வந்தால்
இறைவனிடம் கேட்பேன்
என்னவளே முதலில் சாக வேண்டும் என்று
ஒருவேளை நான் முதலில் இறந்துவிட்டால் 
தனியாக நீ அல்லல் படுவதை 
பேயாக இருக்கும் என்னால் தங்கிக் கொள்ளவே முடியாது. 

...........................................................................கையிலே புத்தகம் மனம் முழுக்க நீ
உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு நாளும் கடக்க
ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறேன்
கடக்கின்றன பல பக்கங்கள்
திடீரென புத்தகத்திலுள்ளவற்றை    வாசிக்கிறேன்
ஒன்றுமே புரியவில்லை
அப்போதுதான் உறைக்கிறது
உன்னோடு நான் வாழவில்லை,
நீ என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது . 

Wednesday, 3 February 2010

இருமை இருக்கா? இல்லையா???

 அதென்ன இருமை ??

BINARY என்று சொல்வார்களே அதுதான்.

உன்னைப் போல் ஒருவனில் கமல் மோகன்லாலிடம் "BINARYயாப் பதில் சொல்லுங்க மிஸ்டர்.மாறன் tell yes or no " என்று கூறுவார். அதுதான் அதேதான். ஒன்று அல்லது மற்றொன்று. எது வித நெகிழ்வுத் தன்மையற்றவை. கணிதத்தில் ஈரடி எண்கள் (Binary numbers)என்று உள்ளது. அதிலுள்ள இலக்கங்கள் ௦,1 மாத்திரமே.


சாதாரண இலக்கங்கள்               ஈரடி எண்கள்
(பத்தின் அடிகொண்டவை)          
1                                                           =1                                        

2                                                          =10

3                                                           =11

4                                                          = 100

5                                                            =101

என்னடா கணித பாடம் நடத்த வெளிக்கிட்டான் என்று சொல்கிறீர்கள். விளங்குது.

எதற்காக இந்த binary என்று கேட்கலாம். சொல்ல வந்த விஷயம் இதுதான். இருமை இயல்புகள் நடைமுறையில் மிகவும் குறைவே. இல்லை என்றுகூட சொல்லலாம். இல்லை என சொல்ல முடியாமைக்குக் காரணம் அனைத்துமே இருமை அற்றவை என கூறும்போது. நான் கூறும் விடயம் அங்கு இருமைத் தன்மையை சுட்டுகிறது. எதுவுமே இருமை இல்லை அல்லது அப்படி நீ கூறுவது பிழை என்று கூறலாம். இங்கு தொனிப்பது இருமை இயல்பே.


நீ நல்லவனா கெட்டவனா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

கடவுள் இருந்தால் அவர் நல்லவரா கெட்டவரா?

அவள் அழகா இல்லையா?

தமிழ் பேசும் மக்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த விதம் சரியா பிழையா ???

இவ்வாறு எண்ணற்ற கேள்விகள் கேட்டுப்பார்த்து binary யாப் பதில் கூறிப் பாருங்கள். மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். உலகம் என்பது கறுப்பு வெள்ளை நிறங்களை மாத்திரம் கொண்டதல்ல சாம்பல் நிறங்களையே பெருமளவில் கொண்டது. காப்மேயர் வெற்றிக்கான வழிமுறைகள் என்ற  நூலில் இதையே குறிப்பிட்டிருப்பார்.உரு 1    போல் வாழ்க்கை இருக்காது உரு 2 போன்றதே இந்த உலகம்
இருமை குறைவுதான் இந்த உலகத்திலே ...............

Tuesday, 2 February 2010

இன்றைய தருணங்கள்

மலையைக் கட்டி மயிராலை இழுக்கப் பார்த்தோம். வந்தா மலை போனா மயிர்தானே என்று எண்ணிக்கொண்டு. மயிர் போச்சுது. உயிரும் போகுமோ தெரியல்லை. அதான் இலங்கை ஜனாதிபதித் தேர்தல்.   
............................................................................

உன்னைப்பற்றிய எண்ணங்கள் அதிகரித்திருக்கின்றன. காதலை சொல்வதற்கான வயது கடக்கும் தறுவாய் போன்றொதொரு  கற்பனையான கால எல்லைக்கோடு முன்னே நின்று வெருட்டுகிறது. உன்னை facebook இல் சந்தித்தபின் சந்தோசமும் பயமும் ஏக்கமும் சேர்ந்து என்னை பாடாய்ப் படுத்துகின்றன. உன் புகைப்படம் கிடைத்தும் வேண்டாம் என விட்டு வந்தபோதும் அவற்றை  சேமிக்கத் தொடங்கியிருக்கின்ற இனம்புரியா
பைத்தியக்காரத்தனம் . அதிலே சிரித்துச் சிரித்தே என்னை ...................
.......................................................................

இறுதி semestar ஒரு அவசர உலகமாய். ..........

.......................................................................  

நீண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகத்தினுள் நுழைகிறபோது எழுத்துகளின் வேகத்தில் ஒரு வித மந்தம். பிரயோசனமாய் எதுவுமே எழுதமாட்டேன் என்கிற என்மீதான அசாத்திய நம்பிக்கை.
...................................................................