Friday 31 July 2009

இன ஒற்றுமை என்பது இதுதானோ?

இலங்கையிலுள்ள சிங்கள மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்.சிரித்து சிந்தித்து கவலைப்பட வேண்டிய விடயம் ஒன்று.


பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில செயற்பாடுகளை எதிர்த்தும், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகளை எதிர்த்தும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழமை. இதுவரை காலமும் சிங்கள மொழியிலேயே சுவரொட்டிகள் ஓட்டப் பட்டு வந்தன. இரண்டு கிழமைகளுக்கு முதல் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலிருந்து சுவரொட்டி ஒன்று தமிழில்மொழி பெயர்த்து எழுதப்பட வேண்டும் என அறிவித்தல் வந்திருந்தது. இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம் என்பதே அச்சுவரொட்டியின் சாரம்.தமிழ் மொழியிலேயே தமிழ், முஸ்லீம் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தது. இதனை அப்படியே தீந்தையால் எழுதுங்கள் என்று. "சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என்பதே சுவரொட்டியில் எழுதப் படவேண்டிய வாசகம்.

தமிழ் மாணவர்கள் தமிழ் மீது கொண்ட காதலால் "தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுகிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என எழுதிவிட்டார்கள். தமிழ் வாசிக்கக்கூடிய சிங்கள மாணவர்கள் இம் மாற்றத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். சுவரொட்டி எழுதிய மாணவனை சிறிது நேரம் ஏசினார்கள். பின்பு தங்களே ஒழுங்கை தாங்கள் எழுதிக் கொடுத்தது போல் மாற்றினார்கள். சுவரொட்டி ஒட்டப்பட்டது.


பி.கு:- சிறுபான்மை இனங்களின் மனதை வெல்லவேண்டும் என்பதற்காக ஒட்டப்படும் சுவரொட்டியிலேயே பெரும்பான்மையினரின் குறுகிய மனப்பான்மை.

Thursday 30 July 2009

எப்போது செத்துப்போவேன்?

ஒரு முட்டாள் கழுதை ஒன்று வைத்திருந்தான். அவன் கழுதையோடு வழமையாக வேலைக்கு செல்லும் வழியில் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவரிடம் இந்த முட்டாள் எனக்கு சாத்திரம் கூறுமாறு தினமும் நச்சரிப்பான். ஞானியோ பிறகு ஒரு நாள் சொல்லுகிறேன் என காலத்தைக் கடத்தி வந்தார். ஓர் நாள் அவன் ஞானியிடம் நான் எப்போது செத்துப் போவேன் என்பதை மட்டுமாவது கூறுமாறு கேட்டான். எதோ வேலையிலிருந்த ஞானி உன்னுடைய கழுதை ஒரு நாளில் மூன்று தடவை தும்மினால் நீ இறந்து விடுவாய் என்கிறார். முட்டாளுக்கு பயங்கர சந்தோசம் ஏனெனின் அவனுடைய கழுதை இதுவரை தும்மியதை அவன் காணவில்லை. அன்றைய பயணத்தை அவன் மகிழ்ச்சியுடன் தொடர்கிறான்.

போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று கழுதை ஒரு தடவை தும்மியது.இவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தனது தொப்பியை கழற்றி கழுதையின் மூக்கைச் சுற்றிக் கட்டுகிறான். கழுதை சிறிது நேரம் அமைதியாக பிரயாணத்தைத் தொடர்ந்தது. தொப்பியிலுள்ள தூசி கழுதையின் நாசிக்குள் போய் அது இரண்டாவது முறையும் தும்மியது. மரண பயம் முட்டாளுக்கு அதிகாமகியது. இன்னொரு முறை தும்மினால் இறந்துவிடுவோம் எனும் பயத்தில் நல்ல பலமான உருண்டையான இரு கற்களை தெருவிலே பொறுக்கி தனது செல்லப் பிராணியின் மூக்குத் துவாரத்தில் அடைகிறான். கற்கள் சரியாக அடையப் பட்டுள்ளதா என குனிந்து பார்க்கையில் கழுதை மீண்டும் பெரிதாக ஒரு தும்மல் போடுகிறது. அவன் அடைந்த கற்களில் ஒன்று நெற்றிப் பொட்டில் பட்டு இறந்துவிடுகிறான்.

Tuesday 21 July 2009

அரசாங்கம்? அதிகாரிகள்? முதலாளிகள்? தொழிலாளிகள்? மக்கள் ?

6 வயதுடைய சிறுவன் ஒருவன் நித்திரை வராது கட்டிலில் படுத்தபடி தன் தந்தையிடம் "அப்பாய் அரசாங்கம் ,முதலாளி ,தொழிலாளி, மக்கள்,அதிகாரி இவங்களெல்லாம் ஆர்? " என்று கேட்கிறான்.

தந்தையும் மகனுக்கு நன்றாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் "இப்ப பார் அப்பு எங்கட வீட்டை எடுத்தால் உன்ட அம்மா இருக்கிறாதனே அவ அரசாங்கம் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்ளுவா. நான் முதலாளி காசு உழைக்கிறவன். நீ ஒரு அதிகாரி மாதிரி நீ சொல்லுறதைத்தான் அம்மா செய்வா.உன்ட தங்கச்சி மக்கள். எங்கடவீட்டு வேலைக்காரி இருக்கிறாள்தானே அவள் தொழிலாளி" என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

சிறுவனும் விளக்கத்தை கேட்டபடி நித்திரையாகிவிட்டான். நள்ளிரவில் அவனது 2 வயது தங்கச்சி வீரிட்டு அழத்தொடங்குகிறாள்.உடனே அவன் தன் தாயை எழுப்புகிறான். தாய் நித்திரையால் எழவில்லை. தந்தையை அங்கு காணவில்லை . அறையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறான் தந்தை நித்திரையிலுள்ள வேலைக்காரியின் காலைச் சுரண்டிக் கொண்டிருந்தார். அப்போது தங்கச்சி அழுகையை நிறுத்தியிருந்தாள். பின்னர் அவன் சென்று படுத்துவிட்டான்.


அடுத்தநாள் அதிகாலை நித்திரையால் எழுந்தவுடன் தகப்பனிடமும் தாயிடமும் " அப்பா எனக்கு நீங்கள் நேற்று இரவு சொல்லித்தந்த எல்லாம் விளங்கீற்று " என்கிறான்.

"என்னடாவிளங்கினது?" என தாய் கேட்கிறாள் .


"மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் அதை அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் "என்றான் .

தாய் அவனை வாரி எடுத்து முத்தமிடுகிறாள் பாவம் தகப்பன் கதை சொல்லும்போதே அவள் நித்திரை. தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை.


பி.கு:- suntv இன் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு முன்னர் ரசித்த நகைச்சுவை ஒன்று.

Saturday 18 July 2009

வலைப்பதிவால் பணம் சம்பாதிக்கலாமா?



அண்மையில் ஒரு நண்பன் மூலம் இணைய விளம்பரம் ஒன்று பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய இணையத்தளங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் இந்தச்சேவை adsence போன்றதே. adsence விளம்பர சேவையை உபயோகிப்பதில் தமிழ் வலைப்பதிவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கினர் என்பது யாவரும் அறிந்தது. இந்திய இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் மொழி பதிவுகள் இச் சேவையை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது என நினைக்கிறேன். எனது வலைப்பதிவை இச்சேவையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் ஏதாவது வைரஸ் பிரச்சினைகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இணைக்க பயமாக இருக்கிறது. தொழில்நுட்ப பதிவர்கள் யாராவது இச்சேவை சம்பந்தமாக பயனுள்ள பதிவு ஒன்றை எழுதி தமிழ் வலைப்பதிவர்கள் நன்மைபெற உதவினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.


இணையத்தள முகவரி :- http://www.adsforindians.com/ads/index.asp





மேலும் ஒரு விளம்பர சேவை பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் blogspot இற்கு இச்சேவை தனது சேவையை அனுமதிக்கவில்லை. wordpress பதிவர்கள் பயன் அடைய முடியம்.


இணையத்தள முகவரி :-http://www.inlinks.com/

Friday 17 July 2009

நானும் 3,4 வரியில க(வி)தை எழுதுவமெண்டு...

அண்மையில் இது ஒரு கனவுக்காரனின் பக்கத்தில் ஹைக்கூ பதிவைப் படித்தபின் நானும் அப்படி ஒரு பதிவு போட வேண்டும் என்ற ஆசையில் எழுதிய பதிவு இது.








நேரத்தை தின்கிறதா?
தேடலை அதிகரிக்கிறதா?
வரையறுக்க முடியவில்லை
பதிவுலகம்......






பந்தி வைக்கையில் (சொந்தக் கதை)

"வைக்கவா?"-நான்
"வேண்டாம் "-நீ
நமக்கிடையேயான முதல் உரையாடலே முற்றும் கோணலாய்






என்போன்ற .......


"படிக்காம நடுத்தெருவிலதான் நிக்கபோறாய்"
"படிச்சாப் பிறகும் நான் நடுத்தெருவிலதான் அம்மா"
நில அளவைத்துறை மாணவன்.





கேலி


எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்

ஒருவன் மட்டும் மௌனமாய்

கேலியின் விளைவு






இணையத்தில்

உன்னிடம் வரக்கூடாது என உறுதியாக நினைக்கிறேன்

மின்னஞ்சல் பார்த்தபின் அவ்வாறு இருக்க முடியவில்லை

facebookஏ உன்னைத்தான்








இலங்கையில் ஊடகங்களின் நிலை ......




"தேவையில்லாம வாய்காட்டதே

மனுசரைச் சுடுவதுபோல சுட்டுபோடுவாங்கள் "

தாய் நாய் தன் குட்டியிடம்.






இறைவன்


கடவுள் உங்களைக் கைவிட கைவிடமாட்டார்
நமட்டுச் சிரிப்புடன் ஈழத்தமிழர்

Wednesday 15 July 2009

முகாம்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய......


போரினால் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி முகாம்களிலே தமது கல்விச்செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ளமுடியாமல் உள்ள மாணவர்களின் தேவையை அறிந்து கொண்டு அவர்களது தேவையை பூர்த்தி செய்வதில் விருப்பமுடையவர்கள் இங்கு சொடுக்கவும்.

http://www.icuts.org/


விரைந்து செயற்படுங்கள்


நன்றி


Wednesday 8 July 2009

கடவுள் = 0

உலகத்தில் நடக்கும் அநீதிகளை அவதானிக்கும்போது மனம் நாத்திகப் பாதையில் செல்ல எத்தனிக்கிறது. ஆனாலும் அவ் விடயத்தில் பல குழப்ப நிலைகளும் பல தெளிந்த கருத்துக்களும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. விஞ்ஞானம் எப்படி என்பதற்குத்தான் விடையளிக்கும் அனால் மெய்ஞ்ஞானமே ஏன் என்பதற்கு விடையளிக்கும். என்று அண்மையில் எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் சில ஏன் என்ற கேள்விகளுக்கு மெய்ஞ்ஞானத்திடமும் பதில் இல்லை. உலகம் ஏன் படைக்கப் பட்டது? உலகத்தையும் உயிர்களையும் படைத்ததால் கடவுள் என்ன சாதித்தார்? போன்ற பல கேள்விகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கேட்டிருக்கிறேன்.திருப்தியான விளக்கங்கள் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஏன் என்று கேட்டுப்பாருங்கள் இனம் புரியாத குழப்ப நிலை தோன்றும். இதற்கு இறை நம்பிக்கையுடையோர் கொடுக்கும் விளக்கம் இறைவன் மனித அறிவால் வரையறுக்க முடியாதவன் என்பது.

எது எப்படியோ அகிலம் , உலகம் என்பன எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்ன கருத்தில் மனம் ஒன்றிப் போய் இருக்கிறது. இதுதான் அவனுடைய விளக்கம்.
எண்கோடு ஒன்றைக் கருதுமிடத்து வலது பக்கமாக நேர் எண்கள் அதிகரித்துச் செல்கின்றன. அதேபோல் இடதுபக்கமாக மறை எண்கள் பெறுமான அடிப்படையில் குறைந்து செல்கின்றன. வலது பக்கத்தில் நேர் முடிவிலி வரைக்கும் இடது பக்கத்தில் மறைமுடிவிலி வரைக்கும் எண்களின் பரம்பல் காணப்படுகிறது. எவ்வளவுதான் எண்களின் பரம்பல் இருப்பினும் எண்கோட்டின் மொத்தப் பெறுமதி பூச்சியம் ஆகும். ஆகவே எண்கோட்டின் ஆதாரம் பூச்சியம் என்பது தெளிவு. பூச்சியத்திலிருந்து இவ்வாறு எண்கள் தோன்றியுள்ளது போல எதுவுமேயற்ற சூனியத்திலிருந்து அகிலம் ,உலகம் போன்ற அனைத்துமே தோன்றியிருக்கலாம்.
எண்கோடு
எதுவுமேயல்லாத அந்த வெறுமை நிலைதான் கடவுள் என்பது. சித்தர்கள் ஞானிகளே இறைவனின் இந்நிலையை உணர்ந்தவர்கள். இந் நிலையை அறிவது அவ்வளவு சுலபமானதொன்றல்ல.
இப்படியிருந்தது நண்பனின் விளக்கம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்????

Saturday 4 July 2009

A9 திறந்தாச்சு

" இன்னும் பாதையை திறக்கிறாங்கள் இல்லை "
"எப்ப பாதையால வீட்ட போறதோ தெரியாது"

பல பேரின் வாயால் இந்தப் புலம்பல்களை கேட்கக் கூடியதாய் இருக்கிறது.

A9 பாதை திறந்தால்தான் பல பிரச்சினைகளுக்கு பாதை கிடைக்கும்என்பது உண்மை. யாழ் மக்கள் பாதை மூடியுள்ளதால் பல அத்தியாவசிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. வீட்டைப் பிரிந்து வெளியிடங்களில் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.


ஆனால் இன்று தங்களது சொந்த இடங்களை தொலைத்து விட்டு கூடாரங்களுக்குள் நாளாந்த வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களினூடாக அவர்கள் அங்கு இல்லாமல் நாம் அப் பாதையால் செல்வது அவசியமான ஒன்றா???

அவர்கள் நாளாந்த வாழ்க்கை நிம்மதியின்றி சென்று கொண்டிருக்கையில் எங்களுக்கு பாதை வேண்டாம் .