Thursday 7 October 2010

நகர மறுக்கும் நாட்கள்

குறைந்திருக்கின்ற வேலையில் அதிகரித்திருக்கிற சிந்தனை. எல்லையில்லாதது   சிந்தனை ஒன்றே. எதிர்காலத்தை பற்றிய சில விடயங்கள் வெறுமையாய் முன்னால்.     அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்ற பலரின் கேள்விகளுக்கு  பதிலளிக்க முடிவதில்லை இப்பொழுது. இன்று மட்டும் வாழ்ந்து எப்போதாவது நாளை பற்றி சிந்தித்து எடுக்கும் முடிவுகள் அநேகமாய் சிறப்பானதாய் இருந்தது. இன்று முழுவதும் நாளை  பற்றி சிந்தித்து சில வேளைகளில் இன்று வாழும்போது பல குழப்பங்கள். முடிவுகள் எட்டப் படுகிறது. . ஆனால் உடனேயே மாறிவிடுகிறது. தனிமையில் ஓய்வு தருவது கவலையை மட்டுமே . ஓய்வு தேவையில்லாத ஒரு சலுகை போலுள்ளது.பல விடயங்களில் பட்டுத் தெளிந்துவிட்டோம் என நினைத்தாலும் இன்னும் பட எவ்வளவோ இருக்கிறது என்ற நிஜம் அடிக்கடி முன்னால்.
...................................................................
நானும் காதலித்தேன் என்ற அளவுக்கு காதலை உணர்ந்திருக்கிறேன். இதை விட சொல்லுமளவுக்கு வர்ணிப்புகள் கவலைகள் இல்லை. சந்தோசத்தை சந்தோசமில்லாம சொல்லுவது கவலையை சிரிச்சுக் கொண்டு சொல்லுவது என்பது சுகம் என்றாலும் அது என் சார்ந்த விடயங்களுக்கு மாத்திரமே பொருத்தமானது என்பது உறைத்திருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட விடயம் அதற்கு மேலே குறிப்பிட்ட காதல் பற்றி இல்லை. உள்ளது உள்ளபடியே அங்கு சொல்லப் பட்டிருக்கிறது.
.................................................................

A..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது. இசையை இசையாக மாத்திரமே ரசிக்க வேண்டும் என வீரம் பேசும் என்னால் அதை நடைமுறைப் படுத்துவது கடினமாய் இருக்கிறது. சிற்சில பாடல்கள் கேட்கும் போது சிலிர்க்கின்ற தன்மை குறைந்து போயிருக்கிறது. 
...............................................................

சாதி, மத பிரிவினைகளை எதிர்ப்பவர்களால் இன பிரிவனையை எதிர்க்க முடிவதில்லை. என்ன காரணம் என்று புரிகிறது இல்லை. எனக்கும் கூட அதே நிலைமைதான். நான் இந்த மதத்தவன் இந்த சாதிக்காரன் எனபெருமை பேசுபவரை எதிர்க்கும் விமர்சனங்கள்  நான் இந்த இனத்தவன்  என்று கூறுபவர்களை எதிர்ப்பதில்லை. மற்றைய பாகுபாடுகளிலிருந்து இன ஒற்றுமை எவ்வாறு மேன்மை பெறுகிறது என்ற கேள்வி இன்னும்  இருந்து கொண்டே இருக்கிறது. நானும்  விதிவிலக்கில்லை. இனம் என்று என்னை தட்டியெழுப்ப ஒரு சிறு தூண்டல் போதுமாயிருக்கிறது. எதை நேசிக்கிறோமோ எதில் அதிகமான கவனம் செலுத்துகிறோமோ அதனாலேயே அழிகிறோம்     என்பது மாத்திரம் உண்மை. ஒவ்வொரு பாகுபாடும் மனிதனுக்கு அழிவையே தந்திருக்கிறது. அதே போல்தான் இந்த இன பாகுபாடும் என்று புரிகிறது. ஆக இது தட்டி எழுப்பப் பட வேண்டிய உணர்வு அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.
....................................................................................

யாருடனும் வாதிட்டு யார் மனதையும் புண்படுத்தவோ என்மீது வெறுப்பை தூண்டவோ செய்யக் கூடாது என உணர்ந்திருக்கிற கடவுள் பற்றிய விவாதங்கள்.
.......................................................................................
முடிவுகளுக்காக காத்திருப்பது வித்தியாசமான பயம் கலந்த உணர்வு. முடிவு அசாதகமாக வரும் என்பது உறுதியாகி அது எப்போது எப்படி இருக்கும் என்று காத்திருப்பது வாழ்க்கையில் பெரிய சகிப்புத் தன்மையை தந்துவிடுகிறது.



சந்திப்போம்

2 comments:

Anonymous said...

"endiran" negative results $viduthailaivirumbi$

வடலியூரான் said...

//A..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது.



கூட யோசிக்கிறாய் போல கிடக்குது. யோசியாதை எல்லாம் நல்ல மாத்ரியே நடக்கும்...