Sunday 15 January 2012

இனித்திடும் பொங்கல்


சின்ன வயதில இருந்தே ரொம்ப பிடிச்சுப் போன பண்டிகை எண்டா எனக்கு தைப்பொங்கல்தான். முக்கியமா தைப் பொங்கல் எண்டா என்னதான் பொங்கல் விசேசங்கள் இருந்தாலும் அந்த இப்பவும் ஞாபகம் வாறது சின்ன வயதில  மூக்கம் கடற்கரையும் பட்டமேத்தலும்தான் . பருத்தித் துறையில வடக்கு கடற்கரையில் (நடராசா அரங்கு) பட்டமேத்தல் போட்டி, கபடிப் போட்டி எண்டு  விசேசம் அதிகமாக இருந்தாலும் நாங்கள் எங்கட வீட்டுக்கு அருகிலுள்ள உறவுகள் அதிகமாக போவது மூக்கம் கடற்கரைக்குத்தான் . பொங்கல் எல்லாம் முடிந்து மாலை ஒரு 3 .30  4 . ௦௦ மணிக்கு எல்லோரும் எங்களுக்கு என்று கட்டிய பட்டத்துடன் மூக்கம் கடற்கரையை நோக்கி படையெடுப்போம். நான் எண்ட தோழர்கள் நிறையப் பேர் ஒண்டா வெளிக்கிட்டுப் போக அநேகமாகன வீடுகளிலுமிருந்து அவங்கட அம்மா அப்பா தங்கச்சிமார் அக்காமார் எல்லோரையும் காணக் கூடிய மாதிரி இருக்கும். கடற்கரைக்கு வாற பிள்ளைகளை ரசிக்கிற வயது அப்ப இல்லை.

அந்த வயதில பட்டம் ஏத்திறது ஒரு ப்ராஜெக்ட் மாதிரி. பொங்கலுக்கு   நீண்ட நாளைக்கு முன்னமே பட்டக்காலம் தொடங்கீடும்,  அந்த காலத்துக்கு ஒரு பெயரும் வச்சிருந்தம். வாலாக்கொடி , சீனட்டான் , பெட்டிக் கோடி, வௌவால் , படலம் , நட்சத்திரம் , கொக்கு, பிலாந்து,ஆறுமுகி எண்டு நிறையப் பட்டங்கள். பட்டங்கள் அதிண்ட நுணுக்கங்கள் பற்றி வடலியூரான்  ஒரு பதிவில விலாவாரியாப் போட்ட ஞாபகம் இருக்கு. பதிவை தேடித்  பார்த்தன்  காணல்ல .

தைப் பொங்கல் நாத்து பட்டமேத்த கடலுக்குப் போய்   சிலவேளை நிலத்தில பலமா அடிபட்டோ அல்லது வேற பட்டத்தோட மாடுபட்டோ கிழிந்து போய்விடும் .ஒரு முறை எண்ட பட்டம்  கடற்கரைக்கு போய் ஏத்த  வெளிக்கிட்ட உடனேயே கிழிந்து போக நான் கத்தி கூத்தாடி பெரிய ரகளை பண்ணின  பிறகு ஒவ்வொரு பொங்கலுக்கும்  அப்பா பசை திசு, நூல் கத்தரிக்கோல் எல்லாம் கொண்டு வருவார். பெரிய பட்டங்களை ஏத்தி எங்கட சின்ன பட்டங்களையெல்லாம் மாட்ட வைக்கிற  எங்களை விட பெரிய   பெடிகளிட்ட இருந்து எங்கட பட்டங்களை காப்பாத்த   படுகிற பாடும்   கஷ்டமும் இப்பவும் நெஞ்சில நிக்குது.  பட்டமேத்தலில்  நான் அவ்வளவு தேர்ச்சி இல்லை கட்டவும் பெரிசா  தெரியாது. ஊரில் அருளத்தான், பரணி அண்ணா, ரகு, S .K  இவங்கள்தான் கிங்க்ஸ். பருந்து கொக்கு பட்டம் கட்டிறது எண்டா சரியான கஷ்டம் ஏத்திறது அப்படித்தான் . எங்கட சுற்றாடலில்     அருளத்தான் பிலாந்து பட்டம் கட்டக் கூடிய ஆள். முந்தி நிறையப் பேர் நல்லா பிலாந்து கொக்கு கட்டுவாங்கள் எண்டெல்லாம் சொல்லுவாங்கள் . இன்னொரு க்ரூப் ஒண்டு இருந்தது இவங்கள் எங்கள விட நிறைய வயதுக்கு மூத்தவங்கள் . அப்ப ஒரு 24 25 வயதில இருந்த பெடிகள். ஞானேசன்  மாமா , ரங்கன் அண்ணா ராசன் அண்ணா சேகர் அண்ணா காந்தன் அண்ணா, சீலன் அண்ணா தயா அண்ணா  ஆட்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய வடிவான கொக்கு பட்டம் கட்டி ஏத்தினாங்கள்   . அடுத்த அடுத்த வருஷம் அதை கண்ணன் ஏத்தி  திரிஞ்சது ஞாபகம்  ஒரு நாவல் கலர் செட்டை வெள்ளை கலர் வண்டி சிம்பிள் . வண்டி செட்டை சிம்பிள் தலை இதெல்லாம் கொக்கு பட்டத்திலுள்ள பாகங்கள். technical  terms  என்று சொல்லக் கூடிய அளவுக்கு பிரசித்தமானவை. ஆனா எங்கட ஊருக்கு பக்கத்தில மாதனை எண்டு ஒரு ஊர் இருக்கு அவங்களை மாதிரி என்ன பட்டம் கட்ட ஆராலையும் முடியாது. அவ்வளவு  ஒரு நேர்த்தியா கட்டுவார்கள். நல்ல ஞாபகம் இருக்கு படலத்துக்கு ரண்டு  தடியை நட்டு வச்சு பூட்டி இருந்தாங்கள்.
மாதனை மைதானம் . துசி வீட்டுக் காணி இரண்டு வளவுகளும் பட்டமேத்தல் காலத்தின் பிரதான தளங்கள்.


   1995 இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின் கடற்கரைக்கு போவது கனவாய்ப் போனது . அந்தப் பராயத்தில அது பெரிய ஏக்கம் ஏமாற்றம்.  மூக்கத்துக்கு பின்பும்  நாங்கள் காலடி எடுத்து  வைக்க நிறைய காலம் எடுத்திச்சு. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  கடற்கரைக்கு போகும் காலத்தில் அந்த சிறுபிள்ளைத்தனம் கொஞ்சம் குறைந்து போய் இருந்தது. தைப் பொங்கல் எண்டா இப்ப கூட ஞாபகம் வாறது மூக்கம். 

பிறகு வந்த பொங்கல்கள் அவளவு விசேசமாய்  சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை. 2006 இல பல்கலைக் கழகத்துக்கு சென்ற பின் எல்லா தைப் பொங்கலும்  அங்கதான். அது ஒரு முக்கயமான கொண்டாட்டம். தமிழ்க் கலாசார மன்றத்தின் பெரிய ஒரு கொண்டாட்டம்.  இப்பதான் நடந்து முடிந்தாலும் எப்போதோ நடந்த நினைவுகளை மீட்க வேண்டும் போலிருக்கிற உணர்வு. எதோ ஒரு படபடப்பு பாஞ்சு பாஞ்சு வேலை  செய்யோணும் என்கிற உணர்வு . Girls அதுவும் பிரதானமான காரணமாய் இருக்கலாம்.  தமிழர் திருநாள் என்று சொல்லுவது எதோ சில மனக் கிளர்ச்சிகளையும் ஒரு அடையாளத்தையும் தந்தது போல உணர்ந்தவை அந்த நாட்கள். 2008  தைப் பொங்கல் பல்கலைக் கழகத்தில் இரண்டு பீடங்கள் மோதிக் கொண்டதில் எங்கட பீடமும் மூடப்பட்டு.    அந்த நேரத்தில பாதை மூடப் பட்டு இருந்ததாதால்  வவுனியாவில்... . 2009 2010 பொங்கல் கல்லூரியில் பல மறக்க முடியாத இனிமையான சில வடுக்களுடன் கூடிய நினைவோடு.


2007 புகைப்படத்தில் கிடைத்தது இந்தப் படம் :)



 2009 பொங்கல்



2010  பொங்கல் 

வடை சுடும்போது 2010  
...........................................

2011 ???????? 
...........................................
2012  கட்டாரில (Qatar) . ஒரு வெள்ளிக்கிழமை வந்திருக்கக் கூடாதா  என்ற எதிர்பார்ப்போடு .

அனைவருக்கும் தைபொங்கல்      வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . மாகி பண்டிகையை  கொண்டாடும் நேபாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

4 comments:

ARULNILAVAN said...

பனையூரான்... பறந்த,பறக்கும் நினைவுகளை பதிஞ்சிருக்கிறியள்....
பிறகென்ன....

நிலாமதி said...

இனிய பொங்கல் தை திருநாள் வாழ்த்துக்கள்....தற்போது வெளி நாட்டிலா ?

கறுப்பி! said...

Un forgetalbe memories!

சேவையன் said...

சுவையான ஆக்கம்