Friday 4 December 2009

A9 அவலங்கள்

பல்கலைக்கழக விடுமுறை நிறைவுபெற்றதால் வீட்டிலிருந்து புறப்பட்டு வவுனியாவுக்கு வந்துவிட்டேன். நாளை புறப்படுவோம் இன்று வவுனியாவில் தங்குவோம் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டேன். வந்த களைப்பு வேறு.நெருங்கிய உறவினர்ஒருவரும் அங்கு வசித்து வருவதால் தங்குவது சாத்தியமாகவும் இருந்தது. அடுத்தநாள் மத்தியானம் பல்கலைக் கழகத்திலிருந்து கூட்டாளி ஒருவன் "கம்பசுக்கு அவசரப்பட்டு வராதை சிலவேளை பூட்டுவாங்கள் போல கிடக்கு பண்டிக் காய்ச்சல் பிரச்சனையாம் ".கிழிஞ்சு போட்டுது . சீ..... ஒரு நாள் பிந்தி வீட்டிலிருந்து வெளிக்கிட்டிருக்கலாம் போல இருந்தது. "எப்பிடியும் இண்டைக்கு இரவுக்குத் தெரியவரும் இல்லாட்டி நாளைக்கு விடிய...... எதுக்கும் பாத்துப்போட்டு வா "என்று மேலதிகதகவல்கள்நண்பர்களிடமிருந்து. நானும் இரவு ஏதும் தெரியவரும் என்ற எதிர்பார்ப்போடு பல பேருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதும் என்ன செய்யப் போறாங்கள் என யாருக்கும் எதிர்வு கூறத்தெரியவில்லை. இரவே தெரிந்து கொண்டால் அடுத்த நாள் விடியவே வெளிக்கிட்டு பல்கலைக் கழகம் போகலாம் இல்லாட்டி வீட்டை(யாழ்ப்பாணம்) போகலாம்என நினைத்திருந்தேன். பயன் இல்லை. என்னசெய்வது? அன்று இரவும் வவுனியாவில் தங்கியாகிவிட்டது.

அடுத்தநாள் விடிந்த கையோடு நண்பன் ஒருவன் பல்கலையிலிருந்து "மச்சான் இண்டைக்கு பூட்ட மாட்டாங்கள் போலைகிடக்கு. doctor சொன்னவராம் இன்னும் இரண்டு நாள் பாத்திட்டுப் பூட்டுவமேண்டு". இனியும் இஞ்ச நிக்கேலாது வெளிக்கிடுவம் என முன்பகல் 10.௦௦ 00 மணிக்கு வெளிக்கிட்டேன். இரத்தினபுரிக்கு செல்ல வேண்டும் . கொழும்புக்கு சென்று அங்கிருந்து செல்வதே இலகுவானது. வவுனியாவிலிருந்து ரெயினில கொழும்புக்கு செல்வது பஸ்ஸை விட இலகுவானது. சோதனைச்சாவடிக் கெடுபிடிக்களே காரணம். ஆனால் நான் வெளிக்கிட்ட நேரத்துக்கு ரெயின்(புகையிரதம் தவறாக மழை எண்டு நினைக்காதேங்கோ )இல்லை. நல்ல மழை பெய்துகொண்டிருக்க வவுனியாவிலிருந்து ஆட்டோ ஒன்றில் பேருந்துத் தரிப்பிடத்துக்கு சென்றாகிவிட்டது. அங்கு ஒரு செக்கிங் பொலிசாரால். அப்பிடியே ஈரப்ப்பெரிய குளத்தில் ஒரு செக்கிங். அப்பிடியே மதவாச்சியில் ஒரு செக்கிங். மூன்று தரம் சோதனை வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் . அதில் ஈரப்பெரிய குளத்தில் அடையாள அட்டையைக் காட்டி பதியவேண்டும்." IDP camp ?" என ஒவ்வொருவரிடமும்கேள்விகள்.முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிப்போட்டும் அந்தக் கேள்விகள் என்னத்துக்கோ தெரியல்லை. மதவாச்சியை அடைந்தபோது 12 .00 ௦௦ இருக்கும். எதுக்கும் சாப்பிட்டு கொழும்பு பஸ்ஸில் ஏறுவம் எனத் தோன்றியது. சாப்பிட்டு முடிக்கும்போதுதொலைபேசியில் "டேய் கம்பஸ் பூட்டியாச்சு"திரும்பவும் வவுனியா செல்ல வேண்டிய கட்டாயம்.

வவுனியாவிலிருந்து அடுத்த நாள் விடிய யாழ்ப்பாணம் போவம் என விடிய ஒரு 8.30 மணிக்கு ஆயத்தமாகி விட்டேன். "சாப்பிட்டு போடா" என்ற உறவினர்களின் அன்புத் தொல்லையை புறக்கணிக்காது காலைச் சாப்பாடு கொஞ்சம் சுணங்கி வர வெளிக்கிட 9.30 ஆகிவிட்டது.கொஞ்சம் பிந்தீட்டுதோ என உள்ளுக்குள் ஒரு உறுத்தல். ஈரப்பெரிய குளம் வந்தாச்சு. அவ்வளவு சனம் இல்லை. நானும் போய் வரிசையில் இணைந்து கொண்டேன். அதில் இரண்டு வரிசை நின்றது. அதிகமாக ஆட்கள் நின்ற வரிசையில் நான் இணைந்து கொண்டேன். சிறியஅந்த மற்ற வரிசை பிறகு வந்தஆட்கள் உருவாக்கிக்கொண்ட கள்ள வரிசையாக்கும் என எண்ணிக்கொண்டேன். வரிசை முன்னேறுகிறது. நானும் கிட்டக் கிட்ட வந்திட்டன். திடீரென்று ஆட்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த இராணுவத்தில் ஒருவன் ஏன் இரண்டு வரிசை என சிங்களத்தில் கத்தினான். எங்கட வரிசை பிழை என்று சொல்லி அந்த வரிசையில் நின்ற அத்தனை பேரையும் குட்டியா நின்ற அடுத்த வரிசைக்கு அனுப்பினான். பிறகென்ன நாங்களும் அடுத்த வரிசையோடு ஐக்கியமானோம். அடுத்த வரிசைக்கு ஓடிப்போய்த்தான் எல்லோரும் இடம் பிடித்தார்கள் . நான் முன்னுக்கு நின்றதால் விரைவாக இடம்பிடிக்க முடியாமல் கடைசியாகப் போய்விட்டேன் அந்த புதிய வரிசையில்.

சிறிது நேரத்தில் எமது பல்கலையில் படித்து வெளியேறி அரசாங்க நில அளவையாளராகப் பணி புரியும் அண்ணா ஒருத்தரும் எனக்கு சிறிது பின்னால் வந்து இணைந்துகொண்டார்.பெயர் பத்தன் கண்டியிலிருந்து வருவதாக் சொன்னார். முன்னமே அறிமுகமானவர். கொஞ்சநேரம் சென்றிருக்கும் முன்னேறுவது நின்றிருந்தது. வந்த பஸ் எல்லாத்திலையும் ஆட்களை எத்தியாச்சாம் இனிமேல் பஸ் வந்தாத்தான்ஆட்களை எடுப்பார்களாம் . ஆனால் எப்பிடியும் போகலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இதுவரை வந்த ஒருத்தரையும் யாழ்ப்பாணத்தில் திருப்பி அனுப்பவில்லை எனஅறிந்திருந்ததால் இங்கேயும் அவ்வாறுதான் என நினைத்தேன். அங்குள்ள சில நபர்களிடமும் இதை தெரிவித்தேன். இப்படி சனத்துக்கு நம்பிக்கையூட்டியதால் ஒரு அண்ணாவும் ஒரு அக்காவும் என்னோட நண்பர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களோட கதைச்சு பொழுதை போக்காட்டிக் கொண்டிருந்தேன். அந்த அண்ணை ஒரு பொறியியலாளர். பெயர் சுதர்சன். அக்கா பேராதனையில் M.Sc செய்பவர். அரட்டை அடித்துக்கொண்டு இருக்கையில் திடீரென்று இனி ஆட்கள் எடுக்கபட மாட்டார்கள் என இராணுவத் தரப்பிலிருந்து அறிவித்தல். எல்லாற்றை முகமும் ஒரேயடியா வாடிப்போனது. எனக்கு இடி விழுந்தது போல இருந்தது. ஆனால் வந்த எல்லோரும் இன்று பதிந்து கொண்டால் பஸ்ஸில் நாளைக்கு வேளைக்கே ஏற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து கொண்டு பஸ்ஸை தவறவிட்டது ஒரு மாதிரியாக இருந்தது. திரும்ப வீட்டுக்கு போகவெட்கமாகவும் இருந்தது.

பதிவுகளை மேற்கொள்ள அதே வரிசையில் நின்றோம். பத்தன் அண்ணாவைக் கேட்டேன் எங்கே தங்குவம் என . வவுனியா நிலஅளவையாளர் விடுதியில்தங்கலாம் தன்னுடைய நண்பன் அங்கே இருப்பதாகசொன்னார். அல்லது வவுனியா வாடிவீட்டில தங்கலாம் என்று யோசனை சொல்ல சுதர்சன் அண்ணாவும் வாடி வீட்டில் தங்குவதென்றால் தானும் வருவதாக சொன்னார்.
மூவரும் பதிவுகளை முடித்துவிட்டு சோதனைச் சாவடிக்குஅருகாமையிலுள்ள கடை ஒன்றுக்கு தேநீர் அருந்தலாம் என செல்கிறோம்.

அந்தக்கடை ஒரு வயதான ஆச்சியுடையது . அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது தங்க இடம் இல்லை என்றால் தனது கடைக்குப் பக்கத்திலுள்ள அறையில் தங்கலாம் என்றார். அனால் மண் நிலம்தான் என முற்கூட்டியே கூறி விட்டார். அப்போது ஒரு வியாபாரி ஒருத்தரும் அங்கே தங்குவதற்காக வந்திருந்தார் . அவரின் தாய்மொழிசிங்களம். பெயர் ரவி. நாங்கள் தங்குவது என உறுதியாகிவிட்டது.
நாங்கள் தங்கிய அறை

குளிக்க வேண்டுமெனின் பக்கத்தில் குளம் இருப்பதாகவும் அங்கு செல்லலாம் என்றார். ஈரப்பெரியகுளம் ஈரப்பெரியகுளம் எண்டு சொல்லுற அந்தக் குளத்தில்
குளிக்கும் வாய்ப்பும் கிட்டியது.ரவியையும் எம்மோடு சேர்த்துக்கொண்டோம். நம் நால்வருக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு அமைதியாக மலர்ந்திருந்தது. நானும் பத்தன் அண்ணாவும் மாத்திரமே முதலே அறிமுகமானவர்கள்.

ஈரப்பெரியகுளம்

குளித்துவிட்டு வந்தபோது வேறுசில பெண்களுக்கும் ஆச்சி இடம் கொடுப்பதற்காக வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றார். ஆச்சியை விசாரித்ததில் அவருடைய மகன் இராணுவத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர்.

இரவு சாப்பிடுவதற்காக வவுனியா சென்று சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தோம். ஆச்சியின் வேண்டுகோளுக்கிணங்க தனது வீட்டில் தங்க வைக்கப்பட்டபெண்களுக்கும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தோம்.

என்னதான் பயணம் பிந்திப்போனாலும் நல்ல நட்பும் ஆச்சி போன்ற நல்ல உள்ளங்களையும் கிடைத்த திருப்தி வீடுவந்தபோது.

.........................................................................
மேலும்

எங்கும் தமிழர்களை வரிசையில் நிறுத்த அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பது விரக்தியை ஏற்படுத்துகிறது
.
யாழ்ப்பாணத்தில் வவுனியா செல்லக் காத்திருப்போர்

மழை வரும்போது வரிசையில் பிரயாணத்திற்கு காத்திருப்போர் பாடு பெரும்பாடாய்க் கிடக்கிறது . எப்போது நீங்கும் காத்திருப்பு என்ற ஏக்கம்




மழை பெய்து ஒரே சேறாக சிங்கள மகா வித்தியாலயம்


7 comments:

ilangan said...

அருமை. நல்லாச் சொன்னீங்க

நானும் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போனதைப்பற்றி ஒரு பயணப்பதிவு இட்டிருந்தேன்.

Muruganandan M.K. said...

அழகாகச் சொன்னீர்கள். சுவாரஸ்மாக இருந்தது.

நிலாமதி said...

பதிவு அழகானது. மண் வாசனையை நுகர்ந்தேன்.ரெயின் ( train ) ரயில் என்று எழுதுங்கள் தடுமாற்றம் வராது. வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிபா

பனையூரான் said...

நன்றிகள் ilangan, Dr.எம்.கே.முருகானந்தன்,நிலாமதி, ஆ.ஞானசேகரன்.

வடலியூரான் said...

பனையூரான் நல்ல அனுபவம்.

பனையூரான் said...

அனைவருக்கும் பகிர்வுக்கு நன்றிகள்