Wednesday 9 December 2009

நுண் காலநிலை (Microclimate )

இப்பொழுது இலங்கையில் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை ஆரம்பித்திருக்கிறது. மழை உக்கிரமாகப் பெய்யாவிட்டாலும் சராசரியாக வயல்களுக்குப் போதுமான அளவில் பெய்கிறது. மழை பிந்தி போய்விட்டதால் வயல்களும் பிந்தியே விதைக்கப்பட்டன. பயிர் வளரும் ஆரம்பப் பருவத்தில் அளவுக்கதிகமான மழை சேதத்தையே உருவாக்கும். ஆக மழை அளவாகப் பெய்வது இன்று வரை நன்மையே. இன்னும் சிறிது நாட்களில் உக்கிரமடையுமானால் அது நல்லது. ஆனால் யாழ் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் ஒரே அளவு மழை பெய்வதாகத் தெரியவில்லை. இடங்களுக்கு இடம் மழைவீழ்ச்சியின் அளவு பாரிய அளவில் வேறுபடுகிறது. பிரதேசங்களுக்கிடையேயான தூரத்துடன் ஒப்பு நோக்கும்போது இவ்வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக குறித்த ஒரு நாளில் நெல்லியடியில் நல்ல மழை பருத்தித்துறையில் மழை இல்லை. இவ்வாறு பல இடங்களில் பல தடவை. உகைப்பு மழையின் போது இவ்வாறான நிலைப்பாடு இருப்பது வழமை. கடலை அண்டிய பிரதேசங்களிலேயே மழை இருக்கும். ஆனால் பருவ மழையில் இந்த நிலைமை சற்று வித்தியாசமாக இருக்கிறது. Micro climate இன் போதே இந்நிலை தோன்றும். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது Micro climate ஆ இல்லையா என்பது
எனக்குத்தெரியாது.

அது சரி அதென்ன Microclimate ?

நுண் காலநிலை என தமிழ்ப் படுத்தியிருக்கிறேன். சரியா பிழையா என பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். குறிப்பிட்ட ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் காலநிலையிலுள்ள உள்ள வித்தியாசம் Microclimate எனப் படுகிறது . குறுகிய பிரதேசம் என்பது எவ்வளவு என வரையறுக்கப் படவில்லை. அது ஒரு அனுபவ அறிவின் மூலம் வரையறுக்கப் படுகிறது. குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றர், குறித்த சதுர மீற்றர் என மாறுபடும் சந்தர்ப்பத்துக்கேற்ப.
Microclimate ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

கட்டங்கள், தொழிற்சாலைகள்
கட்டங்கள் பெருமளவு வெப்பத்தை வெளிவிடக் கூடியன. தொழிற்சாலை களிலும் வெப்பம் பெரிய அளவில் வெளியேற்றப்படுகிறது. இவை குறுகிய பிரதேசத்துக்குள் காலநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. நகரப் பிரதேசங்களுக்கும், அதனை அண்டியுள்ள நகர மயமாக்கபடாத பிரதேசங்களுக்கும் இடையில் பாரிய அளவு காலநிலை வித்தியாசம் இருப்பது இதனாலேயே.

நீர்த்தேக்கங்கள்
ஆவியாதல், நீரோட்டங்கள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள். இதற்கு நல்ல உதாரணம் எமது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிரதேசம். இரத்தினபுரி மாவட்டத்தில் சமனல நீர்த்தேக்கம் உள்ளது இப்பிரதேசத்தில்தான். பாரிய ஒரு நீர்த்தேக்கம். இப் பிரதேசத்திலுள்ள கால நிலை மாற்றம் எதிர்வு கூறப்படுவது மிகவும் கடினமாகவே உள்ளது. ஒரு ஒழுங்கான காலநிலை இப்பிரதேசத்தில் நிலவுவதில்லை. இக்காலநிலை மாற்றங்களை GIS மூலம் விபரிக்கும் ஆய்வுகளை செய்வதில் சபரகமுவ பல்கலைக்கழக பூகோளவிஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தரைத் தோற்ற அமைப்புக்கள்.
மலைப் பிரதேசங்களிலேயே இந்த நிலை இருக்கும். காற்று ஒதுக்குப்பக்கம் காற்றுப் பக்கம் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள். இது பற்றி சிறிய வயதில் புத்தகங்களில் வாசித்திருப்போம்.

மண்ணின் தன்மை
மண் கொண்ட கனியுப்புக்கள் வெளிவிடும் கதிர்ப்புக்களும் வளி மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் பருவ மழையின்போது இவ்வாறான மாற்றங்கள் ஏன் என்றுதான் தெரியவில்லை.

இன்று ஒரு படம்

1 comment:

வேந்தன் said...

நல்ல பதிவு.

//மலைப் பிரதேசங்களிலேயே இந்த நிலை இருக்கும்.//
ம்..படமும் மப்பு மந்தாரமாகத்தான் இருக்கு.