Saturday 20 June 2009

அழகான அந்தப் பனை மரம்

அன்று

"முந்தியடா நாங்கள் பனையோட வருசம் முழுக்க மினக்கடுவோம்." என்று அடிக்கடி எங்கட பாட்டி சொல்லுவா.(அம்மம்மாவின் அம்மா) ஒவ்வொரு மாதத்திலும் என்ன செய்வது என்பதை ஒரு எதுகையோடு சொல்லுவா.

தை-தறையைக் கிண்டு
மாசி-ஒடியலைப் போட்டுக் கட்டி வை
பங்குனி-பருவப்பாளை
சித்திரை -சிறு குரும்பை
வைகாசி- வளர் குரும்பை
ஆனி-தலை
ஆடி-ஓடித்திரி
ஆவணி- பாயை விரி
புரட்டாதி-திரட்டி உருட்டி பரணில ஏத்து
ஐப்பசி-அவிட்டுப் பிடி
கார்த்திகை -கழுவிப்பிடி
மார்கழி-மகிழம் போடு.

இப்படித்தான் பாட்டியின் வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.

அதாவது பங்குனி மாதத்திலிருந்து பார்த்தோமேயானால் இம்மாதத்தில்தான் பாளைகள் பருவமடைந்து (பூக்கள் பூக்கத் துவங்கும்) இனவிருத்திக்கு தயாராகின்றன. ஆண் பனையில் கள்ளு கிடைப்பது இக்காலத்தில்தான். சித்திரை மாதத்தில் பெண் பனை காய்க்கத் தொடங்கும். சிறு சிறு குரும்பைகள் உருவாகி இருக்கும்.வைகாசி மாதத்தில் குரும்பை வளர்ந்து காய்கள் நுங்கு பருவத்தை அடையும்.நுங்கு குடிப்பது ஊரில் எங்களுக்கு அக்காலத்தில் முக்கியமான ஒரு வேலை.(எங்களுக்கு சின்ன வயதில் வைகாசி விருப்பம் வளர்ந்த பின்பு பங்குனி ஏன் என்று விளங்குதோ ?) ஆனி மாதத்தில் நுங்குகள் சீக்காய்ப் பருவத்தை அடையும்.ஆடி மாதம் பனங்காய் பருவம்.பழுத்து விழத் தொடங்கும்.ஓடித்திரிந்து பனங்காய் பொறுக்கும் காலம்.ஆவணி பனங்களியில் பனாட்டு போடும் காலம்.பனங்காயை பிழிந்து வரும் களியை கொண்டே பனாட்டு போடப்படும்.பனங்கொட்டை சேகரித்து வைக்கப்படும். பனாட்டு போடுவது ஓலைப்பாயில். அதுதான் அந்த ஆவணி பாயை விரி என்பதன் அர்த்தம்.புரட்டாதி மாதம் போட்ட பனாட்டை அப்படியே பாயோடு சுருட்டி கொஞ்ச காலம் வைத்திருத்தல்(திரட்டி உருட்டி.....).ஐப்பசியில் பாயிலிருந்து பனாட்டைக் கழற்றி எடுக்கும் மாதம்.(அவிட்டுப்பிடி) கார்த்திகையில் ஓலைப்பாயை கழுவுதல்(கழுவிப்பிடி). அத்தோடு மழைக்காலம் ஆகையால் சேகரித்து வைத்தபனங்கொட்டையை வைத்து பாத்தி போடுவது (மண்ணுக்குள் கிழங்கை தோண்டி எடுக்கக் கூடிய முறையில் தாழ்த்தல்)இம்மாதத்தில்தான் . மார்கழி சொல்லக்கூடிய அளவில் பனை எதையும் செய்வதில்லை. தை மாதத்தில்தான் கார்த்திகை மாதம் போட்ட பாத்தியைக் கிண்டி கிழங்கு எடுக்கும் மாதம். கிழங்கை அவித்து சாப்பிடுவார்கள். அவித்த கிழங்கை வெயிலில் காயப்போட்டு புளுக்கொடியலாகவும் சாப்பிடுவார்கள். அவிக்காமல் காயப்போட்டு ஒடியலாக்கி புட்டு,கூழ் என்பன ஆக்கவும் பயன்படும்.மாசி ஒடியலை பத்திரப்படுத்தி வைத்தல்.

இப்படி இருந்தது ஒரு காலம். அழிவு என்பதே இல்லை என்பது போல் வாழ்ந்து வந்தன கற்பகங்கள்.
********************************************************

இன்று
வடக்கில் செல்லடிகளால் வட்டுக்கள் கழன்ற நிலையில் எத்தனை பனைகள்.
ஆனாலும்.............................
உயிர் போனபின்னும் நெஞ்சை நிமிர்த்தி
எழுந்து நிற்கும் கற்பக தருக்களே !
நீங்கள் கூட ஒருவகையில்
மாவீரர்களே..........
*******************************************************
தீர்க்கதரிசிப்பனைகள்



எங்கள் உறவுகள் வட்டுகளை இழக்கப் போகின்றன
என முன்கூட்டியே அறிந்துதான்,
ஒருவித்திலைப் பனைகளே !
ஒன்றுக்கு பல கெட்டு விட்டு
பல வட்டுப் பனைகளானீரோ!!
********************************************************
இனிமேல்
விழ விழ எழுங்கள் கற்பக தருக்களே ஒன்றல்ல ஓராயிரமாய்.
*********************************************************

12 comments:

Muruganandan M.K. said...

பாட்டியின் வாய்மொழிக்கு உங்கள் விளக்கம் கடந்து போன எமது வாழ்வை நினைந்தூற வைக்கிறது. நன்றி

Muruganandan M.K. said...

"முந்தியடா நாங்கள் பானையோட.." பனையோட என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//நீங்கள் கூட ஒருவகையில்

மாவீரர்களே........//

நல்லா சொன்னீங்க நண்பா

பனையூரான் said...

அன்புள்ள டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி டொக்டர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.

அன்புள்ள ஆ.ஞானசேகரன்

நன்றி

Anonymous said...

Hello Gnanasekaran! Your blog is nice. Vanakkam. Wish you all the best. God is Great.

http://www.thedynamicnature.com

Tech Shankar said...

thanks

பனையூரான் said...

அன்புள்ள Mahmood
வாங்கோ கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோ

பனையூரான் said...

அன்புள்ள தமிழ்நெஞ்சம்
ஏனண்ணா??

பால்குடி said...

பாட்டி சொன்ன வரிகளுக்கு நீங்கள் குடுத்திருக்கும் விளக்கம் பிரமாதம்... பனை, எம்மூரின் ஒரே சாட்சி.

பனையூரான் said...

அன்புள்ள பால்குடி
நன்றி

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

ஊரகன். said...

முடிவில் கொடுத்த வரிதான் என்னை வகுத்தது.
well done.
லேட்டாக வாசித்தாலும் latest ஆக பதிகின்றேன்.