Friday 5 June 2009

எல்லாளனும் துட்டகாமினியும்(துட்டகைமுனு)

இலங்கையில் எல்லாளன் ஆட்சிக்காலத்தை சிங்கள பௌத்தத்திற்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்கும் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கையில் ................

அனுராதபுர ராசதானியை கி.மு 247 இலிருந்து கி.மு 29 வரை கிட்டத்தட்ட 220 ஆண்டுகளில் ஆண்ட 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் எல்லாளனும் ஒருவன். சேனன்,குத்திகன் என்ற தமிழ் மன்னர்களை அசேலன் என்ற சிங்கள மன்னன் தோற்கடித்து சில ஆண்டுகள் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது கி.மு 145 இல் எல்லாளன் உத்தரப்பிரதேசத்திலிருந்து (இலங்கையின் வட பகுதி) படையெடுத்து வந்து அரசைக் கைப்பற்றினான். பாளி நூல்கள் எல்லாளனை சோழன் என்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் அவ்வாறு ஒரு சோழன் இல்லை. உத்திரப் பிரதேசத்திலிருந்து (பூநகரிப் பிரதேசம் ) வந்த தமிழ் மன்னனாகவே கருத முடியும். வவுனிக்குளத்தை இவன் முதலில் புனரமைத்ததன் மூலம் அவன் ஈழ மன்னனாகவே இருக்கமுடியும் எனலாம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எல்லாளன் நீதி தவறாத ஆட்சி நடத்தினான் எனவும்,பெளத்த மதத்தை ஆதரித்தான் எனவும் மகாவம்சம் ஒப்புக்கொள்கிறது. மனு நீதி கண்ட சோழனுக்கு ஒப்பிட்டு பல ஐதீக கதைகள் மூலம் செங்கோலோச்சிய மன்னானாக சித்தரிக்கிறது.

கதை 1:

எல்லாளனின் சயன அறையில் ஆராய்ச்சி மணி ஒன்று இருந்தது. மக்கள் தமது கஷ்டங்களை எந்நேரமும் மன்னனிடம் தெரிவிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. குஞ்சை பாம்பொன்று இரைக்காக விழுங்கிவிட தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்து மன்னைடம் முறையிட மன்னன் அப்பாம்பை பிடித்துவரச்சொல்லி அதன் வயிற்றைக் கிழித்து குஞ்சை மீட்டுக்கொடுத்தான்.

கதை 2:-

வயதான மூதாட்டி ஒருத்தி வெயிலில் காயப்போட்ட அரிசி பருவம் தப்பிய மழையால் பழுதடைந்து விடுகிறது. இதை எல்லாள மன்னனிடம் முறையிட்டபோது வாரம் ஒரு முறை இரவில் மாத்திரம் மழை வேண்டும் என வருணனிடம் பிரார்த்தனை செய்கின்றான்.


இக்கதைகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகங்கள் இருப்பினும் எல்லாளன் ஒரு அறநெறி தவறாத மன்னன் என்பதை கூற முனைகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும்.இவ்வாறாக அனுராதபுரத்தில் எல்லாளனின் ஆட்சி நடந்து கொண்டிருக்க கல்யாணி ராசதானியை களனிதீசனும், உருகுணு ராசதானியை காக்கவண்ணதீசனும் எல்லாளனுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி புரிந்தனர். காக்கவண்ணதீசனின் மனைவி விகாரமாதேவி. இருவரும் மணம் முடித்த கதை சுவரஸ்யமானது தேவையற்ற தன்மை கருதி கூறவில்லை. விகாரமாதேவி ஒரு துவேசம் பிடித்தவளாக காணப்பட்டாள். துட்டகாமினி கருவில் இருந்தபோது சில குரோதமான மசக்கை ஆசைகள் அடியாட்கள் மூலம் அவளுக்காக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒருஆசைதான் எல்லாளனின் முதலாவது படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினை கழுவிய நீரினை அருந்தவேண்டும் என்பது. அந்த ஆசை கோழைத்தனமாக தளபதி ஒருவனை ஒளிந்திருந்து கொன்றதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. கருவிலேயே இன,மத துவேசத்தை ஊட்டுகிறாள் விகாரமாதேவி. பிறந்த பின்பும் காமினி அபயன் என்ற இயற்பெயர் கொண்ட துட்டகாமினி அவ்வாறே வளர்க்கப்படுகிறான். தந்தையின் சொல் கேளாமல் ஒரு அடங்காப்பிடாரியாக இருந்ததால் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். இவனுடைய தம்பி சத்தாதீசன்.

தந்தை ஒரு நாள் சகோதரர்கள் இருவரிடமும் மூன்று விடயங்களை தான் இறந்தபின்பும் கடைப்பிடிக்க வேண்டும் என மகன்மாரிடம் கேட்கிறார். பெளத்த சங்கத்திற்கு பணிவாக இருத்தல் ,சகோதரர்கள் ஒற்றுமையாக இருத்தல்,தமிழரோடு போர் புரியக்கூடாது என்பனவே அம்மூன்று கோரிக்கைக்களுமாகும். மூன்றாவது கோரிக்கையை துட்டகைமுனு ஏற்க மறுத்துவிட்டான்.


தந்தை சிறிது காலத்தின் பின் இறந்துவிட பாரிய சேனைகளோடும் தாய் விகாரமாதேவியோடும் ,500 பிக்குகளோடும் அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கிறான் துட்டகாமினி . பிக்குகள் போரில் பங்கு பற்றியது இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும். நான் அரச போகங்களுக்காக யுத்தத்தில் இறங்கவில்லை பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கிறேன் என்ற இன மத துவேசத்தை கிளப்பி விட்டு சிங்களவரின் பெரும் ஆதரவோடு போர்க்களம் புகுகின்றான். நீதி தவறாத எல்லாளனோடு சண்டையிட துட்டனுக்கு இவ்வாறான காரணத்தையே மக்களுக்கு சொல்ல வேண்டியிருந்தது.

முதலாவது சண்டை மகியங்கனையில்ஆரம்பமாகிறது.துட்டகாமினி வெற்றியடைகிறான்.தொடர்ந்து அம்பகீர்த்தம்,சர்ப்பக்கோட்டை , அந்தர சொப்பம், நாளிசொப்பம் ,கச்சதீர்த்தம், கொத்த நகரம் ,விஜிதபுரம் ஆகிய பிரதேசங்கள் தந்திரத்தாலும்,படைவலிமையாலும் கைப்பற்றப் படுகின்றன. அம்பகீர்த்தத்தை கைப்பற்ற துட்டகாமினிக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. அம்பகீர்த்தத்தின் தளபதி தித்தம்பன் பெண்கள் விடயத்தில் பலவீனமானவன். தனது தாய் மூலம் அவனை தன் வலையில் சிக்கவைத்து வெற்றியடைகிறான். எதிரியினுடனான தாயின் திருமணத்திற்கு துட்டகாமினியின் சம்மதமும் இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மேலும் நான்கு மாதங்கள் தேவைப்பட்டன பலம் வாய்ந்த விஜிதபுரத்தை (பொலநறுவை) கைப்பற்றுவதற்கு. அவ்வெற்றியைத்தொடர்ந்து அனுராதபுரத்தை நோக்கி துட்டனின் படையணி பயணிக்கிறது கிரிலகம்,மகிளநகரம் ஆகிய இடங்களில் எல்லாளனின் படைகளோடு மோதி தோல்வியடைகிறது. இத் தோல்வியைத் தொடர்ந்து துட்டகைமுனு காசபர்வதம் என்ற இடத்தில் பாசறையிட்டு ஓய்வெடுக்க தீர்மானிக்கிறான்.

உருகுணுவிலிருந்து புறப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தது. படையணிகளுக்கு ஒய்வு கொடுத்து மேலும் ஆளணி திரட்டவே ஓய்வெடுக்கும் திட்டத்தை மேற்கொண்டான் துட்டகாமினி. ஒய்வு காலத்தின் பின்னர் காசபர்வத்தில் தீகஜந்து என்ற தளபதியின் தலைமையோடு மோதி துட்டன் வெற்றியடைகிறான்.காசபர்வத்திலிருந்து 18 மைல் தொலைவில் அநுராதபுரம் அமைந்திருந்தது. அடுத்ததாக படைகள் எல்லாளனின் இராசதானியான அனுராதபுரத்தை நோக்கி நகர்கின்றன. எல்லாளன் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்து தானே படையை வழிநடத்தி செல்வதாகத் தீர்மானிக்கிறான்.எல்லாளனின் தலைமையில் தமிழர் படையணி போருக்கு தயாராகியது. அனுராதபுரத்தை அடைந்த துட்டகாமினி ஒரு கபடத்தனமான வேலை பார்க்கிறான். எல்லாளனை தனிச்சமருக்கு அழைக்கிறான். நீதி தவறாத எல்லாளன் தனிச்சமருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் பாரிய வரலாற்றுத் தவறை இழைக்கிறான். 72 வயதான எல்லாளன் இளைஞனான துட்டகாமினியோடு தனியாகப் போரிட துணிந்தது பெரும் தவறாகிறது.

எல்லாளன் மகாபர்வதம் என்ற யானையிலும் துட்டன் கண்டுலன் என்ற யானையிலும் ஏறி தனிச்சமரை ஆரம்பிக்கின்றனர். எல்லாளனின் கை ஓங்கிக் காணப்படுகிறது. துட்டகாமினி கோழைத்தனமாக தனது யானையைச் சீண்டி மகாபர்வதத்தை தாக்குகிறான். கண்டுலன் தனது தந்தங்களால் தாக்க மகாபர்வதம் தரையில் வீழ்கிறது. எல்லாளன் கீழே விழும் தருணத்தில் துட்டன் தனது ஈட்டியால் தாக்கி எல்லாளனை வதம் செய்கிறான். எல்லாளனும் வீரமரணத்தை தழுவிக்கொள்கிறான். தனது வீரத்தோடு தமிழினத்தின் வாழ்க்கையை முன் நிறுத்தியதால் இத் தோல்வி தமிழினத்தின் தோல்வியாகிறது.

**கலாநிதி க.குணராசாவின் ஈழத்தவர் வரலாறு என்ற நூலிலிருந்து****

இலங்கை பாடவிதான திட்டத்தில் மேற்கூறியவற்றில் பல் விடயங்கள் தொட்டுச்செல்லப்பட்டாலும் தமிழர் உரிமை சம்பந்தமான விடயங்கள் விட்டே செல்லப்பட்டுள்ளன.

சில காலங்களுக்கு முன்னர் நான்இந்நூலைப் படித்தபின், எல்லாளனை நாயகனாக காட்டாத எனது பாடசாலைக் கால வரலாற்றாசிரியர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது .

கருத்துக்கள் :-

* தாயை வேசியாக்கி போரில் வெற்றியை பெற்ற ஒருவனை தனது பாட்டுடைத்தலைவனாக மகாநாமதேரர் கருதி பெரும் தவறிழைக்கிறார். மேலும் 24 ஆண்டுகால துட்டகாமினியின் ஆட்சியை 843 செய்யுள்களிலும் 44ஆண்டு கால எல்லாளனின் ஆட்சியை 21 செய்யுள்களிலும் கூறி தமிழினத் துவேசத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

* எல்லாளனை சோழ அரசனாக காட்ட முயன்று இலங்கையில் ஆரம்ப காலத்திலேயே நாகரிகமடைந்த தமிழினம் இல்லை என வருங்கால சந்ததிக்கு கூற முயல்கிறார்.

தன்னை வேறு இனம் ஆள்வது பொறுக்காமலேயே துட்டகாமினி அன்று போரிட்டான். ஆனால் இன்று தமிழினம் தன்னை தானாழ்வது பேரினவாதிகளுக்கு பொறுக்கவில்லை.காலம் செல்லச்செல்ல அறிவு வளர்கிறதா தேய்கிறதா????

3 comments:

Mohamed Haneef said...

//கி.மு 145 இல் எல்லாளன் உத்தரப்பிரதேசத்திலிருந்து (இலங்கையின் வட பகுதி) படையெடுத்து வந்து அரசைக் கைப்பற்றினான்.//

எல்லாளன் எங்கிருந்து வந்தான் என்பது குறித்து மகாவம்சம் கூட கூறாத ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள்.

எல்லாளன் வரலாற்று ரீதியாக ஈழத்து அரசன் எனும் கூற்றுகளும் உள்ளன.

எனவே உங்கள் கூற்றிற்கு ஆதாரம் தேவை.

நன்றி

பனையூரான் said...

அன்புள்ள M.H
ஏன் இவன் வவுனிக்குளத்தை முதலில் புனரமைக்க வேண்டும்?? வருகைக்கு நன்றி நண்பரே.

Asja Prasljevic said...

jesli ti vjerski bosanac?
bullshit
shit
shit
shit
shit
shit
!!!
...........................
i'am asja and i dont know are you a govnar