Friday 28 August 2009

ஒரு வலைப்பதிவராக.........

இன்று வலைப் பதிவுகள் பாவனையும் உருவாக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதம் பயங்கரமாக அதிகரிக்கிறது. பயனுள்ள விடயங்கள் சம்பந்தமான வலைப் பதிவுகள் அதிகரிக்கின்ற அதே அரோக்கியமான சூழலில் மோசமானவையும் உருவாகத்தான் செய்கின்றன. சரி அதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுவோம். சொல்ல வந்த விடயம் என்னவெனில் ஒரு தமிழ் வலைப்பதிவராக எமக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு முன்னே விரிந்து கிடக்கின்றது என்பதுதான் .


அப்பிடி என்ன பொறுப்பு ? சும்மா பீலா விடாதே . வந்தமா வாசிச்சமா எழுதினமா போனோமா எண்டு இல்லாம பொறுப்பு மண்ணாங்கட்டி எண்டெல்லாம் நீங்கள் திட்ட முதல் ஞாபகப்படுத்தி தயவு செய்து திட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.

தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவுகள் என்று பார்க்கும்போது கணிசமான வலைப் பதிவுகள் தமிழில் இருக்கின்றன. மேலும் அவை கணணி, மென்பொருள், இணையம் சம்பந்தமாக இருப்பது சந்தோசப் பட வேண்டிய விடயம். அத்துடன் கவலைப்பட வேண்டிய விடயமும் கூட. ஏனெனில் வேறு துறை சம்பந்தமாக உள்ள வலைப்பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.



பொதுவாக துறை சார்ந்த வலைப்பதிவுகளின் குறைவுக்கு என்ன காரணமாக இருக்கலாம்???



கலை, நாட்டுநடப்பு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என்ற பாணியில் எழுதும் பதிவர்கள் பொதுவாக தங்களுடைய எண்ணங்கள் மற்றவர்களிடம் சென்று அதை அவர்கள் ரசிக்கும்போதே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அறிவியல் ஈடுபாடுடையவர்களிடம் அவ்வாறான மனப்பாங்கு இருப்பதில்லை. தேடலில் ஆர்வமுள்ள இவர்கள் வெளியீடு பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. இது ஒரு குறைபாடு என நான் கூற முனையவில்லை. ஒரு சாதாரண இயல்பு. குறித்த ஓர் துறை சார்ந்த விடயம் எல்லோருக்கும் புரியாது இருப்பதே இதற்குக் காரணமாகும்.



பல்வேறு துறை சார்பாக வலைப் பதிவுகள் தமிழில் உருவாக்குவது நிச்சயமாக ஓர் அரோக்கியமான சூழலை உருவாகும் என்பது உண்மை. இன்றைய உலகைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியே வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கினால் அவர்களின் உயர்கல்வி தாய்மொழியிலேயே இருக்கும். தமிழிலே உயர்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படாமைக்கு போதுமான முதல்கள் எமது மொழியில் இல்லாமையே காரணமாகும். முதல்கள் (source) என கூறுவது அறிவு முதல்களான நூல்கள், இணையத்தளங்கள் என்பன. விஞ்ஞானம் அறிவியல் சம்பந்தமான தமிழ் மொழி நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.



அவ்வாறு தமிழ் மொழியிலேயே அறிவியல் நூல்கள், இணையத்தளங்கள் உருவாக வேண்டுமெனின் முதற்கட்டமாக வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஆம் சகல துறைகளிலும் வலைப் பதிவுகள் உருவாக வேண்டும். இந்த ஆர்வம் அதிகரிக்கும் பட்சத்தில் தரமான அறிவியல் ரீதியான இணையத்தளங்கள், நூல்கள் தமிழிலே வெளிவரலாம். சிறிது கற்பனை செய்து பார்க்கையில் நடக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.



ஆங்கிலத்தில் புலமை பெற்று சிறந்த அறிவியல் விஞ்ஞான நூல்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் இயல்பு என்பது சகலருக்கும் கிட்டிவிடாது. ஒரு இனம் என்பதற்கு அப்பால் குறித்த ஒரு மொழியைப் பேசும் சமூகத்தின் சிந்தனை அறிவு, பொருளாதார வளர்ச்சியை தாய்மொழியிலான உயர்கல்வி உயர்த்தும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெரிய ஒரு விடயத்தை துறைசார் வலைப்பதிவுகளின் உருவாக்கம் ஏற்படுத்தும் என்பது எனது வாதம்.

அந்த வகையில் ..................

நாம் எத்தனையோ ஒரு துறைசார்ந்த திறமையானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கலாம் . அவர்களுக்கு வலைப்பதிவு சார்ந்த நல்ல விடயங்களை தெரிவித்து அவர்களை ஓர் துறைசார் வலைப்பதிவராக உருவாக்க முயற்சித்தால் தமிழ் பேசும் மக்கள் அடையக்கூடிய நன்மைகள் பலவாக எதிர்காலத்தில் இருக்கலாம்.


பி.கு :- அளவுக்கு அதிகமா பெரிய தீர்க்கதரிசி மாதிரி அவித்துத் தள்ளியிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதோ ஒரு வேகத்தில் ஆர்வத்தில் எழுதியதே இப்பதிவு. உறக்கமில்லா இரவொன்றில் உதித்த ஓர் யோசனை இது. தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ .

Monday 24 August 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நெஞ்சில் நின்றவை




வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்று எனது வசிப்பிடமான விடுதிக்குத் திரும்பியபின்னும் இன்னும் அந்த நினைவுகள் அகலவில்லை. என்ன நடந்தது என விலாவரியாக அநேகமானோர் பதிவுகள் போட்டுவிட்டனர் . அதைப் பற்றி பதிவுபோடாமல் அங்கால நகரேலாமக் கிடக்கு. சந்திப்பில் நிகழ்ந்த சம்பவங்களில் நெஞ்சில் நின்றவையை ...................

***இலகுவான தமிழில் அளவான சுருதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சதீஷன் ஆரம்பத்திலேயே ஒட்டிக்கொண்டுவிட்டார். முழுவதுமே தமிழில் தொகுத்தளிக்கும் ஒன்றுகூடல்களில் பங்குபற்றும் வாய்ப்பு (இப்போது வாழும் சூழலில் அந்த வாய்ப்பு எங்கள் பலருக்கு இல்லை. இருக்கிற இடம் அப்பிடி . சரி சரி அது சொந்த ,சோக .................ஏன் சோகக் கதையை இஞ்ச கதைப்பான்?) நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்தது பயங்கர சந்தோசம் .



பிளாக்கர் 10 வது பிறந்தநாள்



***குட்டிப் பதிவர் யசீர். வியக்க வைத்த பதிவர்.



***நிகழ்ச்சியை livestream செய்வதில் முன்னின்று உழைத்து நல்ல ஒரு விடயத்தைச் செய்ததால் எல்லாராலும் பாராட்டப்பட்ட மது.

***யாழ்தேவி, mayalanka திரட்டிகள் பற்றி விளக்கங்கள் தந்த முக்கியமான ஒருவரான மருதமூரான் என் கல்லூரி நண்பன். சந்திப்பின்போதுதான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு முடிந்தபின் கதைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை அவசரமாக சென்றுவிட்டேன் (சூழ்நிலை அப்படி). ஒரு நாள் சந்தித்துப் பேசுவோம்.



***தமிழ் விசைப்பலகை, யாழ்தேவி திரட்டி தலைப்புகளில் இடம் பெற்ற விவாதங்களில் நல்ல பல விடயங்களைப் பகிர்ந்துகொண்ட மூத்தவர்களான மேமன் கவி சேது ஆகியோர் . பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மயூரன் அண்ணாவின் தெளிவான கருத்துப் பிரேரணைகள். நகைச்சுவையான பேச்சுகள். தீர்க்கதரிசனமான சிந்தனைகள்.


*** இலங்கைப் பதிவர்களை ஒன்று சேர்க்கும் திரட்டிக்கு யாழ்தேவி என்ற பெயர் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கிறது என்ற பெரும்பாலான கருத்துக்கள். காரசாரமாக கதைக்கப் பட்ட விடயங்களில் இது முக்கியத்துவமானது.

*** வார்த்தைப் பிரயோகங்களில் வட்டார வழக்குகள் பதிவுகளில் பாவிப்பது ஆரோக்கியமான விடயம் எனக் கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. இலங்கைத் தமிழை சில ஊடகங்கள் மறந்து கஷ்டப்பட்டு style tamil பேசுவது குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சந்திப்புக்கு வந்த பால்குடி வடையையும் , பட்டீசையும் கண்டிட்டு என்னைக் கழற்றி விட்டது . சும்மா சொல்லக் கூடாது எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்தார்.


ஏற்பாட்டுக் குழுவில முக்கியமான தலைகள் நன்றிக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள் .

மறந்துபோயும் சீரியஸா எதையும் பேசக்கூடாது என்ற கொள்கையோடு பேச்சுக்களில் சிரிப்பையூட்டி , நிகழ்ச்சிகளில் அடிக்கடி பின்னூட்டங்களிலும் தூள் கிளப்பினார் அண்ணன் புல்லட் .




அமைதியான அண்ணன் ஆதிரை கல்லூரிக் காலத்திலேயே எனக்கு அண்ணன்.


இன்றைய நிகழ்ச்சி முழுக்க சிங்கம் என விழிக்கப் பட்ட இந்த சிங்கம்




குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அண்ணன் வந்தி



# include
void main()
{
clrscr();
int i;
for(i=1; i= infinitive;i++)
{
cout<<"இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ";
getch();
}

Wednesday 19 August 2009

அம்மாவிடம் ஒரு மன்னிப்பு

ஊரிலிருந்தபோது ஊர்க்கோவிலோடு காலத்தைக் களித்தேன்.

ஊரைவிட்டுப் பிரிந்தபின் கடவுள் எனும் விடயம் கேள்விக்குறியானது .

காரணம் கோவிலை விட்டுப் பிரிந்ததால் அல்ல

நடந்தேறிய அநியாயங்களாலும்

உலக ஒழுங்கில் மனிதனே எல்லாம் என்ற பட்டறிவாலும்

அம்மா தொலைபேசியில் பேசியபோது

மனதில் பட்டதை சொன்னேன்

" அப்பிடி சொல்லாதையடா அப்பு " என்றாள்.

இல்லை அப்பிடித்தான் என்றேன்.

சிறிது நேரத்தின் பின் என் தங்கை

" ஏன் உப்புடிக் கதைக்கிறாய்

அம்மா சரியாக் கவலைப்படுறா " என்றாள்.

திரும்பவும் அம்மாவோடு பேசினேன்.

" நான் சொன்னதை யோசிக்காதே

சும்மா வாய்க்குள்ள வந்ததைக் கதைத்திட்டன் "

அம்மா "ம் "

தங்கச்சி " உண்மையா உனக்கு நம்பிக்கை இல்லையோ ?"

"ம்."

" அம்மா எல்லே சரியா யோசிக்கிறா "

" நான் வீட்ட வந்தாப் பிறகு எதாவது விளங்கப்படுத்தி

நம்பிக்கையை வரப் பண்ணு "

" நம்பிக்கை இல்லாமப் போனா வாறது கஷ்டம்
எண்டு அம்மா சொல்லுறா "

அம்மா என்னை மன்னித்துவிடு

என் நம்பிக்கையீனம் என்னைப் பற்றி உன்னைக்

கவலைப்பட வைத்து விட்டது.

உனக்காக எனக்குள் நம்பிக்கையை வரவழைக்கப் பார்க்கிறேன்

முடியவில்லை மன்னித்துவிடு.

பி.கு:- வரிக்கு வரி வெட்டி எழுதியுள்ளதால் இது கவிதை எழுத வெளிக்கிட்டு சொதப்பியிருக்கிறான் என திட்டாதீங்கோ .இது தொலைபேசி உரையாடலை பெரும் பகுதியாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.

Saturday 15 August 2009

தமிழ் சினிமா செய்த பிழை ஒன்று

இந்தப் பதிவை ஆரம்பிக்க முதல் தமிழ் சினிமாவை அளவுக்கதிகமாக நேசிப்பவர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு.

தமிழ் சினிமா தமிழர் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் அத்தியாயமாக மாறிவிட்டது. சினிமா பார்க்காத இளைஞர்கள் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. கலாச்சார பாரம்பரிய விழாக்களில் கூட சினிமாப் பாடல்கள் ஒலிக்குமளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது . எதிர் காலத்தில் தமிழரின் பாரம்பரிய இசையாக தமிழ்த் திரையிசை மாற்றமடையக் கூடும். இவ்வாறான நிலை ஆரோக்கியமற்றது என்றோ ஆரோக்கியமானது என்றோ நான் கூற முனையவில்லை. திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய நன்மை தீமைகள் என கதைத்தால் கதைத்துக்கொண்டே போகலாம். தமிழ் சினிமா செய்த ஓர் பிழை பற்றியே இப் பதிவு.

தொடருங்கள் ................

பணமுள்ளவன் வீட்டில் வெகுமதியிருக்கும் ஏழை வீட்டில் நிம்மதியிருக்கும் என்பது தமிழ் சினிமாவின் தாரக மந்திரங்களில் ஒன்று. நீண்ட கால மகுட வாசகம். இவ்வாறு தொடர்ந்து ஒரு சமூகத்திற்கு கூறிக்கொண்டிருந்தால் இதன் மூலம் எதாவது நன்மையிருக்கிறதா? இக் கருத்தை காலாகாலமாக கூறும்போது அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை அச்சமூகம் அடையுமா? என்னைபொறுத்தவரை தீமையே அதிகம் என்பேன்.



ஏன்?......................

இந்த எண்ணக்கருவை சினிமா தனது தாரக மந்திரமாகக் கொண்டது ஏழை மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கமே ஒழிய எதுவித தூர நோக்கும் அல்ல. ஏழைகள் எப்போதுமே நிம்மதியாக இருப்பவர்கள் என அடிக்கடி கூறி அவர்களின் புண்பட்ட நெஞ்சை ஆற்றலாம் . ஆனால் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக அமையக்கூடும் என்பது மறுக்கப்படமுடியாது. பொருளாதார ரீதியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு வரும்போது தனது நிம்மதி அற்றுப் போய்விடும் என்ற ஒரு விசச்செடியை இவ்வாறான கருத்துக்கள் நீரூற்றி வளர்த்துவிடும்.

எழையாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம்தானே என்ற கருத்து இன்றைய உலகத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமற்றது எல்லோருக்கும் தெரியும். கவிதைஎழுதுவதற்கும், மேடைகளில் பேசி கைதட்டுப் பெறுவதற்கும் என்றால் இவ்வாறான தலைப்புக்கள் இனிப்பானதாய் இருக்கலாம்.(அன்றாட வாழ்க்கையில் பணத்தின் பங்கு பற்றி நான் இங்கு இம்சையடிப்பது போல இருக்கிறது. அதிகம் அலட்டவில்லை .)

காப்மேயர் "வெற்றிக்கான வழிமுறைகள் " எனும் நூலில் நான் எழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அடிமனதில் எப்போதும் இருப்பதாலேயே ஏழை ஒருவன் இறுதிவரை ஏழையாகவே வாழ்கிறான் என்கிறார். மனம் போல்தான் வாழ்வு என்பது உண்மைதான்.

தமிழ் சினிமாவை மொத்தமாக குறை கூறவில்லை. எத்தனையோ நல்ல பல விடயங்களை மக்களுக்கு சினிமா கூறியிருக்கிறது. அக் கருத்து மூலம் பல சீர்திருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கும், இருந்திருக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.
ஆனாலும் இன்றைய திரையுலகில் இவ்வாறான நிலைப்பாடு குறைவு. சிறிது காலத்திற்கு முன்பே இது அதிகமாகக் காணப்பட்டது.
உங்கள் கருத்துக்களை அவசியம் பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.

Tuesday 11 August 2009

அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி?

அலுவலகங்களில் என்ன தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியும் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அனேகமாக இருக்கும். "அவர் என்னைக் கணக்கே எடுக்கிறார் இல்லை , அவன் என்னை மதிக்கிறானே இல்லை " இது போன்ற வார்த்தைகளை அநேகமான தொழில் புரிபவர்கள் உதிர்ப்பார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்து சக, உயர் ,அடுத்த மட்ட ஊழியர்கள் அனைவரினதும் மதிப்பிற்கும் உரியவராக மாறுவது எப்படி என்பது பற்றி ஒரு சில அனுபவத்தகவல்கள் .


**அலுவலகத்தில் ஒரு நாளின் யாருடானான முதல் சந்திப்பாயினும் காலை வணக்கம் சொல்லத் தவறாதீர்கள்.



**சக மட்ட ஊழியர்களை (வயதில் அதிகமானோரையும் குறைந்தோரையும்)சகோதர உறவு முறை சொல்லி அழையுங்கள்.(அண்ணா,தம்பி ,அக்கா, ....)உங்களது வயதுக்காரரை பெயர் கூறி அழையுங்கள்.(முக்கியம்இவ்விரு தகவல்களும் உங்கள் சக ஊழியருடன் மாத்திரமே உயர்மட்ட அதிகாரிகளுடன் இல்லை)



**உங்களுக்கு கீழுள்ள ஊழியர்களை அவர் வயதில் அதிகமானவராக இருந்தாலும் அலுவலக நடைமுறை காரணமாக பெயர் கூறி அழைக்கும் நிர்ப்பந்தம் இருக்கலாம். அலுவலகத்தில் அதைப்பேணி அலுவலகத்திற்கு வெளியே அவரின் வயதிற்குரிய மதிப்பை அவசியம் கொடுங்கள்.



**கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது "நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் " என்று கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே " இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

**அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது அழைப்பை மேற்கொண்டவர் உடனடியாக பெயரை கூறாது பேச முற்படும்போது "நீங்கள் யார் பேசுகிறீர்கள் ?" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக "உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா?" எனக்கேளுங்கள்.



**புன்னகையை எப்போதுமே அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.



இப்படி நிறைய இருக்கு சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இவ்வளவு விடயங்களுமே காணும் நல்ல பெயர் எடுக்க .



இதற்கு அப்புறமும் உங்கள யாரும் மதிக்கவில்லைஎண்டா பின்னூட்டம் மூலம் சொல்லுங்கோ .

Friday 7 August 2009

நான் ரசித்த ஹரிஷ்ஜெயராஜ்

தமிழ் சினிமா எத்தனையோ திறமையான இசையமைப்பாளர்களை கண்டுவிட்டது. தமிழ் திரையிசையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றங்கள் கொண்டுவந்த M.S. விஸ்வநாதன், இளையாராஜா, A.R. ரஹ்மான் என ஒரு வரிசைப் படுத்தப்பட்ட தொடர் ஒன்று உள்ளது. கர்நாடக சங்கீதத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த திரையிசையை மெல்லிசை என்ற நிலைக்கு கூட்டிச் சென்ற பெருமை M.S.விஸ்வநாதன் அவர்களைச் சாரும். மெல்லிசைக்குள் கிராமத்து இசையை புகுத்தியவர் இளையராஜா. இலத்திரனியல் தொழில்நுட்பத்தை புகுத்தியவர் இசைப்புயல். இவர்கள் எல்லோரும் தமிழ்த் திரையிசையின் கிரீடங்கள். இவர்களைத் தவிர்த்து இன்றைய இசையுலகை நோக்கினால் யுவன், ஹரிஷ், பிரகாஷ் ,......... என நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் ஹரிஷ்ஜெயராஜ் இசையுலகில் புதுமை செய்த ஒருவர்தான். நூற்றுக்கு தொண்ணூறு வீதமான தமிழ் சினிமாப் பாடல்களில் பெண்குரலின் சுருதி(pitch) அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வழமையான பாணியை சில பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார் ஹரிஷ். சுருதி குறைவான பெண்குரல் பாடல்கள் பலவற்றை இசையமைத்திருக்கிறார். முதல் படமான மின்னலேயில் "வசீகரா", வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளே", வாரணமாயிரத்தில் "அனல்மேலே பனித்துளி" போன்ற பாடல்களில் பெண் குரலின் சுருதியை வேறு பாடல்களில் பெண்குரலின் அவதானித்துப் பாருங்கள். மிகவும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பாம்பே ஜெயஸ்ரீயையே இவ்வாறான கீழ்ஸ்தாயிப் பாடல்களுக்கு பாவித்திருப்பார்.
தொட்டிஜெயாவில் வரும் உயிரே என்னுயிரே பாடலில் பெண்குரலின் சுருதி ஆண்குரலைவிடக் குறைவாக இருக்கும். இவ்வாறான புதுமைகளால் மற்றைய இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
ரஹ்மானிடம் பணி புரிந்ததால் இவருடைய இசையில் அனேகமாக ரஹ்மானின் பாதிப்பு காணப்படுகிறது எனவும் பிற மொழிப் பாடல்களை நகல் செய்பவர் போன்ற விமர்சனங்களும் இவர்மீது காணப்படுகின்றது. மேலும் youtube இல் haris jeyaraj எனத் தேடும்போது copycat of haris jeyaraaj என பல காணொளிகள் காணப்படுவது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. எது எவ்வாறு இருப்பினும் மேலும் ஒரு அசாத்தியத் திறமை அநேகமான பாடல்களில் இளமையை வெளிப்படுத்தும் இசை ஹரிஷ் ஜெயராஜ் அவர்களுக்கே சொந்தம்.
விக்கிப்பீடியாவில் ஹரிஷ் தொடர்பான தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்.

Sunday 2 August 2009

பல்கலைக்கழக வாழ்வு


அம்மாவின் கையால் சாப்பிடேலாமல்
கடையிலையும் canteenலையும் சமைக்கிறதச் சாப்பிட்டு
விடிய சாப்பிட்டாப்ப்பிறகு தேத்தண்ணி குடிக்கப் பழகி
அண்டண்டை உடுப்புகளை அண்டண்டு தோய்க்காமல்
சேத்து வச்சு ஒருநாளில் உடுப்போடை சண்டைபிடிச்சு
நாள் தவறாமல் நெட் பார்த்து
facebook ஓடையும் blog ஓடையும் குடும்பம் நடத்தி
தெரியாத விசயங்களை google இடம் கேட்டு
attendence க்காக lecture போய்
lecture நேரம் நக்கல் கவிதை எழுதி
study leave இல மாத்திரம் புத்தகம் தூக்கி
குப்பியால exam paas பண்ணி
party எண்டா யாருக்கும் பயப்படாம தண்ணியடிச்சு
தண்ணியடிச்சப் பிறகு சண்டை பிடிச்சு
அடுத்தநாள் அதை மறந்து
கணக்கில்லாம தூசணம் சொல்லி
விடிய 6.30, 7 ௦௦மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம
களியுதம்மா campus வாழ்க்கை